Published : 13 Aug 2019 11:26 AM
Last Updated : 13 Aug 2019 11:26 AM

ஹாங்காங்கை பள்ளத்தில் தள்ளிவிடாதீர்கள்: கேரி லேம்

ஹாங்காங் நகரத்தைப் பள்ளத்தில் தள்ளிவிடாதீர்கள் என்று போராட்டக்காரர்களிடம் ஹாங்காங் நிர்வாகத் தலைவர் கேரி லேம் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஹாங்காங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரயில் நிலையம் உட்பட பல்வேறு பகுதிகளில் அரசுக்கு எதிராகப் போராட்டக்காரர்கள் அமைதிப் பேரணி சென்றனர். இதில் பல இடங்களில் போராட்டக்காரர்களுக்கு எதிராக போலீஸார் பெட்ரோல் குண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தியதில் போராட்டக்காரர்கள் பலத்த காயம் அடைந்தனர்.

மேலும் போராட்டக்காரர்கள் போல், வேடமணிந்த போலீஸார் கூட்டத்தில் நுழைந்து போராட்டக்காரர்களைத் தாக்கி கைது செய்தனர். இதனைப் பல்வேறு சமூக நல அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஹாங்காங்கில் நடந்த கலவரம் குறித்து அந்நகர நிர்வாகத் தலைவர் கேரி லேம் பத்திரிகையாளர்களிடம் உரையாற்றினார்.

கேரி லேம் பேசும்போது, “ ஹாங்காங் ஆபத்தான சூழ்நிலையில் உள்ளது. ஒரு நிமிடம் நமது நகரம், குடும்பம் எப்படி இருக்கிறது என்று சிந்தியுங்கள். உங்கள் போராட்டம் மூலம் இந்நகரத்தைப் பள்ளத்தில் தள்ளிவிடாதீர்கள். இந்த நகரத்தைப் பள்ளத்தில் தள்ளத்தான் நீங்கள் விரும்புகிறீர்களா?... ஹாங்காங்கைப் பாதுகாப்பாகவும் மற்றும் சட்டம் ஒழுங்குடன் அமைதியாக வழிநடத்துவதே எனது பணியாகும்” என்றார்.

இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்து ஹாங்காங் விடுவிக்கப்பட்ட பின்னர் கடந்த 1997-ம் ஆண்டு சீனாவின் நிர்வாகப் பகுதிகளில் ஒன்றானது. சீனாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஹாங்காங் நாட்டுக்கென தனி கரன்சி, சட்டம், அரசியலமைப்பு எல்லாம் உள்ளன.

குற்றவாளிகளைப் பரிமாற்றம் செய்வதற்கான சட்டத் திருத்த மசோதாவை ஹாங்காங் நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொண்டு வந்தது. இதன்மூலம், ஹாங்காங்கில் குற்ற வழக்குகளில் சிக்குபவர்கள் சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்கப்படுவார்கள். மேலும், இந்தச் சட்டத் திருத்த மசோதாவை எப்படியாவது நிறைவேற்றிட வேண்டும் என்பதில் ஹாங்காங் நிர்வாகத் தலைவர் கேரி லேம் உறுதியாக இருந்தார்.

ஆனால், சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங் எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் கடும் போராட்டத்தில் இறங்கினர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆயிரக்கணக்கானோர் ஹாங்காங் வீதிகளில் போராட்டத்தில் இறங்கினர். அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதனால் ஹாங்காங்கில் பதற்றம் ஏற்பட்டது. உள்நாட்டுக் கலவரம் பெரிதாகும் சூழல் உருவானது.

இதனைத் தொடர்ந்து கைதிகளை சீனாவிடம் ஒப்படைக்கும் சட்டத் திருத்த மசோதா நிறுத்தி வைக்கப்பட்டதாக ஹாங்காங் நிர்வாகத் தலைவர் கேரி லேம் அறிவித்தார். எனினும் குற்றவாளிகளை சீனாவிடம் ஒப்படைக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவை முழுமையாக ரத்து செய்யுமாறு தொடர்ந்து ஹாங்காங்கில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x