Published : 04 Sep 2019 04:03 PM
Last Updated : 04 Sep 2019 04:03 PM

லண்டனில் வன்முறையில் முடிந்த பிரிட்டன் வாழ் பாகிஸ்தானியர்கள் போராட்டம்: இந்திய தூதரகம் மீது தாக்குதல் 

லண்டன்

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து 'காஷ்மீர் விடுதலைப் பேரணி' என்ற பெயரில் ஆயிரக்கணக்கான பிரிட்டன் வாழ் பாகிஸ்தானியர்கள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்துள்ளது.

இந்திய தூதரகம் மீது கற்களை வீசி தாக்கிய சம்பவத்தில் இருவர் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் குறிதது பிரிட்டிஷ் வெளியுறவுத் துறை அமைச்சர் டொமினிக் ராப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் 20 லட்சத்திற்கும் அதிகமான அளவில் பாகிஸ்தானியர்கள் வசிக்கின்றனர். இவர்கள் பிரிட்டானிய பாகிஸ்தானியர்கள் என்றே அழைக்கப்படுகின்றனர். நாடாளுமன்ற சதுக்கத்தின் அருகே நேற்று ஆயிரக்கணக்கான பிரிட்டன் வாழ் பாகிஸ்தானிய மக்கள் திரண்டனர்.

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 'காஷ்மீர் விடுதலைப் பேரணி' என்ற பெயரில் போராட்டம் நடத்தினர். 'காஷ்மீர் விடுதலைப் பேரணி' என்ற பெயரில் நடைபெற்ற இந்தப் பேரணியில் இந்தியாவுக்கு எதிரான பலகைகளை அசைத்து, 'ஆசாதி' மற்றும் 'காஷ்மீரில் ஷெல்வீச்சை நிறுத்துங்கள்' போன்ற கோஷங்களை எழுப்பினர்.

லண்டன் நாடாளுமன்ற சதுக்கத்தில் அமைதியாகத் தொடங்கிய இந்தப் பேரணி இந்திய தூதரகத்தை நெருங்கும்போது மோதலாக வெடித்தது. இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் கற்களை வீசி இந்திய தூதரகத்தைத் தாக்கினர்.

இந்தத்தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலீஸார் விரட்டி அடித்தனர். வன்முறையில் ஈடுபட்டதாக இரண்டு பிரிட்டன் வாழ் பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டனர்.

பேரணி வன்முறையாக மாறியது குறித்து, லண்டன் மேயர் சாதிக் கான் கூறுகையில், ''போராட்டக்காரர்கள் மோதல்களில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ள முடியாது. இத்தகைய போக்கை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன், இந்த சம்பவத்தின்மீது நடவடிக்கை எடுக்க லண்டன் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது." என்றார்.

"தூதரகத்தின் கதவுகளின்மீது கல்வீசி தாக்கி உடைத்த இருவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்" என்று பெருநகர காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

இப்போராட்டத்தைக் கண்காணிக்க போதுமான அளவில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்ததாக ஸ்காட்லாந்து யார்ட் கூறியுள்ளது.

இங்கிலாந்து எதிர்க்கட்சி தொழிலாளர் கட்சி எம்.பி., லியாம் பைரன், போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக பேரணியில் கலந்துகொண்டார். காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக ஆன்லைன் மனுவை தாக்கல் செய்யும் நிகழ்ச்சியை அவர் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியின்போது அவர் கூறியதாவது: "இன்று ஆயிரக்கணக்கான மக்கள் டவுனிங் தெருவில் இருந்து இந்திய தூதரகம் வரை சென்று போராடியுள்ளனர். இதன்மூலம் 'காஷ்மீர் மக்களை பேசவிடாமல் தடுக்க முடியாது' என்ற ஒரு தெளிவான செய்தியை மோடிக்கு தெரிவித்துள்ளனர்"

இவ்வாறு லியாம் பைரன் தெரிவித்தார்.

பிரிட்டிஷ் வெளியுறவுத் துறை அமைச்சர் டொமினிக் ராப் கண்டனம்

இச்சம்பவம் குறித்து பிரிட்டிஷ் வெளியுறவுத் துறை அமைச்சர் டொமினிக் ராப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

"இவர்களின் பேரணியில் நடந்த வன்முறை கண்டிக்கத்தக்கது. எந்தவொரு வன்முறையும் இழிவானது என்பதுதான் முற்றிலும் சரியானது. இது இந்த நாட்டில் மட்டுமல்ல வேறு எங்கும்கூட தனிப்பட்ட சமூகத்தில்கூட நடத்தக் கூடாது.

ஒரு நம்பிக்கை ஊட்டும் சூழலை, பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழலை உருவாக்குங்கள். காஷ்மீரில் பதட்டங்கள் குறைய வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். அங்கே மனித உரிமைகள் மதிக்கப்பட அனைத்து தரப்பிலிருந்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என்றார்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x