Published : 15 Jul 2015 10:52 AM
Last Updated : 15 Jul 2015 10:52 AM

உலக மசாலா: சிக்கன் சர்ச்!

இந்தோனேசியக் காட்டுக்குள் ஒரு தேவாலயம் வித்தியாசமான முறையில் கட்டப்பட்டிருக்கிறது. ஜாவாவின் மத்தியில் உள்ள மேகேலாங் பகுதியில் கெரிஜா அயம் என்ற தேவாலயம் உள்ளது. இதை `சிக்கன் சர்ச்’ என்றும் அழைக்கிறார்கள். கோழியின் வடிவில் இந்தத் தேவாலயம் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டிருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் இந்தோனேசியாவுக்கு வரும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், இந்த சிக்கன் சர்ச்சையும் வந்து பார்த்துச் செல்கிறார்கள்.

வித்தியாசமாகக் கட்டிடத்தை வடிவமைத்திருந்தாலும், இது இன்னும் முழுமை பெறவில்லை. பிரார்த்தனை செய்வதற்கு நீண்ட மேல் தளம். 15 தங்கும் அறைகள் கொண்ட கீழ்த்தளம் கட்டப்பட்டிருக்கிறது. 1989-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ஆலயம் பற்றிச் சரியான தகவல்கள் இல்லை. இது ஒரு தேவாலயம் அல்ல, பிரார்த்தனைக் கூடம் என்றும் கூறப்படுகிறது. சர்ச் சிக்கன், சர்ச் டவ், பிஜியன் ஹில் என்று பல பெயர்களில் அழைக்கப்பட்டு வருகிறது.

ஒரு வித்தியாசமான முயற்சி முழுமை பெறாமல் இருக்கிறதே…

விளக்குகள் வெளிச்சத்தில் ஓவியங்களைக் காட்சிக்கு வைப்பார்கள். ஆனால் ஜான் பாப்பெல்டன் தன்னுடைய ஓவியங்களை இருளில் வைத்து, புகைப்படங்கள் எடுக்கிறார். ஒளிரக்கூடிய வண்ணங்களைப் பயன்படுத்தி, மனித உடல்களில் ஓவியங்களைத் தீட்டுகிறார். பிறகு இருளில் புகைப்படங்கள் எடுக்கிறார். ஓவியமும் புகைப்படமும் இணைந்து புதுமையான படைப்பாக, எல்லோரையும் ஈர்த்துவிடுகின்றன.

20 ஆண்டுகளாகப் புகைப்படக்காரராக இருந்து வந்த பாப்பெல்டனுக்கு, புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தது. இருளில் ஒளிரும் விளக்குகள் அவரை எப்பொழுதுமே ஈர்த்துக்கொண்டிருந்தன. உடனே ஒளிரும் ஓவியங்களை உருவாக்கிவிட்டார். ஓர் ஓவியத்தை முடிக்க மூன்றரை மணி நேரங்களை எடுத்துக்கொள்கிறார்.

அடடா! பிரமாதம் பாப்பெல்டன்!

ஜப்பானிய பெண்களின் மனங்களைக் கவர்ந்த ஹீரோவாக இருக்கிறது ஷபானி என்ற கொரில்லா. கம்பீரமான தோற்றம், பெண் கொரில்லாக்களுடன் காதல், தன் இரு மகன்களுக்கு அன்பான அப்பா என்று பல பொறுப்புகளையும் அழகாகச் செய்கிறது இந்த 18 வயது ஷபானி. நெதர்லாந்தில் பிறந்து, ஆஸ்திரேலியாவில் வளர்ந்தது ஷபானி. அம்மா, அப்பாவுடன் அமைதியான வாழ்க்கை. 2007-ம் ஆண்டு ஜப்பானுக்குக் கொண்டு வரப்பட்டது. இங்கே 3 பெண்களுடன் குடும்பம் நடத்தி, 2 மகன்களுக்குத் தந்தையானது ஷபானி. நொடிக்கு ஒருமுறை அட்டகாசமாக முகபாவனைகளை மாற்றுவதில் ஷபானிக்கு இணை வேறு எதுவும் இல்லை.

மிக நளினமாகவும் புகைப்படத்தில் அழகாகவும் தோற்றம் அளிக்கிறது ஷபானி. இணையதளத்தில் வெளியாகும் ஷபானியின் புகைப்படங்களுக்கு ஏராளமான ஜப்பானிய பெண்கள் விசிறிகளாக இருக்கின்றனர். ஒரு குடும்பத் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்று ஜப்பானிய ஆண்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது, உலகிலேயே மிக அழகான கொரில்லா ஷபானிதான் என்கிறார்கள் ஜப்பானிய பெண்கள். ஒருநாளைக்கு எத்தனை முறை புகைப்படங்கள் எடுத்தாலும் சிறந்த முறையில் ஒத்துழைப்பு தருகிறது ஷபானி. ஹிகாஷியமா விலங்குகள் சாலையில், ஷபானியால் பெண்களின் வருகை அதிகரித்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

அட! என்ன ஓர் ஆளுமை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x