Published : 18 Sep 2019 03:10 PM
Last Updated : 18 Sep 2019 03:10 PM

கடந்த இரண்டு ஆண்டுகளில் பயங்கரவாதம் தொடர்பான 26 மில்லியனுக்கும் அதிகமான உள்ளடக்கங்கள் நீக்கம்: ஃபேஸ்புக்

சான்பிரான்சிஸ்கோ

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அல்கொய்தா போன்ற சர்வதேச பயங்கரவாத குழுக்கள் தொடர்பான 26 மில்லியனுக்கும் அதிகமான உள்ளடக்கங்களை நீக்கியுள்ளதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் நடைபெற்று வரும் தீவிரவாதத் தாக்குதலுக்கு பயங்கரவாதக் குழுக்கள் பெரும்பாலும் சமூக வலைதளங்களையே பயன்படுத்தி வருகின்றன. இதில் நேரடியாக என்றில்லாமல் மறைமுகமாக வெவ்வேறு பெயர்களில் இயங்கியவாறு தனது கருத்துப் பரிமாற்றங்களை, வீடியோ காட்சிகளை ரகசியமாகப் பகிர்ந்துகொள்கின்றன.

நியூஸிலாந்து கிறிஸ்டியன் சர்ச் நகர மசூதித் தாக்குதல் சம்பவம் ஃபேஸ்புக்கில் லைவ்வாக ஒளிபரப்பப்பட்டது ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கு மட்டுமல்ல சமூக வலைதளங்களின் தொழில்நுட்பங்களுக்கே விடுக்கப்பட்ட சவாலாகவும் கருதப்படுகிறது.

அப்போது, துப்பாக்கிச் சூடு லைவ் ஸ்ட்ரீம் ஆனது எப்படி என்று ஃபேஸ்புக், யூடியூப் ஆகியவை பதிலளிக்க வேண்டுமென நியூஸிலாந்து பிரதமர் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

நியூஸிலாந்து கிறிஸ்டியன் சர்ச் நகர மசூதித் தாக்குதலையும் இலங்கை ஈஸ்டர்தின தேவாலயத் தாக்குதலும் பல்வேறு நாடுகளில் மற்றும் பல்வேறு உலக நாடுகளில் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களுக்கும் பயங்கரவாதிகள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தியே சதித் திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தியுள்ளனர்.

உலகில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் சமூக வலைதள நிறுவனமான ஃபேஸ்புக் நிறுவனம் இன்று ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் பயங்கரவாதக் குழுக்களின் ஃபேஸ்புக் கணக்குகள் நீக்கப்பட்டது குறித்து கூறியுள்ளதாவது:

''சமூக வலைதளங்களில் இயங்கிவரும் பயங்கரவாதக் குழுக்கள் பற்றிய புகார்களை யாராவது அளிப்பதற்கு முன்பாகவே 99 சதவீதம் அவற்றின் உள்ளடக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன.

பயங்கரவாதக் குழுக்கள் மட்டுமின்றி அந்த அமைப்புகளைப் பாராட்டும் அல்லது ஆதரிக்கும் நபர்களையும் நாங்கள் இனங்கண்டுள்ளோம். அவர்களின் உள்ளடக்கத்தையும் கணக்குகளையும் அகற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் மனித நிபுணத்துவம் இணைந்த அமைப்புகளின் உதவிகளை நாங்கள் பயன்படுத்திக்கொண்டோம்.

இவர்களின் கணக்குகளைத் தடை செய்வதற்கு பயங்கரவாத சித்தாந்தங்களை நாங்கள் அடிப்படையாகக் கொள்ளவில்லை. அவர்களின் நடத்தைகளை ரகசியமாக கண்காணிப்பதன் வழியே லட்சக்கணக்கான பயனர்கள் பயங்கரவாத முறைகளில் செயல்பட்டு வருவதைக் கண்டுபிடித்தோம். அவர்கள் ஃபேஸ்புக் சேவையின் வழியே செயல்படுவதை நாங்கள் தொடர்ந்து அனுமதிக்கவில்லை. உடனடியாக அவர்கள் கணக்குகள் முடக்கப்பட்டன.

அதன்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அல்கொய்தா போன்ற சர்வதேச பயங்கரவாத குழுக்கள் தொடர்பான 26 மில்லியனுக்கும் அதிகமான உள்ளடக்கங்களை நீக்கியுள்ளோம்.

அதுமட்டுமின்றி 200 க்கும் மேற்பட்ட வெள்ளை மேலாதிக்க அமைப்புகளையும் தடை செய்துள்ளோம். நியூஸிலாந்தின் கிறிஸ்ட் சர்ச்சில் நடந்த துன்பகரமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு முன்னதாகவே இந்த மாற்றங்கள் தொடங்கி செயல்பட்டு வருகின்றன.

பயங்கரவாதக் குழுக்களை இணையத்திலிருந்து நீக்கிவிட்டால் அவர்கள் முடங்கிவிடுவார்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை. அவர்கள் வேறு பெயர்களில் வேறு முறைகளில் மீண்டும் இயங்குவார்கள். அதனைக் கண்டறிய வேண்டுமெனில் நாங்கள் தொடர்ந்து எங்கள் ரகசிய நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவை எங்கள் கண்டறிதல் திறன்களை மேம்படுத்துவதில் முக்கியமான படிகள் என்று நாங்கள் நினைக்கிறோம்.

குறைவான தொழில்நுட்பம்

"வெறுப்பின் தீவிர வெளிப்பாடுகளைப் பரப்புவதற்கு தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாட்டை கிறிஸ்டியன் சர்ச் நகர மசூதித் தாக்குதலில் ஈடுபட்டவர்களின் செயல்கள் நிரூபித்தன. அதே நேரம், கிறிஸ்டியன் சர்ச்சில் தாக்குதல் நடத்திய வீடியோ பதிவு ஃபேஸ்புக்கின் தானியங்கி கண்டறிதல் அமைப்புகளில் முறையாகச் செயல்படவில்லை என்பதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம்.

ஏனெனில் யாரோ வெளியிடும் வன்முறை நிகழ்வுகளின் முதல் நபர் காட்சிகள் சித்தரிக்கும் உள்ளடக்கத்தை நாங்கள் கையாளவோ கட்டுப்படுத்தவோ அப்போது எங்களால் முடியவில்லை. அதற்கான இயந்திரக் கற்றல் தொழில்நுட்பத்தை திறம்பட எங்கள் கணினி முறைகள் போதுமான அளவுக்குத் திறனை அப்போது பெற்றிருக்கவில்லை.

அதனால்தான், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் உள்ள அரசு மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகளுடன் தற்போது இணைந்து செயல்பட்டு வருகிறோம். அவர்களின் துப்பாக்கிப் பயிற்சி திட்டங்களிலிருந்து கேமரா காட்சிகளைப் பெறவும் அதை எங்கள் தொழில்நுட்பங்களைக் கையாளும் திறனையும் நாங்கள் பெற்று வருகிறோம். அத்தகைய வழிமுறைகளில் எங்கள் கணினிகளைப் பயிற்றுவிப்பதற்கான மதிப்புமிக்க தரவை மூல ஆதாரங்களை இந்த நடைமுறை வழங்குகிறது.

மைக்ரோசாஃப்ட், ட்விட்டர், கூகுள் மற்றும் அமேசான் ஆகியவற்றுடன் கூட்டாக ஒன்பது புள்ளிகள் கொண்ட தொழில் திட்டத்தையும் ஃபேஸ்புக் உருவாக்கியுள்ளது. இந்தச் செயல்திட்டம் பயங்கரவாத உள்ளடக்கங்களைப் பரப்புவதற்கு தொழில்நுட்பத்தை துஷ்பிரயோகம் செய்வதற்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டுகிறது.

பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான தனது கொள்கைகளை எவ்வாறு செயல்படுத்துகிறது என்பதை வரும் நவம்பர் மாதத்தில், ஃபேஸ்புக் மேலும் விவரிக்க உள்ளது''.

இவ்வாறு ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x