Last Updated : 24 Jun, 2015 11:40 AM

 

Published : 24 Jun 2015 11:40 AM
Last Updated : 24 Jun 2015 11:40 AM

மெர்ஸ் பரவலுக்காக மன்னிப்பு கோரினார் சாம்சங் தலைவர்

தென் கொரியாவில் 'மெர்ஸ்' அதிதீவிரமாக பரவி வருவதற்கு பொறுப்பேற்று பொதுமக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோருவதாக சாம்சங் நிறுவன துணைத் தலைவர் லீ ஜே யோங் தெரிவித்தார்.

நேரலையில் ஒளிபரப்பட்ட நிகழ்ச்சியில் இதனை அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.

தென் கொரியாவில் வேகமாக பரவி வரும் 'மெர்ஸ்' நோய் தாக்கி இதுவரை 27 பேர் பலியாகியுள்ளனர். 179 பேருக்கு நோய் இருப்பது கண்டறியப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களில் 85 பேர் சாம்சங் நிறுவனத்தின் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றவர்கள் அல்லது அங்கு பணியாற்றியவர்களில் உறவினராக உள்ளனர்.

தென் கொரியாவில் செயல்படும் மிகப் பெரிய மருத்துவமனைகளில் ஒன்று சாம்சங். முன்னதாக, இங்கு பணியாற்றிய மருத்துவமனை ஊழியருக்கு 'மெர்ஸ்' இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. ஆனால் பரிசோதனை தகவல் உறுதியாகும் வரை அவர் அதனை பொருட்படுத்தாத தனது பணிகளை தொடர்ந்து கொண்டிருந்தார்.

இவரைத் தொடர்ந்து சாம்சங் மருத்துவமனையில் தொடர்ந்து பலருக்கு 'மெர்ஸ்' பரவியது. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் என பலருக்கு பாதிப்பு ஏற்பட்டதால், 'மெர்ஸ்' நோய் தீவிரமடைந்ததற்கு சாம்சங் நிறுவனமே காரணம் என்று அந்நாட்டினரால் குற்றம்சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து புதிதாக நோயாளிகளை அனுமதிக்க வேண்டாம் என்று மருத்துவமனை நிர்வாகம் கடந்த வாரம் அறிவுறுத்தியது.

இந்த நிலையில், சாம்சங் நிறுவனத்தின் புதிய தலைவர் லீ ஜே யோங் தனது 47-வது பிறந்தநாளை முன்னிட்டு நேரலையில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், "எங்களது மருத்துவமனையால் நோய் பாதிப்பை தடுக்க முடியவில்லை. மெர்ஸ் பரவுவதற்கு காரணமாக இருந்து பொதுமக்களுக்கு வலியையும் துயரத்தையும் ஏற்படுத்திவிட்டோம். இதற்காக நான் தலை தாழ்ந்து மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறினார்.

மெர்ஸ் நோயின் தீவிரத்துக்கு சாம்சங் நிறுவனமே காரணம் என்றும், இதற்கான நிறுவனத்திடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கடுமையாகச் சாடி, தென் கொரியாவில் வெளியாகும் சோசன் என்ற பத்திரிகையில் கடந்த வாரம் தலையங்கம் வெளியானது.

மெர்ஸ் பிரச்சினையால் சாம்சங் நிறுவனத்துக்கு அங்கு சங்கடமான சூழல் ஏற்பட்டுள்ளது. தென் கொரியாவின் மிகப் பெரிய நிறுவனமான சாம்சங் மின்னணு தொழில்நுட்பக் கருவிகள், கப்பல் கட்டுமானம், காப்பீடு, பொழுதுபோக்கு பூங்கா எனப் பல துறைகளில் செயலாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x