Last Updated : 09 Jul, 2015 10:25 AM

 

Published : 09 Jul 2015 10:25 AM
Last Updated : 09 Jul 2015 10:25 AM

கிரீடத்தை இழக்கும் கிரீஸ் - 1

உலகின் தலைசிறந்த காவியங்கள் என்ற பட்டியலில் நிச்சயம் இடம் பெறக்கூடிய இரண்டு, இலியட் மற்றும் ஒடிஸி. இவற்றை எழுதியவர் ஹோமர். பார்வை இல்லாமலேயே இந்தச் சாதனைகளைப் புரிந்திருக்கிறார்.

மேற்கத்திய இசை ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு பெயர் யானி. அவரது ஒரு டஜனுக்கும் மேற்பட்ட இசை ஆல்பங்கள் தொடர்ந்து விற்பனையில் நம்பர் ஒன் இடத்தில் இருந்தன. இசைத்துறைக்கு வருவதற்கு முன்பேகூட சாதனை படைத்தவர் இவர். தனது 14வது வயதிலேயே தேசிய அளவில் 15 மீட்டர் நீச்சல் போட்டியில் முதலிடம் பெற்றவர்.

மேற்கத்திய தத்துவத்தின் பிதாமகன் என்று இன்றளவும் கருதப்படுபவர் சாக்ரடீஸ். பல நூறாண்டுகளைத் தாண்டியும் இவரது சிந்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

இன்றைய அரசியல் இயங்குதளத்தை அந்தக் காலத்திலேயே தெளிவாகப் பதிவு செய்தவர் ப்ளாட்டோ. ஜனநாயகத்துக்கு எதிரானவர். என்றாலும் சாக்ரடீஸின் சிஷ்யரான இவரது சிந்தனைகள் இன்றளவும் மதிக்கப்படுகின்றன. உலகின் மிகப் பழமையான பல்கலைக்கழகம் என்று கருதப்படுகிறது ப்ளாட்டோ அகாடமி.

ஹிபோக்ரடிஸ் பெரும்புகழ் பெற்ற ஒரு மருத்துவர். நோய்களைப் போக்குவதற்கு மருத்துவம், தத்துவம் இரண்டையுமே பயன்படுத்தியவர்.தன்னையே குணப்படுத்திக்கொள்ளும் ஆற்றல் மனித உடலுக்கு உண்டு என்றவர். இன்றளவும் இந்திய மருத்துவர்கள் கூட இவர் பெயரில்தான் உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார்கள்.

குளியல் அறையிலிருந்து, `யுரேகா, யுரேகா’ என்று கத்தியபடி ஓடிவந்த ஆர்கிமிடிஸின் அறிவியல் விதிகளை மாணவர்கள் அறிவார்கள். இவர் ஒரு தலைசிறந்த வானியல் நிபுணரும்கூட.

நிகோஸ் கஸன்ட்ஜாகிஸ் என்ற எழுத்தாளரின் நூல்கள் மிக அதிகமாக மொழி பெயர்க்கப்பட்டவை. இவர் எழுதிய “தி லாஸ்ட் டெம்டேஷன் ஆப் கிரைஸ்ட்’’ என்ற நூல் மிகவும் மதிக்கப்பட்ட ஒன்று. அதிர்ச்சி அலைகளையும் இது கிளப்பியது. ரோமன் கத்தோலிக்க தேவாலயம் இந்த நூலைத் தடை செய்தது. இவர் இறக்கும்போதுகூட இவரது உடலை நகர எல்லையில் அடக்கம் செய்ய தேவாலய தலைமை அனுமதிக்கவில்லை. தனது கல்லறையில் “நான் எதற்கும் ஆசைப்படவில்லை. நான் எதற்கும் பயப்படவில்லை. நான் சுதந்திரமானவன்’’ என்ற வாக்கியங்கள் பொறிக்கப்பட வேண்டும் என்று உயில் எழுதிவிட்டுதான் இறந்தார்.

அரிஸ்டாட்டில் ஒனாஸிஸ் உலகின் மிகப் பெரும் பணக்காரர்களில் ஒருவராகக் கருதப்பட்டவர். அமெரிக்க அதிபர் கென்னடி இறந்த பிறகு அவரது மனைவி ஜாக்குலினைத் திருமணம் செய்து கொண்டபோது ஒனாஸிஸ் மேலும் அதிகமாக அறியப்பட்டார்.

ஜியாமெட்ரியின் தந்தை என்று கருதப்படும் யூக்லிட் உலகின் தலைசிறந்த கணிதமேதைகளில் ஒருவர்.

ஈஸாப் கதைகளை அறியாதவர் உண்டா? மாபெரும் பலம் கொண்ட ஹெர்குலிஸ் என்ற மாவீரனைக் கேள்விப்படாதவர்கள் உண்டா? டென்னிஸ் ரசிகர்களிடம் பீட் சாம்ப்ராஸ் என்று கூறிப்பாருங்கள். அவர்கள் முகத்தில் ஓர் ஒளி பாயும்.

இதெல்லாம் சரி, நாடுகள் குறித்த தொடரில் எதற்காக பல்வேறு வி.ஐ.பிக்களைப் பற்றிய குறிப்புகள் என்று நீங்கள் கேட்பீர்களாஎன்ன? விடையைத்தான் நீங்கள் இந்நேரம் ஊகித்திருப்பீர்களே. அது சரியானதுதான். மேலே குறிப்பிட்ட அத்தனை சாதனையாளர்களும் கிரீஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள். ஆங்கிலத்துக்கும், அறிவியலுக்கும் எண்ணற்ற வார்த்தைகளை நன்கொடையாக அளித்துள்ள மொழி கிரேக்கம்.

இப்படிப் பலவிதங்களில் மணிமுடி சூட்டிக் கொண்ட கிரீஸ் இன்று உலக அளவில் தலைகுனிந்து நிற்கிறது. பொருளாதார நெருக்கடியில் திவாலாகும் நிலைக்கு அது வந்து விட்டது.

பெருங்காயமாய் கிரீஸ் உலக அரங்கில் மணத்துடன் வலம் வந்த நாட்கள் உண்டு. பெரும் காயத்துடன் இன்று அது தள்ளாடும் காட்சி விசனத்துக்கு உரியதுதான்.

‘ஐரோப்பாவின் நோயாளி’ என்று துருக்கியைத்தான் சொல்வார்கள். ஆனால் இன்றைய நிலையில் கிட்டத்தட்ட கோமா கட்டத்தில் இயங்குகிறது கிரீஸ். அப்படி ஒரு பொருளாதாரச் சிக்கல்.

வங்கிகளுக்கெல்லாம் விடுமுறை. பங்குச் சந்தை மூடப்பட்டது. ஏ.டி.எம்.களை வைத்துக் கொண்டு பணத்தை எடுத்துக் கொள்வதில் கட்டுப்பாடுகள்.

என்ன நடந்தது கிரீஸில்? என்ன நடக்கிறது அந்த நாட்டில்?

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x