Published : 18 Aug 2019 12:46 PM
Last Updated : 18 Aug 2019 12:46 PM

ஜனநாயகம், கல்வியின் நோக்கமே சுதந்திரம்தான்: பூடான் பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி பேச்சு

திம்பு
ஜனநாயகம், கல்வியின் நோக்கம் நம்மை சுதந்திரமாக வைத்திருப்பதுதான். இவை இல்லாமல் மற்றவை எதும் நிறைவு செய்ய முடியாது, இவை இரண்டும், நம்முடைய முழுமையான ஆற்றலை அடைவதற்கும்,சிறப்பாகச் செயல்படுவதற்கும் உதவும் என்று பிரதமர் மோடி பேசினார்.

பிரதமர் மோடி இருநாட்கள் பயணமாக பூடான் நாட்டுக்கு நேற்றுசென்றார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு பிரதமர் லோதே ஷேரிங்கை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். இரு தரப்பு நாடுகளுக்கு இடையே விண்வெளி ஆய்வு, தகவல்தொழில்நுட்பம்,விமானப் போக்குவரத்து, எரிசக்தி உள்ளிட்ட 10 துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

2-வது நாளான இன்று பிரதமர் மோடி திம்பு நகரில் உள்ள ராயல் பல்கலைக்கழகத்தில் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள், மாணவர்கள் என பலர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

ஜனநாயகம், கல்வியின் நோக்கமே நம்மை சுதந்திரமாக வைத்திருப்பதுதான். இவை இல்லாமல் மற்றவை ஏதும் நிறைவு செய்ய முடியாது, இவை இரண்டும், நம்முடைய முழுமையான ஆற்றலை அடைவதற்கும்,சிறப்பாகச் செயல்படுவதற்கும் உதவும்.

நீங்கள் அனைவரும் கடினமாக உழைத்தால்தான், இந்த இமயமலை பகுதியில் உள்ள நாட்டை இன்னும் உயரத்துக்கு கொண்டு செல்ல முடியும்.

இந்த உலகம் இதற்கு முன் இல்லாத வகையில் இன்று ஏராளமான வாய்ப்புகளை வழங்குகிறது. அபரிமிதமான, அதியசத்தக்க விஷயங்களை செய்வதற்கு உங்களுக்கு ஏராளமான சக்தியும், திறமையும் இருக்கிறது, இவை எதிர்கால சந்ததியினர் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

நம்முன் ஏராளமான சவால்கள் இருக்கின்றன. ஒவ்வொரு சவாலுக்கும், இளமையான மனதுடன், உற்சாகமான முறையில் புதிய தீர்வுகளைக் கண்டுபிடித்து, அதைத் தாண்டி வர வேண்டும். எந்தவிதமான கட்டுப்பாடுகளும் உங்களை தடுத்துவிட முடியாது, நான் உங்களுக்குச் சொல்கிறேன், இப்போது நீங்கள் இளமையாக இருப்பதைக் காட்டிலும் எப்போதும் இருந்துவிட முடியாது.

பூடான் மக்கள் கடின உழைப்பாளிகள், முயற்சி செய்து கொண்டே இருப்பவர்கள், உங்களின் 130 கோடி இந்திய நண்பர்கள் சாதாரணமாக உங்களை நோக்கவில்லை, பெருமையாகவும், மகிழ்ச்சியுடனும் பார்க்கிறார்கள். அவர்கள் உங்களுடன் கைகோர்த்து, பலவிஷயங்களைப் பகிர்ந்தும், உங்களிடம் இருந்தும் கற்றவும் ஆவலாக இருக்கிறார்கள்.

வரலாற்று ரீதியாகவே பூடானுக்கும், இந்தியாவுக்கும் தொடர்பு இருந்து வருகிறது. பள்ளிக்கூடம் முதல் விண்வெளி வரை, டிஜிட்டல் பேமெண்ட் முதல் பேரிடர் மேலாண்மை வரை அனைத்திலும் கூட்டுறவுடன் பூடானுடன் இந்தியா செயல்படும்.

திம்பு கிரவுண்ட் ஸ்டேஷனில் தெற்காசிய செயற்கைக்கோள் நிலையத்தை தொடங்கி வைத்து, விண்வெளித்துறையில் உங்களுடன் கைகோர்த்துள்ளோம். இந்த செயற்கைக்கோள் மூலம், தொலைமருத்துவம், தொலைநிலைக் கல்வி, வளங்களைக் கண்டறிதல், வானிலை முன்னறிவிப்பு, தேசிய பேரிடர் குறித்த முன்னெச்சரிக்கை போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும். விரைவில் பூடானும் அதற்குரிய சொந்த செயற்கைக்கோளை அடையும்.

பூடானின் இளம் விஞ்ஞானிகள் இந்தியாவுக்கு வந்து செயற்கைக்கோளை வடிவமைத்து, அதை விரைவில் இந்தியாவின் உதவியால் விண்ணில் செலுத்துவார்கள். அந்தக் காலம் வரும், உங்களில் பலர் விஞ்ஞானிகளாகவும், பொறியாளர்களாகவும், புதிய கண்டுபிடிப்பாளர்களாவும் வருவீர்கள்.

நான் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். தேர்வுகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து நான் எழுதிய புத்தகம் குறித்து பூடான் பிரதமர் அவரின் பேஸ்புக் பக்கத்தில் எழுதி இருந்தது உருக்கமாக இருந்தது. என் ஆழ்மனதை தொட்டுவிட்டது.

அந்த புத்தகத்தில் நான் எழுதியவை அனைத்தும் கடவுள் புத்தர் மக்களுக்கு சொல்லியவற்றை எழுதினேன். குறிப்பாக நேர்மறை அலையின் முக்கியத்துவம், பயத்தை எவ்வாறு வெல்வது, எவ்வாறு வாழ்வது ஆகியவைகுறித்து எழுதினேன்

20-வது நூற்றாண்டில் ஏராளமான இந்தியர்கள் பூடான் நாட்டுக்கு கல்வி கற்க வந்துள்ளார்கள். பூடானில் உள்ள மூத்த குடிமக்கள் பலர் யாராவது ஒரு இந்திய ஆசிரியரிடம் பாடம் கற்று இருப்பார்கள்.

பூடான் மகிழ்சியின் தாத்பரியத்தை புரிந்துவைத்துள்ளது. ஒற்றுமை மூலம்தான் மகிழ்ச்சி வளரும். மகிழ்ச்சிக்காக இந்த உலகம் ஏராளமாகச் செய்ய முடியும். வெறுப்பில்லாத மனநிலையை மகிழ்ச்சிதான் உருவாக்கும். மக்கள் மகிழ்ச்சியாக இருந்தால், ஒற்றுமையாக இருப்பார்கள். ஒற்றுமை எங்கு இருக்கிறதோ அங்கு அமைதி நிலவும்
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இந்த உரைக்குப்பின் பிரதமர் மோடி அங்குள்ள தேசிய நினைவு சோர்டனுக்குச் சென்று மறைந்த மூன்றாவது டர்க் கியால்போவுக்கு அஞ்சலி செலுத்தினார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x