Published : 05 Sep 2019 07:33 AM
Last Updated : 05 Sep 2019 07:33 AM

அதிகாரத்தை பகிர்ந்து அளிப்பதாக அரசு நம்பிக்கை அளித்து நிறைவேற்றாததால் இலங்கை தமிழர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்: யாழ்ப்பாணம் எம்.பி. சுமந்திரன் சிறப்பு பேட்டி

மீரா ஸ்ரீனிவாசன்

இலங்கையில் கடந்த 2015-ம் ஆண்டு அதிபர் தேர்தல் நடந் தது. அப்போது, வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு (டிஎன்ஏ), அப்போதைய அதிபர் மகிந்த ராஜபக்ச வுக்கு எதிராக கொள்கை முடிவு எடுத்தது.

தற்போது இந்த ஆண்டு இறுதியில் இலங்கையில் மீண்டும் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், யாழ்ப்பாணம் எம்.பி.யும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளரும் மூத்த வழக்கறிஞருமான எம்.ஏ.சுமந்திரன், கொழும்புவில் உள்ள தனது இல்லத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கடந்த 2015-ம் ஆண்டு அதிபர் தேர்தலில், மைத்ரிபால சிறிசேனா - ரணில் விக்ரமசிங்கே கூட்டணிக்கு டிஎன்ஏ ஆதரவளித்தது. தேர்தலுக்குப் பிறகு அரசியலமைப்பு சீர்திருத்த நடவடிக்கைகள் தொடங்கினாலும், தற்போது முடங்கிவிட்டன. அது வெற்றி பெற முடியாமல் போனது ஏன்?

தேர்தலுக்குப் பிறகு சிறிசேனா - ரணில் கூட்டணி அரசு தொடக்கத்தில் வலிமையாக இருந்தது. அதன்பிறகு நிலைமை மாறிவிட்டது. இரு கட்சிகளுக்கு இடையிலும் கருத்து வேறுபாடு அதிகமானது. முக்கியமாக கடந்த 2018-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலின் போது 2 கட்சிகளும் பரஸ்பரம் எதிர்க்கட்சிகளாக பார்த்தன.

அதனால், பல ஆண்டுகளாக நீடிக்கும் அரசியலமைப்பு சீர்திருத்தத்தில் கவனம் செலுத்துவதில் இருந்து பின்வாங்கத் தொடங்கினர். அதற்கு முக்கிய காரணம் அதிபரின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி. அதனால் மற்ற கட்சிகளிடமும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. அவர்களும் பின்வாங்கத் தொடங்கினர்.

வரும் அதிபர் தேர்தலில், கோத்தபய ராஜபக்சவை வேட்பாளராக அறிவித்திருக்கிறார் மகிந்த ராஜபக்ச. ஜனதா விமுக்தி பெரமுனா (ஜேவிபி) சார்பில் அதன் தலைவர் அனுரா குமார திசநாயகே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வரும் அதிபர் தேர்தலில் உங்களுக்கான வாய்ப்பை எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தவிர இலங்கையில் முழு அதிகாரமும் படைத்த ‘நிர்வாக அதிபர்’ முறை ஒழிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்த வேட்பாளருக்கு கடந்த 2015 தேர்தலின் போது ஆதரவு அளித்தோம். அப்போது சிறிசேனா - ரணில் தலைமையிலான 2 கட்சிகளை நம்பினோம். கடந்த 1994-ம் ஆண்டு முதலே, ‘நிர்வாக அதிபர்’ முறையை ஒழிக்க வேண்டும் என்று எண்ணத்துடன் மக்கள் ஆட்சியைத் தேர்ந்தெடுத்து வந்தனர். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

தற்போதுள்ள சூழ்நிலையில் நிர்வாக அதிபர் முறையை ஒழிக்க வாக்குறுதி அளிக்கும் யாராவது ஒரு வேட்பாளரை ஆதரிக்கும் நிலையில் இருக்கிறோம். அனைத்துக் கட்சியினரும் அதிபர் வேட்பாளர்களையும் தேர்தல் அறிக்கைகளையும் அறிவிக்கும் வரை நாங்கள் காத்திருப்போம். இப்போதைக்கு எங்களுக்கு அவசரமில்லை.

அரசியல் தீர்வுக்கான வாய்ப்பாகக் கருதிதான் 2015 தேர்தலில் தேசிய கூட்டணி கட்சிகளுக்கு டிஎன்ஏ ஆதரவளித்தது. புதிய கூட்டணி ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்த மற்ற கட்சித் தலைவர்கள் கூட, தற்போது அதிகாரப்பரவலுக்கு வழிவகுக்கும் 13-வது சட்டத் திருத்த விஷயத்தில் பின்வாங்கி விட்டனரே. இது ஒரு அடி முன்னேறி, 2 அடி சறுக்கும் நிலையா?

இதுபோல் எல்லா நேரங்களிலும் நிகழ்ந்துள்ளது. 13-வது சட்டத் திருத்தம் என்பது ஒரு நீர்நிலை. மாகாண கவுன்சில்கள் உருவாக்கியதன் மூலம் நிர்வாக கட்டமைப்பு முதல் முறையாக மாற்றி அமைக்கப்பட்டது. 13-வது சட்டத் திருத்தம் கொண்டு வந்த போது, தமிழர்கள் அதை நிராகரித்தனர். அது அர்த்தமுள்ளதாக இல்லை என்றனர். இலங்கை போர் முடிந்த பிறகும் கூட 13-வது சட்டத் திருத்தம் அர்த்தமுள்ளதாக, முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. அதற்குப் பதில் அந்த அதிகாரங்களை பறிக்க அதிபர் பதவி வகித்த மகிந்த ராஜபக்ச முயற்சித்தார்.

அதிகாரப்பரவல் நாடு பிளவடைவதற்கு வழிவகுக்கும் என்று தேர்தலுக்குப் பிறகு கூறினர். இலங்கையில் பெரும்பான்மை வாக்குகளை தக்க வைத்துக் கொள்ள அவர்கள் நினைத்தார்கள். அதேநேரத்தில் கணிசமான சிறுபான்மையினர் வாக்குகளும் அத்தியாவசியமாகப் பட்டது. அதற்காக தென் பகுதிகளில் உள்ள தலைவர்கள், தமிழர்களுக்காக ஏதாவது வாக்குறுதிகளை அளிக்கிறார்கள். அவர்களுடைய உறுதிமொழி உண்மையானதாக இல்லை. அந்த வாக்குறுதிகளை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

கடந்த 1994-ம் ஆண்டு சந்திரிகா குமாரதுங்கா தேர்தலில் போட்டியிட்ட போது வித்தியாசமான அணுகுமுறை உருவானது. கூட்டாட்சி குறித்து நிறைய பேசினார். அதனால் 60 சதவீத வாக்குகள் பெற்றார். சந்திரிகாவைப் போலவே ரணில் விக்ரமசிங்கேவும் அப்போது கூட்டாட்சிக்கான உறுதிமொழி அளித்தார். எனினும், 2 முறையும் விடுதலைப் புலிகள் அதை நிராகரித்துவிட்டனர். கூட்டாட்சிக்கு ஒப்புக் கொண்டால், தங்களுடைய தனி நாடு கனவு பலிக்காது என்று நினைத்திருப்பார்கள்.

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழர்களின் குறிப்பிட்ட சவால்களை நீங்கள் பார்க்கும்போது, போருக்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு, பொறுப்புக் கூறல், மறுசீரமைப்பு தொடர்பாக அவர்களின் நிலைமையை எவ்வாறு கருதுகிறீர்கள்?

கடந்த 2009-க்குப் பிறகு 5 ஆண்டுகள் ராஜபக்சே ஆட்சி, போரில் கிடைத்த வெற்றி தமிழர்களை அடக்கி ஆள்வதற்கான உரிமையாக கருதியது. மேலும், உதட்டளவில் வாக்குறுதிகளை அளித்தது. உள்கட்டமைப்பு திட்டங் களை அமல்படுத்தியது. ஆனால், பாதிக் கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவில்லை. அவர்களுடைய உடனடி கவலைகளை தீர்க்கவில்லை.

கடந்த 5 ஆண்டுகளாக நிலைமை மிகவும் சிக்கலாகிவிட்டது. முழுமை யாக இல்லாவிட்டாலும் ராணுவத்தின் கைவசம் இருந்த நிலங்கள் கணிசமாக தமிழர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டன.

பொறுப்புக் கூறல் விஷயத்தில், போரின் போது காணாமல் போனவர்கள் குறித்த அலுவலகம் அமைப்பது உட்பட பல நடவடிக்கைகள் இருந்தன. ஆனால், விசாரணைகளின் முன்னேற்றம் திருப்திகரமாக இல்லை. எனினும் இது ஒரு முக்கியமான ஒன்றாகும். அரசியல் கைதிகள் சிலர் விடுவிக்கப்பட்டனர்.

தமிழர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு எதுவும் நடக்க வில்லை. வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. வடக்கு பகுதியில் வாழும் தமிழர்கள் தங்கள் எதிர்ப்பு குரலை வீதிகளில் வந்து போராட்டமாக வெளிப்படுத்துகின்றனர். அவர்கள் அதிருப்தியில் உள்ளனர். ராஜபக்ச ஆட்சியில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் வாழும் தமிழர்கள் வீதிகளில் போராட்டம் நடத்துவது என்பதெல்லாம் சாத்தியமில்லாத ஒன்று. அவர்கள் பயத்திலும் கண்காணிப்பிலும் இருந்த னர். தமிழர்கள் அதிக உரிமைகளை எதிர்பார்க்க கூடாது என்று ராஜபக்சக்கள் தெளிவுப்படுத்திவிட்டனர். எங்கள் மக்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

இப்போது சர்வதேச நாடுகளின் பங்கு குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் சர்வதேச நாடுகள் முன்வைக்கும் விஷயங்கள் எங்களுக்கு மிகவும் முக்கியமானவை. அந்த ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தால்தான், இலங்கையில் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன என்று நான் கருதுகிறேன். இலங்கையில் அரசியல் தீர்வு காண்பதற்கு இந்தியா ஆர்வமாக உள்ளது. பிரதமர் மோடி இலங்கை வந்தபோது, யாழ்ப்பாணம் வந்தார். யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த முதல் இந்திய பிரதமர் மோடிதான். விரைவில் டிஎன்ஏ தலைவர்கள் மோடியை டெல்லியில் சந்தித்து பேச உள்ளனர்.

இவ்வாறு சுமந்திரன் எம்.பி. கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x