Published : 03 Sep 2019 06:59 PM
Last Updated : 03 Sep 2019 06:59 PM

அமெரிக்காவில் பயங்கரம்: குடும்பத்தினர் அனைவரையும் சுட்டுக் கொன்ற 14 வயது சிறுவன்

பிரதிநிதித்துவ படம்.

மியாமி, ஏ.எப்.பி.

அமெரிக்காவின் அலபாமாவில் 14 வயது சிறுவன் தன் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரையும் சுட்டுக் கொன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சுட்டுக்கொன்றதோடு போலீஸுக்கும் தகவல் அளித்து சரணடைந்துள்ளான்.

எல்க்மோண்ட்டில் உள்ள வீட்டில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியாகினர், மற்ற இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது இறந்தனர்.

இது குறித்து லைம்ஸ்டோன் கவுண்ட்டி ஷெரிப் தெரிவித்த போது, “ 14 வயது சிறுவன் தொலைபேசியில் அழைத்து குடும்பத்தில் உள்ள 5 பேரையும் சுட்டுக் கொன்றதாக கூறினான்.

தற்போது இவனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது 9மிமீ கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தியுள்ளான், திங்கள் நள்ளிரவு இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது” என்றார்.

விசாரணையில் இருக்கும் இந்தப் பையன் யார் என்ற அடையாளம் தெரியப்படுத்தப்படவில்லை, கொலைகளுக்கான காரணமும் உடனடியாகத் தெரியவில்லை.

துப்பாக்கியை எங்கிருந்து வாங்கினான் என்ற விவரங்களும் உடனடியாகத் தெரியவில்லை, விசாரணை முடிந்த பிறகே விவரங்கள் தெரியவரும்.

அமெரிக்காவில் சிறுவர்கள் முதல் பெரியோர் வரை அனைவரும் துப்பாக்கியை வைத்துக் கொண்டு அதை வன்முறைக்காகப் பயன்படுத்தும் குற்றநடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது, இம்மாதிரி பித்துப் பிடித்த துப்பாக்கிக் கலாச்சாரத்துக்கு ஆண்டொன்றுக்கு 36,000 பேர் கொல்லப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

டெக்சாசில் சமீபமாக துப்பாக்கிக் கலாச்சாரத்துக்கு 7 பேர் பலியாகி 22 பேர் காயமடைந்தனர். கடந்த மாதம் இதே டெக்சாஸ் எல் பாசோவில் நடந்த பயங்கர துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் பலியாக 24 பேர் காயமடைந்தனர்.

ஒஹியோ மாகாணத்தின் டேய்டனில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டு 27 பேர் காயமடைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x