Published : 07 Aug 2019 04:17 PM
Last Updated : 07 Aug 2019 04:17 PM

ஜம்மு காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்புக் குழு அவசரக் கூட்டம்

இஸ்லாமாபாத்

காஷ்மீரின் தற்போதைய நிலைமை குறித்து விவாதிக்க பாகிஸ்தான் தேசிய பாதுகாப்புக் குழுவின் (என்.எஸ்.சி) அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார் பாக். பிரதமர் இம்ரான் கான்.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசியலமைப்பின் 370-வது பிரிவில் இந்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது. மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது.

இந்திய அரசாங்கத்தின் இந்த முடிவை பாகிஸ்தான் கண்டித்தது. இந்தியாவின் 'சட்டவிரோத' மற்றும் 'ஒருதலைப்பட்ச' நடவடிக்கையை எதிர்கொள்ள 'சாத்தியமான அனைத்து முயற்சிகளையும்' மேற்கொள்ளப்போவதாக பாகிஸ்தான் அறிவித்தது.

பிராந்தியத்தில் மாற்றங்கள் ஏற்படுவதை அடுத்து பாகிஸ்தானில் தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க இம்ரான் கான் ஞாயிற்றுக்கிழமை என்எஸ்சியின் முதல் கூட்டத்தைக் கூட்டினார்.

செவ்வாயன்று நாடாளுமன்றத்தில் ராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் நடைபெற்ற கூட்டுக் கூட்டத்திற்குப் பின்னர் என்எஸ்சி, இன்று இரண்டாவது கூட்டத்தைக் கூட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேசிய பாதுகாப்புக் குழு

தேசிய பாதுகாப்புக் குழு (என்எஸ்சி), பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கியமான விஷயங்களை ஒன்றிணைத்து விவாதிக்கும் பாக். அரசின் அதிமுக்கிய ராணுவ உயர் அமைப்பாகும். இது சிவில் மற்றும் ராணுவ உயர் தலைமையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இன்று நடைபெற்றுவரும் கூட்டத்தில், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்த பின்னர் ஏற்பட்டுள்ள சூழலில் நிலைமையைச் சரிசெய்யும் விதமாக ஒரு விரிவான கொள்கையைக் கொண்டுவர தேசிய பாதுகாப்புக் குழு முயற்சித்து வருவதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முப்படைத் தளபதிகள்

என்எஸ்சி கூட்டத்தில் பிரதமர் இம்ரான் கானுடன், பாக். வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி, காஷ்மீர் விவகார அமைச்சரும், பாக். உயர்மட்ட ராணுவ அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

முப்படைத் தளபதிகள் மற்றும் பாகிஸ்தானின் ராணுவ உளவுப் பிரிவான ஐஎஸ்ஐயின் தலைவர் மற்றும் பிற முக்கிய அதிகாரிகளும் என்எஸ்சி கூட்டத்தில் கலந்துகொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x