Published : 24 Sep 2019 10:35 AM
Last Updated : 24 Sep 2019 10:35 AM

பயங்கரவாதத்தில் பாகுபாடு இல்லை; உலகில் எங்கு நடந்தாலும் தீவிரவாதம்தான்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

ஐநாவில் தீவிரவாதம் தடுப்பு தொடர்பான மாநாட்டில் பிரதமர் மோடி பேசிய காட்சி : படம் ஏஎன்ஐ

நியூயார்க்

பயங்கரவாதத்தில் நல்லது, கெட்டது, குறைவானது, அதிகமானது என்ற கருத்தே இல்லை. உலகில் எங்கு தீவிரவாதத் தாக்குதல் நடந்தாலும் அது தீவிரவாதம்தான் என்று பிரதமர் மோடி ஐ.நா.வில் வலியுறுத்திப் பேசினார்.

அமெரிக்காவுக்கு 7 நாட்கள் அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். 74-வது ஐ.நா. பொதுக்கூட்டம் இன்று தொடங்கி வரும் 30-ம் தேதி வரை நடக்கிறது.

முன்னதாக, ஹூஸ்டன் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்யதிருந்த ஹவுடி மோடி நிகழ்ச்சியில் அதிபர் ட்ரம்ப்புடன், பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றார். அதன்பின், ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் சென்ற பிரதமர் மோடி பருவநிலை தொடர்பான மாநாட்டில் நேற்று பங்கேற்றார்.

இந்தக் கூட்டத்துக்குப் பின் "தீவிரவாதம் மற்றும் அதிதீவிர அடிப்படைவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை" குறித்த மாநாடு ஐநாவில் நடந்தது. இந்த மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடியும் பங்கேற்றார்.

இதில் பிரதமர் மோடி பேசியதாவது:

" தீவிரவாதத்துக்கு எதிரான கூட்டமைப்பை நாம் பன்முக அளவில் ஒழுங்கமைக்க வேண்டும். இந்தியா அதில் முன்னோடியாக தங்களின் நட்பு நாடுகளுடன் இணைந்து தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்களை வலுப்படுத்தும் முயற்சிகளைக் கட்டமைத்து வருகிறது.

தீவிரவாதத்தை ஒருபோதும் நாட்டுக்குள் அனுமதிக்கக் கூடாது. தீவிரவாதத்துக்கு நிதி உதவி அளிப்பது, ஆயுதங்கள் உதவி வழங்குவது போன்றவற்றைத் தடுக்க வேண்டும்.

ஐ.நா. தடை வித்துள்ள தீவிரவாதிகள், தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி உதவியைத் தடுத்தல் போன்ற நடவடிக்கைகளில் நாம் அரசியல் செய்வதைத் தவிர்ப்பது அவசியம். ஐ.நா.வின் உத்தரவுகளைத் தீவிரமாகச் செயல்படுத்த முயல வேண்டும்.

தீவிரவாதத் தாக்குதல் உலகில் எங்கு நடந்தாலும் அது தீவிரவாதம்தான். தீவிரவாதத்தில் நல்ல தீவிரவாதம், கெட்ட தீவிரவாதம், சிறிய தாக்குதல், பெரிய தாக்குதல் என்றெல்லாம் இல்லை. தீவிரவாதம் தீவிரவாதம்தான்.

தீவிரவாதத்தைத் தடுக்கும் நடவடிக்கையில் நாம் மேற்கொண்டுள்ள கட்டமைப்பின் தரத்தை மேம்படுத்துதல், உளவுத்துறை தகவல்களைப் பகிர்ந்து, உறவுகளை வலுப்படுத்த வேண்டும். பிராந்திய ரீதியான செயல் திட்டங்களை வகுக்க வேண்டும்.

தீவிரவாதம், அடிப்படைவாதம் ஆகியவற்றை ஊக்கப்படுத்தும் சிந்தனைகளுக்கு மாற்றான ஆயுதம் என்பது முழுமையான வளர்ச்சி, மேம்பாடு, பன்முகத்தன்மை, ஜனநாயகத்தின் மாண்புகள், மதிப்புகளும்தான்.

தீவிரவாதத்தை உலக அளவில் எதிர்க்க ஒற்றுமையும், தயார் நிலையும் தேவை. இதேபோன்ற நிலையை நாம் பருவநிலை மாறுபாட்டைத் தடுப்பதிலும் காட்ட வேண்டும்".

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x