Published : 07 Aug 2019 05:10 PM
Last Updated : 07 Aug 2019 05:10 PM

பேச்சுவார்த்தைக்கு முன்னர் பொருளாதாரத் தடையை அமெரிக்கா நீக்க வேண்டும்: ஈரான்

அமைதி பேச்சுவார்த்தைக்கு வரவேண்டுமெனில் அமெரிக்கா எங்கள் நாட்டு மீதான பொருளாதாரத் தடைகளை முதலில் நீக்க வேண்டும் என்று ஈரான் மீண்டும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கூறும்போது, " ஒருவேளை அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால் முதலில் அவர் ஈரான் மீதான அனைத்து பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும்.

அதிகப்பட்ச அழுத்தத்தை ஒரு நாட்டுக்கு அளிக்கும்போது ஆட்சியில் மாற்றம் ஏற்படும் என்று ட்ரம்ப் நிர்வாகம் தவறாக நினைத்துவிட்டது” என்று தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமையன்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத்துடன் நடந்த சந்திப்புக்கு பின்னர் ஈரான் அதிபர் இந்த முடிவை தெரிவித்திருக்கிறார். கடந்த வாரம் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும், ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது என்றும் கடுமையாக விமர்சித்து வந்தார்.

இந்நிலையில் ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. மேலும் ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது. இதில் சவுதி அரேபியாவுக்குச் சொந்தமான எண்ணெய்க் கப்பல்கள் மீது கடந்த மாதம் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம் என அமெரிக்கா குற்றம் சாட்டியது. ஆனால் ஈரான் இதனை மறுத்து வந்தது.

இவ்வாறு தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வந்த நிலையில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் ஈரான் மீதும் அதன் முக்கியத் தலைவர்கள் மீதும் புதிய பொருளாதாரத் தடையை ட்ரம்ப் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x