Published : 23 May 2014 07:00 PM
Last Updated : 23 May 2014 07:00 PM

மோடி பதவியேற்பு விழா: ராஜபக்சே அழைப்பை நிராகரித்தார் விக்னேஷ்வரன்

நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு வருமாறு இலங்கை அதிபர் ராஜபக்சே விடுத்த அழைப்பினை வடமாகாண முதலமைச்சர் விக்னேஷ்வரன் நிராகரித்துள்ளார்.

இந்திய பிரதமராக நரேந்திர மோடி திங்கட்கிழமை பதவியேற்கவுள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் தன்னுடன் பங்கேற்குமாறு இலங்கை அதிபர் ராஜபக்சே இலங்கை வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இதுகுறித்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் பெரிஸ்க்கு வெள்ளிக்கிழமை வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

"இலங்கையில் வடமாகாண மக்களின் சொல்லொண்ணாத் துயரங்கள், வடமாகாண சபையை இயங்கவிடாது ஏற்படுத்தப்பட்டுள்ள தடைகள் இவற்றின் மத்தியில் இலங்கை அதிபரின் அழைப்பு வரவேற்கத்தக்கதே. எனினும் தங்களின் அன்பான அழைப்பை ஏற்க முடியாதிருப்பதற்காக வருந்துகின்றேன். அவ்வாறு ஏற்காததற்குக் காரணம் இலங்கை அரசுக்கும், வடமாகாணத்திற்குமிடையில் மிக வலுவான உறவு இருப்பதாக இது எடுத்துக்காட்டக் கூடும்.

மேலும் வடமாகாண மக்கள் மத்தியில் தொடர்ந்து நிலை கொண்டிருக்கும் இராணுவத்தினர் மக்களைப் பதட்டத்துடனே வாழ செய்து வருகின்றார்கள். வடமாகாண சபையைப் பொறுத்த வரையில் அதன் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதே உண்மை நிலையாகும்.

இவ்வாறான தங்களின் அழைப்பை நான் ஏற்றுக் கொண்டால் உண்மை நிலையை மறைத்து முகமனுக்காக ஏற்றுக்கொள்வதாக அமையும். எனினும் இந்தியப் பிரதமராகப் பதவியேற்கும் நரேந்திர மோடி அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை நான் ஏற்கனவே அனுப்பியுள்ளேன் என்பதையும் தங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்.

உங்களுடைய அன்பார்ந்த அழைப்பால் பிரதிபலிக்கப்படும் நல்லெண்ணமும் ஒருமைப்பாட்டு உணர்வும் மேலும் தொடருமென்று நான் எதிர்பார்க்கின்றேன். அவ்வாறு தொடர்ந்தால் தான் வடமாகாண மக்களின் தேர்தல் எதிர்பார்ப்புக்கள் நடைமுறைபடுத்தப்படுவதோடு, எமது மக்களின் அடிப்படை உரிமைகளும் பாதுகாக்கப்படும்" என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x