Last Updated : 19 Jun, 2015 10:50 AM

 

Published : 19 Jun 2015 10:50 AM
Last Updated : 19 Jun 2015 10:50 AM

நேச நாடா நேபாளம்? - 5

தந்தையான மன்னரை நோக்கிச் சுட்ட இளவரசன் தீபேந்திராவின் வெறி அடங்கவில்லை. அவனது அடுத்த குறி தனது அத்தைக்கானதாக இருந்தது. பின்னர் தன் மாமனின் மார்பிலும் சுட்டான். மாமன் அப்போது செய்த தவறு துப்பாக்கியோடு இருந்த இளவரசனை தடுக்க முற்பட்டதுதான்.

இதற்கு நடுவே உறவினர் ஒருவர் அங்கிருந்த சோபாவின் கீழ் இரண்டு குழந்தைகளைத் தள்ளி விட்டார். இந்த ஒரே காரணத்தால் அந்தக் குழந்தைகள் உயிர் பிழைத்தனர்.

தீபேந்திராவின் தாக்குதல்கள் ஓயவில்லை. அறைக்குள் செல்வதும் வருவதுமாக மீண்டும் மீண்டும் அங்கு தோன்றி தாக்குதல்களை நடத்தினான்.

நிலைமை கைமீறுவதை அறிந்த மன்னர் தன் காயத்தையும் பொருட்படுத்தாமல் மகனைக் கொல்ல முயன்றார். காரணம் கன்னாபின்னாவென்று கண்ணில் பட்டவர்களையெல்லாம் இளவரசன் கொல்ல முயற்சித்துக் கொண்டிருந்தான்.

இரண்டாவது முறை தன் அறைக்குள் சென்றபோது தீபேந்திரா ஒரு துப்பாக்கியை விருந்தறையின் மூலையில் இருந்த பில்லியர்ட்ஸ் மேஜையில் வீசிவிட்டுச் சென்றிருந்தான். அதைக் கையில் எடுத்தபடிதான் மன்னர் தன் மகனுக்கு குறிவைத்தார்.

இதற்குள் உறவினர் ஒருவர் இளவரசனின் கையில் இருந்த துப்பாக்கியைப் பிடுங்கி விட்டார். அவர் முகத்தில் தோன்றிய வெற்றிப்புன்னகை சீக்கிரமே மறைந்தது. காரணம் இளவரசனின் கையில் வேறொரு துப்பாக்கியும் இருந்ததுதான்.

தாறுமாறாகச் சுட்டுவிட்டு அருகில் இருந்த நந்தவனத்தை நோக்கி நடந்தான் இளவரசன். அவனுக்குப் பின்னாலேயே ஓலமிட்டபடி ஓடினார் அரசி ஐஸ்வர்யா. கூடவே சிறிய இளவரசன் நிரஞ்சனும் ஓடினான். திரும்பிப் பார்த்த தீபேந்திரா இருவரையும் பலமுறை துப்பாக்கியால் சுட்டான். அவர்கள் துடித்து இறந்தனர்.

நந்தவனத்தைச் சுற்றி ஒரு சிறிய நீரோடை இருந்தது. அதன்மேல் ஒரு சிறிய பாலமும் இருந்தது. அந்தப் பாலத்தின் அருகே சென்ற இளவரசன் தீபேந்திரா தன் துப்பாக்கியால் தன்னையே சுட்டுக் கொண்டான்.

ஆக இந்தப் படுகொலைச் சம்பவத்தில் அரச குடும்பத்தைச் சேர்ந்த பலரும் இறந்தனர். மன்னர் பீரேந்திரா, அரசி ஐஸ்வர்யா, அவர்கள் இளைய மகன் நிரஞ்சன், இளவரசி ஸ்ருதி, அரசரின் சகோதரன் தீரேந்திரா, அரசரின் சகோதரிகள் சாந்தி மற்றும் சாரதா, சாராதாவின் கணவர் குமார், மற்றும் இந்தக் கொலைகளைச் செய்தபின் தற்கொலை செய்து கொண்ட இளவரசன் தீபேந்திரா என்று இந்தச் சம்பவத்தில் மொத்தம் 11 பேர் இறந்தனர்.

தற்கொலை செய்து கொண்ட தீபேந்திரா உடனடியாக இறந்துவிடவில்லை. மூன்று நாள் கோமாவில் கிடந்தான்.

நேபாள நாட்டுச் சட்டப்படி மன்னர் இறந்தால் மூத்த இளவரசனுக்குதான் மணிமகுடம். எனவே நினைவிழந்த நிலையில் இருந்தாலும் தீபேந்திராதான் நேபாளத்தின் மன்னர் என்றுஅறிவிக்கப்பட்டது. அவன் சார்பாக அவரது சித்தப்பா ஞானேந்திரா தற்காலிகமாக ஆட்சி செய்வார் என்று அறிவிக்கப்பட்டது.

நினைவு திரும்பாமலேயே தீபேந்திரா இறந்துவிட, அந்த மூன்று நாட்களுக்குப் பிறகு நேபாளத்தில் அரியணை ஏறினார் இளவரசர் ஞானேந்திரா.

ஆனால் மேற்கூறியவாறு அரசு தரப்பில் விவரிக்கப்பட்ட நிகழ்ச்சிகளைப் பலரும் ஏற்கவில்லை. எந்த வி.ஐபி. இறந்தாலுமே சந்தேகக் கேள்விகள் எழுப்பப்படுவது இயல்பு. அதுவும் ராஜவம்சத்தைச் சேர்ந்த இவ்வளவு பேர் ஒரே சமயத்தில் இறந்தது பலவித கேள்விகளை எழுப்பியது. “குடித்திருந்தால்கூட இவ்வளவு கொடூரமான செயலைச் செய்யக் கூடியவர் அல்ல’’ என்றார்கள் இளவரசன் தீபேந்திராவுக்கு நெருக்கமான சிலர்.

பொது மக்கள் இந்தத் திருப்பங்களால் நிலைகுலைந்து போனார்கள். “நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம் என்பதையெல்லாம் தாண்டிய நிலையை அடைந்திருக்கிறோம். அனாதை ஆக்கப்பட்டதாக உணர்கிறோம்’’ என்றே பலரும் கருத்து தெரிவித்தனர்.

படுகொலைகளுக்குப் பின்னால் இருந்தது வேறொரு விஷயம் என்ற கிசுகிசுவும் கிளம்பியது. தேவயானி!

தேவயானி என்ற பெண்ணை இளவரசன் மணக்க விரும்பியதாகவும் அதற்கு ராஜாவும், ராணிவும் ஒத்துக்கொள்ளவில்லை என்றும், அந்தக் கோபமே இவ்வளவு விபரீதங்களுக்கு வித்திட்டது என்றும் கூறப்பட்டது. முக்கியமாக ராணி ஐஸ்வர்யா மிகவும் சக்தி வாய்ந்தவராக இருந்தார் என்றும் “நீ தேவயானியைத் திருமணம் செய்து கொண்டால் அடுத்து உன்னை மன்னனாக முடியாமல் செய்து விடுவேன்’’ என்று அவர் மிரட்டல் விடுத்ததாகவும் செய்திகள் பரவின.

நேபாளத்தின் அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி இப்படிச் செய்வது சாத்தியமல்ல என்றாலும் தன் தாயின் `எதையும் சாதிக்கக் கூடிய தன்மை’ குறித்து இளவரசருக்கு ஒருவித அச்சம் இருந்தது. இதன் விளைவுதான் மதுவினால் தைரியத்தை உண்டாக்கிக் கொண்டு அவர் புரிந்த விபரீதங்கள் என்ற அழுத்தமான சந்தேகம் எழுந்தது.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x