Published : 28 Jul 2015 11:13 am

Updated : 28 Jul 2015 11:14 am

 

Published : 28 Jul 2015 11:13 AM
Last Updated : 28 Jul 2015 11:14 AM

கிரீடத்தை இழக்கும் கிரீஸ் - 13

13

தனது ராணுவ வீரர்கள் மேலும் போர் புரிவதற்கு ஒத்துழைக்காமல் போகவே தன் பிரதிநிதிகளை ஆங்காங்கே நியமித்துவிட்டு தாயகமான மாசி டோனியாவுக்கு அலெக்ஸாண்டர் கிளம்பினார். வழியில் பாபிலோனில் உள்ள மன்னர் இரண்டாம் நெபுகட்நெசாரின் அரண்மனையில் தங்கினார்.

‘‘இங்கு நிறைய நாட்கள் தங்க வேண்டும்’’ என்று பாபிலோனிய மன்னர் வேண்டுகோள் விடுக்க, அலெக்ஸாண்டர் மறுத்தார். தன் வீரர்கள் தாய்நாடு திரும்பு வதில் மிகுந்த ஆர்வம் காட்டி னார்கள் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. எனவே அடுத்த நாளில் கிளம்புவதாகச் சொன்னார்.

அன்று மாலை அரண்மனையில் சிறப்பான களிப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மது பொங்கி வழிந்தது.

மறுநாள் காலையில் அலெக் ஸாண்டருக்குக் கடும் காய்ச்சல். உடலில் வெப்பம் மேலும் மேலும் அதிகமானது. எழுந்திருக்கவே முடியவில்லை. தன் படை வீரர்களைப் பார்த்து ‘‘நீங்கள் மாசிடோனியாவுக்குச் செல்லுங்கள் நான் பிறகு வருகிறேன்’’ என்றார்.

முழுமையாக 11 நாட்கள் படுத்த படுக்கையாக இருந்தார் அலெக்ஸாண்டர். கடுமையான மலேரியா நோய். உடல் உபாதை மேலும் மேலும் அதிகமானது. ஒரு கட்டத்தில் அந்தப் பேராசைக்காரர் மாவீரனின் உயிர் அடங்கியது. (அலெக்ஸாண்டரின் முடிவு குறித்து மாறுபட்ட கருத்துகளும் நிலவுகின்றன. விஷம் கொடுக்கப்பட்டது, டைபாய்ட் நோய் என்றும் சில சரித்திர முடிவுகள் கூறுகின்றன)

32 வயதுக்குள் உலகச் சரித்திரத்தில் தன் முத்திரையை அழுத்தமாகவே பதித்துச் சென்று விட்டார் அலெக்ஸாண்டர்.

தன் பிடிக்குள் கொண்டு வந்த பகுதிகளில் கிரேக்க கலாச் சாரத்தை புகுத்த முயற்சித்தார் அலெக்ஸாண்டர். கிரேக்கம், கிரேக்க மொழி மிகவும் பரவியது. ஆசியாவின் பல பகுதிகளில் படித்த வர்க்கத்தினர் கிரேக்க மொழியைத் தெரிந்து வைத்தி ருப்பதை ஒரு கெளரவமாகக் கருதினர்.

காலம் கடந்தது. ரோமானி யர்கள் கிரேக்கப் பகுதியை ஆக்கிர மித்தார்கள். பல போர்கள் நடைபெற்றன. ரோமானியர் களின் பலத்துக்கு முன்னால் கிரேக்கம் மண்டியிடத்தான் வேண்டியிருந்தது. ஆனால் வேறு சிலவற்றைக் குறிப்பிட வேண்டும். ரோமானியச் சக்ரவர்த்திகளின் ஆட்சியில் கிரேக்கப் பகுதிகள் செழித்தன. கிரேக்க கலாச்சாரத்தை ரோமானியர்கள் மதித்தனர்.

கி.பி. 1453ல் ஒட்டாமன் துருக் கியர் ஆசியாவை ஆக்கிரமித் தார்கள். இவர்கள் கிரீஸையும் தன் பிடிக்குள் கொண்டு வந்தார்கள். இது அந்த நாட்டின் வரலாற்றில் அடுத்த முக்கிய நிகழ்வானது. தொடர்ந்து பல நூற்றாண்டுகளுக்கு துருக்கியர்கள்தான் கிரேக்க நகரங்களையும், துறைமுகங் களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். வளம் மிக்க செழுமையான நகரமாக ஒரு காலத்தில் இருந்த ஏதென்ஸ் மிகவும் ஏழ்மையான ஒரு விவசாய கிராமமாக மாறியது.

பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு (1821ல்) கிரேக்கர்கள் சுதந்திரப் போரைத் தொடங்கினார்கள். பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா ஆகிய நாடுகள் கிரீஸுக்கு உதவ முன்வந்தன. கிரீஸோடு பெரிய அளவில் வணிகம் செய்து வந்தவர்களும் கிரீஸுக்கு உதவ முன்வந்தனர்.

ஒருவழியாக ஒட்டாமன் சாம்ராஜ்யம் சரிந்தது. 1832ல் பவேரியாவைச் சேர்ந்த இளவரசர் ஒட்டோ என்பவர் சுதந்திர கிரீஸ் நாட்டின் முதல் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கிரீஸ் சரித்திரத்தில் அடுத்த முக்கிய நிகழ்வு 1896ல் அறிமுக மானது. அதாவது ஒலிம்பிக்ஸின் மறுபதிப்பு.

இதன் தொடக்க விதை பிரான்சில் எழுந்தது. அந்த நாட்டைச் சேர்ந்த பியர்து கூபர்டின் என்ற விளையாட்டு ரசிகருக்கு ஒரு தீவிர ஆசை எழுந்தது.

'மீண்டும் ஒலிம்பிக் பந்தயங்கள் நடைபெறலாமே. அதில் அரசியல் பகைகளை மனதில் கொள்ளாமல், எல்லா நாடுகளும் கலந்து கொள்ள வேண்டும். இந்த விதத்தில் விளையாட்டு என்பது நாடுகளை இணைக்கும் பாலமாக இருக்க வேண்டும்' என்பதுதான் அந்த ஆசை. இதற்காக உலகெங்கும் தீவிரப் பிரச்சாரம் செய்தார்.

கிரீஸ் நாட்டு அரசுக்கே அந்த எண்ணம் வலுப் பெற்றது. அந்த நாட்டைச் சேர்ந்த பிரபல வணிகரான ஐார்ஜ் அபேராஃப் போன்ற சிலர் தாராளமாக நிதி உதவி செய்ய, கிரீஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸில் முதல் நவீன ஒலிம்பிக்ஸ் தொடங்கியது.

'முதல் சர்வதேச ஒலிம்பிக் விளையாட்டுக்களை ஏதென்ஸ் நகரில் துவங்கியதாக நான் அறிவிக்கிறேன்' இப்படிக் கூறி, ஏப்ரல் 16, 1896 அன்று கிரீஸ் நாட்டு முதலாம் ஜார்ஜ் மன்னர் நவீன ஒலிம்பிக்ஸுக்கு பிள்ளையார் சுழி இட்டார்.

மொத்தம் 14 நாடுகள் கலந்து கொண்டன. அவை ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பல்கேரியா, சிலி, டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், கிரீஸ், ஹங்கேரி, இத்தாலி, ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா.

ஆனால் தடகள வீரர்களில் பெரும்பாலானவர்கள் கிரேக்கர் களாகவே இருந்தார்கள். அந்த ஒலிம்பிக்ஸின் உச்சமாக அது தொடங்கிய பதினோராவது நாள் கருதப்பட்டது.

அன்று நீண்ட தூர நடை ஒட்டப் பந்தயம் நடைபெற்றது. அதைக் கண்டுகளிக்க ஒரு லட்சம் மக்களுக்கு அதிகமாக வந்திருந் தனர். மராத்தன் நகரிலிருந்து ஏதென்ஸ் நகரம் வரை உள்ள சுமார் 25 மைல் தூரத்தைக் கடந்தாக வேண்டும். அதில் வென்றது கிரேக்க தடகள வீரரான ஸ்பிரிடோன் லூயி. உள்ளூர் மக்களின் உற்சாகத்திற்கு கேட்கவா வேண்டும்! ஒரு விளையாட்டைக் காண மிக அதிகம் பேர் கூடியது அதுவரை அன்றைய தினத்தில்தான்.

மிகவும் வெற்றிகரமான விளையாட்டு வீரராக ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த கார்ல்ஸுமேன் விளங்கினார். குத்துச் சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ் இரண்டிலுமாக நான்கு போட்டிகளில் வென்றார் இவர்.

(உலகம் உருளும்)

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

ஜி.எஸ்.எஸ் தொடர்கிரீஸ்வரலாற்றுத் தொடர்ஆவணத் தொடர்கிரீஸ் வரலாறு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author