Last Updated : 16 Jul, 2015 05:03 PM

 

Published : 16 Jul 2015 05:03 PM
Last Updated : 16 Jul 2015 05:03 PM

பிரான்ஸ் ராணுவம் மீதான தீவிரவாத தாக்குதல் முறியடிப்பு

France foils ‘terror’ attack on military

பிரான்ஸ் ராணுவ முகாமில் புகுந்து அதிகாரிகளின் தலையைத் துண்டித்து காணொளிக் காட்சியாக பதிவு செய்ய இருந்த கொடூரத் 'தீவிரவாத' தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து பிரான்ஸ் உள்துறை அமைச்சர் பெர்னார்ட் காஸினுவே கூறும்போது, "16 முதல் 23 வயதுக்கு உட்பட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரான்ஸ் ராணுவத்துக்கு எதிராக திட்டமிட்டத் தாக்குதலை நடத்த வந்த அவர்களை தீவிரவாத பின்னணி கொண்டவர்களாக கருதுகிறோம்.

தீவிர விசாரணை அவர்களிடம் நடத்தப்படுகிறது. பிரான்ஸ் மக்கள் அவர்களது விருப்பப்படி தலை நிமிர்ந்து வாழ்வதை எந்த பயங்கர சக்திகளாலும் தடுக்க முடியாது. நாங்கள் அனைத்தையும் எதிர்கொள்ள துணிவுடன் உள்ளோம்" என்றார்.

தாக்குதல் சம்பவத்தை காணொளிக் காட்சியாக்க அவர்கள் முயற்சித்ததாக முதற்கட்ட விசாரணையை அடுத்தத் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரான்ஸ் அதிபர் ஹாலந்தே கூறும்போது, "இந்தத் சம்பவம் இந்த வாரத்தில் நடந்தது. நடக்க இருந்த மோசமான தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. ஒவ்வொரு வாரமும் பிரான்ஸில் இது போன்ற ஏதேனும் சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

கைது, முறியடிப்பு ஆகியவை தொடர்ந்து நடக்கின்றன. பாதுகாப்பு அதிகாரிகளின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கது" என்றார்.

பிரான்ஸ் எங்கிலும் உள்ள தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தளங்களில் சுமார் 30 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். பிரான்ஸ் இளைஞர்கள் தீவிரவாதிகளின் கவர்ச்சிகரமான தூண்டுதலுக்கு பலியாகமல் இருக்க, பிரத்யேக உதவி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தொலைபேசி வழியாக அவர்களுக்கு தீவிரவாதத்தின் தவறான நோக்கம் குறித்து விளக்கப்படுகிறது.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சார்லி ஹெப்டோ பத்திரிகை மற்றும் கோஷர் வணிக வளாகத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இதன் பின்னர் பாதுகாப்பு நடவடிக்கை அங்கு உச்சகட்டத்தில் உள்ளது. பயங்கரவாத தாக்குதல் ஏற்படக் கூடும் என்ற உளவுத் துறை எச்சரிக்கையும் பாரிஸுக்கு அவ்வப்போது விடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x