Published : 28 Aug 2019 06:03 PM
Last Updated : 28 Aug 2019 06:03 PM

ஐ.நா.கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை தீவிரமாக இம்ரான் கான் எழுப்புவார்: பாக். அமைச்சர் பேச்சு

இஸ்லாமாபாத்


ஐ.நா.வில் அடுத்த மாதம் நடக்கும் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், காஷ்மீர் விவகாரத்தை தீவிரமாக எழுப்புவார் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அரசியலமைப்பில் 370 பிரிவை திரும்பப் பெற்றது. மேலும் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாகவும் மத்திய அரசு பிரித்தது. இந்த மாநிலப் பிரிவு உத்தரவு வரும் அக்டோபர் 31-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

ஆனால், இந்தியாவின் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்துவருகிறது. இந்தியாவுடனான வர்த்தகம், ரயில், பஸ்போக்குவரத்தை ரத்து செய்தது, அடுத்ததாக வான்வழியையும் மூடுவதற்கு ஆலோசித்து வருகிறது. சர்வதேச அளவிலும் இந்த விவகாரத்தை பாகிஸ்தான் கொண்டு சென்றபோதிலும் பெரும்பாலான நாடுகள் இந்த விஷயத்தை ஆதரிக்கவில்லை.

ஆனால், ஐ.நா.வில் செய்யப்பட்ட சிம்லா ஒப்பந்தத்தை மீறிவிட்டது, காஷ்மீரில் முஸ்லிம் மக்கள் மீது அடக்குமுறை ஏவப்படுகிறது, மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்று புகார் தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக ஐ.நா.வுக்கும் பாகிஸ்தான் கடிதம் எழுதியுள்ளது.

இந்தியாவைப் பொருத்தவரை காஷ்மீர்பிரச்சினை உள்நாட்டு விவகாரம், இதில் பாகிஸ்தான் தலையிட வேண்டாம். காஷ்மீர் விவகாரத்திலும் இந்தியா, பாகிஸ்தானுடன் மட்டுமே பேச்சு நடத்தும், மூன்றாவது நாட்டுடன் பேச்சு இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.

இந்நிலையில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி இன்று இஸ்லாமாபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

“வரும் செப்டம்பர் மாதம் ஐ.நா.வில் நடக்கும் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் இம்ரான் கான் காஷ்மீர் விவகாரத்தை தீவிரமாக எழுப்புவார். அப்போது ஐ.நா. தலைவருடன் பேச்சு நடத்தும் இம்ரான் கான், காஷ்மீர் விவகாரம் குறித்துப் பேசுவார்.

ஐ.நா. சபையில் காஷ்மீர் மக்களின் தற்போதைய நிலைமை, அவர்களின் உணர்வுகள், எண்ணங்கள் ஆகியவற்றை பிரதமர் இம்ரான் கான் தீவிரமாக வெளிப்படுத்துவார். ஐ.நா.வில் செய்து கொண்ட சிம்லா ஒப்பந்தத்தை இந்தியா மீறிவிட்டது. காஷ்மீர் விவகாரத்தில் தன்னிச்சையாக நடந்து கொண்ட இந்திய அரசு, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை மீறிவிட்டது.

இருநாடுகளும் சேர்ந்துதான் காஷ்மீர் விவகாரத்தை பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்று கூறியுள்ளது. பிரதமர் மோடி, ஆகஸ்ட் 5-ம் தேதி எடுத்த நடவடிக்கை தன்னிச்சையானதா? அல்லது இருநாடுகளும் சேர்ந்து எடுத்ததா? என்பதை சர்வதேச சமூகத்துக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் பறப்பதற்கு முழுமையாக தடை விதிக்கும் முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை, ஆலோசித்து வருகிறோம்" எனத் தெரிவித்தார்

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x