Published : 02 Aug 2019 04:38 PM
Last Updated : 02 Aug 2019 04:38 PM

சிங்கப்பூரில் சர்ச்சைக்குரிய விளம்பர வீடியோ வெளியிட்டு எதிர்ப்பை சந்தித்த இந்திய வம்சாவளியினர்

யூடியூப்பில் நிகழ்ச்சிகள் நடத்திவரும் சிங்கப்பூரைச் சேர்ந்த இரு இந்திய வம்சாவளியினரின் நிறவெறியை தூண்டும் வகையில் சர்ச்சைக்குரிய வீடியோ பதிவிட்டதால்  கடும் எதிர்ப்பு உருவானதை அடுத்து  அவர்கள் மன்னிப்பு கோரியுள்ளனர். விளம்பர வீடியோயும் நீக்கப்பட்டது.

இதுகுறித்து சேனல் நியூஸ் ஏசியா தெரிவித்துள்ள விவரம்:

பிரீத்தி நாயர் மற்றும் அவரது சகோதர் சுபாஷ் இருவரும் சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர். இவர்களது 'நெட்ஸ் இ பே' எனும் உள்ளூர் மின்னணு கட்டண சேவை நிறுவனத்திற்காக தயாரித்து வெளியிட்ட ராப் இசை வீடியோ நிறவெறியைத் தூண்டுவதாக உள்ளதாக சர்ச்சை எழுந்தது.

நெட்ஸ் ஈ-பே விளம்பரத்தில், சீன நட்சத்திரம் டென்னிஸ் செவ் பழுப்பு நிறத்தில் தோன்றுகிறார் - அவருடன் தோன்றும் இன்னொரு நடிகர் வேறொரு இனத்தை பிரதிபலிக்கும் வகையில் அவரது உண்மையான தோற்றத்தை மறைத்து கருமையாக்கி விட்டுள்ளனர். இதில் இந்திய கதாபாத்திரத்தில் தோன்றும் மலாய் பெண் தலையில் ஸ்கார்ப்  அணிந்திருக்கிறார். மற்றொரு கேரக்டர் சீனப் பெண்ணாக வருபவர் ஆண் உடையில் வருகிறார்.

திங்களன்று சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட இந்த மூன்று நிமிட வீடியோ,  சில  இனங்களை கேலி செய்வதுபோல சித்தரிக்கப் பட்டுள்ளதாக பலரும் கருத்துத் தெரிவித்தனர். விளம்பரத்தில் யாரும் எதுவும் பேசவில்லை. ஆனால் அவர்கள் தோன்றும் விதம்தான் பிரச்சினையாகியுள்ளது.  குறிப்பாக இந்த வீடியோ சீனர்களை குறிவைத்து அவதூறாக செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

சிங்கப்பூர் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கே.சண்முகம் தெரிவிக்கையில்,

''இன்னொரு இனத்தைத் தாக்குவதை ஏற்றுக் கொள்ளமுடியாது. இத்தகைய வீடியோக்கள் எல்லை வகுத்துக் கொள்ள வேண்டும். இந்த குறிப்பிட்ட ராப் வீடியோவில் சைகையாலும் தோற்றத்தாலும் சீன, சிங்கப்பூர் வாசிகளை அவமானப்படுத்தியுள்ளது. சீன சிங்கப்பூர் வாசிகளையும் இங்குள்ள சிறுபான்மையினரையும் ஆத்திரமூட்டும் விதமாக நடுவிரலால் சுட்டிக் காட்டப்படுகிறது.

இந்த ஈபே விளம்பரம் என்ன சொல்கிறது என்று புரியாமல் இல்லை. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுமக்கள் பார்வையிலிருந்து இந்த வீடியோ உடனடியாக அகற்றப்பட வேண்டும். ஒருங்கிணைந்த கலாச்சார உணர்வு நமக்கு தேவை.

நீங்கள் சீனர்களின் நிறத்தில்கூட இருக்கலாம். ஒரு இந்தியரையோ மலாய் இனத்தவரையோ நீங்கள் கடந்து செல்லலாம். இத்தகைய நிற வெறுப்பு மற்ற நாடுகளிலும் நடந்துள்ளன. ஆனால் அங்கு வேறுபட்ட மக்கள் வாழும் இடங்களில் மக்கள் எவ்வாறு நடந்துகொள்கின்றனர் என்பதை கவனிக்க வேண்டும்.  உண்மையில் அதிலிருந்து ஒரு நல்ல அம்சங்களை நாம் பின்பற்ற வேண்டும்''. இவ்வாறு சட்ட மற்றும் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் அரசாங்கமும், சிங்கப்பூர் அரசின் இன்போகாம் ஊடக மேம்பாட்டு ஆணையமும் சர்ச்சைக்குரிய விளம்பரத்தை நீக்க உத்தரவிட்டது. சர்சைக்குரிய விளம்பரம் குறித்து போலீஸ் விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது. 

விளம்பரம் வெளியான ஓரிரு நாட்களிலேயே மிகப் பெரிய எதிர்ப்பை எதிர்கொண்ட விளம்பரத்திற்காக 'நெட் இ பே' நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. விளம்பரத்தை தயாரித்த இந்திய வம்சாவளியின சகோதரர்களும் மன்னிப்பு கோரியுள்ளனர்.

'ப்ரீத்திப்ல்ஸ்' என்று ஒரே பெயரில் இன்ஸ்டாகிராமில் இயங்கிவரும் பிரீத்தி நாயர் மற்றும் அவரது சகோதர் சுபாஷ் ஆகிய இருவரும் இன்று வெளியிட்டுள்ள  ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளதாவது: 

"இந்த வீடியோவுக்காக நாங்கள் வருந்துகிறோம். இந்த மியூசிக் வீடியோவின் பின்னால், உள்ளார்ந்த ரசிகர்கள், கார்ப்போரேஷன் நிறுவனங்கள், சிங்கப்பூரின் பல முகங்கள் எனப் பலரும் உள்ளனர். இந்த வீடியோவின் நோக்கம் யாரையும் புண்படுத்துவதில்லை, அனைவருக்கும் வாய்ப்புகள் வேண்டுமென்பது மட்டும்தான். யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக எங்களை மன்னிக்கவும்''. என பதிவிட்டுள்ளனர்.


 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x