Published : 26 Aug 2019 03:39 PM
Last Updated : 26 Aug 2019 03:39 PM

திருமணமான சில நிமிடங்களில் சாலைவிபத்தில் உயிரிழந்த ஜோடி - அமெரிக்காவில் சோகம்

திருமணம் முடிந்த சில நிமிடங்களில் தாயின் கண்ணெதிரே சாலை விபத்தில் இளம் ஜோடி பரிதாபமாக உயிரிழந்தது அமெரிக்காவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஹார்லி மோர்கன் (19), ரிஹானன் பவ்டெரக்ஸ் (20) இருவரும் பால்ய நண்பர்கள். பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். பள்ளிப் படிப்பை முடிந்ததும் மனம் விரும்பிய இருவரும் திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுத்தனர்.

இந்த நிலையில் இவர்களுக்கு டெக்ஸாசில் உள்ள ஆரன்ஞ் நகரில் உள்ள தேவாலயத்தில் திருமணம் வெள்ளிக்கிழமை நடந்து முடிந்தது.

திருமணம் முடிந்ததும் மோர்கன் மற்றும் ரிஹானன் தங்களது காரில் ரிஷப்ஷன் நடக்கும் இடத்துக்கு செல்ல முடிவெடுத்தனர். திருமண மையத்தைவிட்டு 5 வரிசை கொண்ட நெடுஞ்சாலையில் கார் இறங்கிய அடுத்த நொடி சாலையில் சென்ற ட்ரெய்லர் லாரி ஒன்று அவர்கள் காரின் மீது வேகமாக மோதியது.

இதில் கார் பல முறை தூக்கி எரியப்பட்டு குட்டிக்கரணம் அடித்து சாலையில் விழுந்து நொறுங்கியது. இதில் காருக்குள்ளே சிக்கி மணமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். திருமணம் முடிந்த சில நிமிடங்களில் தாய் மற்றும் உறவினர் கண் எதிரில் விபத்தில் இருவர் உயிரும் போனது.

கார் மீது மோதிய லாரி தப்பிச் சென்றது. பின்னர் அது பிடிபட்டு ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.

அவர்கள் இருவருக்கும் வாழ்கையில் ஒன்றாக பயணிக்க திருமண ஒப்பந்தத்தை போதித்த அதே பாதிரியாரே அவர்களது இறுதி சடங்கையையும் நடத்தி வைக்கும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

விபத்தை நேரில் பார்த்த மோர்கனின் தாய் பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது, “ நான் எனது மகன் இறந்ததைத் என் கண் முன்னால் பார்த்தேன். என் மகனை காரிலிருந்து வெளியேற்ற நான் பெரிதும் முயற்சித்தேன். என் இரண்டு குழந்தைகளும் என் கண் எதிரிலேயே உயிரிழப்பதை கண்டேன். அந்தக் காட்சி என் வாழ் நாள் முழுவதும் என்னை துயரில் தள்ளும்” என்று அழுதபடி தெரிவித்தார்.

பல கனவுகளுடன் தங்களது இல்லற வாழ்க்கையை தொடரலாம் என்று கனவுக் கண்டு திருமணம் செய்து கொண்ட ஹார்லி, ரிஹானன் வாழ்க்கை திருமணமான சில நிமிடங்களில் முடிவடைந்ததை ஜீரணிக்க முடியவில்லை என அவர்களது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் செய்தியை கேள்விப்பட்ட பொதுமக்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் வருத்தத்தை பதிவு செய்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து ஆரன்ஞ் நகர போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x