Published : 10 Aug 2019 01:55 PM
Last Updated : 10 Aug 2019 01:55 PM

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து; பிரதமர் மோடி தோல்வியை ஏற்றுக்கொண்டுவிட்டார்: தீவிரவாதி மசூத் அசார் விமர்சனம்

பஹாவல்பூர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்ததன் மூலம், பிரதமர் நரேந்திர மோடி தனது தோல்வியை ஏற்றுக்கொண்டுவிட்டார் என்று ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் விமர்சித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் காஷ்மீரின் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி ஒருவர் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஐ.நா.பாதுகாப்பு சபையில், ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐ.நா. அறிவிக்கக் கோரி பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் கொண்டுவந்தன.

இந்தியா இதற்கு முன் கொண்டுவந்த தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா இந்த முறை எதிர்ப்பு தெரிவிக்காமல் ஆதரித்தது. இதனால், மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐ.நா. அறிவித்தது.

மசூத் அசாரின் அமைப்புக்கு நிதி உதவி செய்வது, ஆதரவு அளிப்பது தடை செய்யப்பட்டது. வெளிநாடுகளில் இருக்கும் அவரின் சொத்துகளை முடக்கவும் ஐ.நா.பரிந்துரைத்தது.

இதற்கிடையே ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புச் சலுகைகளை மத்திய அரசு கடந்த திங்கட்கிழமை ரத்து செய்து, மாநிலத்தை இரண்டாகப் பிரித்து அறிவித்தது. சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக்கையும், சட்டப்பேரவை கொண்ட யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீரையும் அறிவித்தது.

இந்தியாவின் இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்து ஐ.நா.வுக்குக் கடிதம் எழுதியது. சர்வதேச சமூகத்தின் உதவியையும் பாகிஸ்தான் கோரி அமெரிக்கா, இங்கிலாந்து, சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பேசி வருகிறது.


இந்தியாவின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் இந்தியத் தூதரை திருப்பியனுப்பி, வர்த்தக உறவையும் தற்காலிகமாக ரத்து செய்தது. இந்த சூழலில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் கடந்த 7-ம் தேதி 'டெலிகிராம்' ஆப் மூலம் இந்தியாவின் நடவடிக்கையை விமர்சித்து செய்தி வெளியிட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த செய்தி பரான் ஜெப்ரி என்ற பெயரில் வெளியாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அந்தச் செய்தியில், " உண்மையான முஸ்லிம் வீரர்கள் தங்களின் இலக்கை, சேரும் இடத்தை நெருங்கிவிட்டார்கள். அந்த அச்சம் காரணமாக, மோடி அரசு தனது தோல்வியையும், தான் அவமானப்பட்டதையும் ஒப்புக்கொண்டுவிட்டதால்தான் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துள்ளது.

பிரதமர் மோடி செய்த செயல் மிகப்பெரிய இழப்பை தேடித் தரும். இந்தியாவுக்கு எதிரான புனிதப் போர் மற்றும் காஷ்மீருக்கு சுதந்திரம் பெற்றுத் தருதல் போன்றவற்றின் ஒரு பகுதி முடிந்துவிட்டது.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துவிட்டால், இந்து பெருமுதலாளிகளான அம்பானி, மிட்டல், ஜிண்டால் ஆகியோர் ஒட்டுமொத்த காஷ்மீரையும் வாங்கிவிடுவார்கள், சுற்றுலாத் துறை மூலமும், தடை செய்யப்பட்ட செயல்கள் மூலம் பணம் ஈட்டுவார்கள்.

காஷ்மீர் முஸ்லிம்கள் தங்கள் இருப்பை இழந்துவிடுவார்கள் என்று மோடி நினைக்கிறார். ஆனால், பிரதமர் மோடியின் கனவு ஒருபோதும் நிறைவேறாது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x