Last Updated : 29 Apr, 2015 10:25 AM

 

Published : 29 Apr 2015 10:25 AM
Last Updated : 29 Apr 2015 10:25 AM

எண்ணற்ற எதிரிகளுடன் ஏமன் - 5

அலி அப்துல்லா ஸலே 1978 தொடங்கி வடக்கு ஏமன் பகுதியை ஆட்சி செய்தார். பிறகு ஒன்றிணைந்த ஏமனுக்கும் அதிபர் ஆனார். சுமார் 35 வருடங்களுக்கு இப்படி இவர் ஆட்சி செய்திருக்கிறார். அதன் பிறகு எழுந்த எதிர்ப்பின் காரணமாக இவர் பதவி விலக வேண்டியிருந்தது.

ஆனால் இவரால் தன் பதவி விலகலை சிறிதும் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. “அதெப்படி இந்த நாடு நான் இல்லாமல் இயங்க முடியும்?’’ என்று வெளிப்படையாகவே இவர் கூறியதுண்டு. இதன் காரணமாக இயல்பான முறையில் பதவி விலக இவர் இடம் கொடுக்கவில்லை.

இது ஒருபுறம் இருக்க, பல அரசியல் பூகம்பங்களை அனுபவித்த ஏமனை ஒரு நிஜமான பூகம்பம் 1982-ல் தாக்கியது. மாபெரும் அழிவை ஏற்படுத்திய பூகம்பம் இது.

வடக்கு ஏமன் நகரமான தமர் என்பதை மையம் கொண்டு வெடித்தது இந்த பூகம்பம். சுமார் 3,000 பேர் இதில் இறந்தனர். 1,500 பேருக்குக் கடும் காயம். சனாவின் தெற்குப் புறம் சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்த பூகம்பத்தின் அதிர்வுகள் இருந்தன. பல கிராமங்கள் மண்ணோடு மண்ணாயின. ஏழு லட்சம் பேர் வீடுகளை இழந்து நின்றனர். இந்த பூகம்பத்தின் பாதிப்பு தெற்கு ஏமன் மற்றும் சவுதி அரேபியாவில்கூட ஓரளவு உணரப்பட்டது.

ஏப்ரல் 1980-ல் வேறொரு பெரும் கலவரத்தைச் சந்தித்தது ஏமன். அதிபர் அப்துல் இஸ்மாயில் பதவியை ராஜிநாமா செய்தார். அதுமட்டுமின்றி தலைமறைவும் ஆனார். அடுத்து அந்தப் பதவிக்கு வந்தவர் அலி நஸீர் முகம்மது. இவர் கொஞ்சம் தாராளமயப் போக்குடன் இருந்தார். அதாவது அண்டை நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைக்கவில்லை.

என்றாலும்கூட 1986-ல் பொது வாழ்க்கைக்கு மீண்டும் வந்து சேர்ந்த அப்துல் இஸ்மாயிலுக்கும், அலி நஸீர் முகம்மதுவுக்கும் கடுமையான பகைமை ஏற்பட்டது. இருதரப்பிலும் தொண்டர்கள் ஆக்ரோஷமாக மோதிக் கொண்டனர். ஒரு மாதத்திற்கும் அதிகமாக நடைபெற்ற இந்த சண்டையில் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தனர். அப்துல் இஸ்மாயில் இறந்தார். அலி நஸீர் முகம்மது பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இவரும், இவரது பல ஆதரவாளர்களும் ஏமன் அரபுக் குடியரசுக்கு குடிபெயர்ந்தனர்.

மே 1988-ல் இரு அரசுகளும் ஓர் உடன்படிக்கைக்கு வந்தன. இரு நாடுகளையும் ஒன்றாக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டனர். எல்லைகளில் உள்ள ராணுவங்களை குறைத்துக் கொள்ளவும், பெட்ரோலிய வளப்பகுதிகளை இணைந்தே கண்டுபிடிக்கவும் சம்மதித்தனர்.

சொல்லப்போனால் இந்த இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளில் பெட்ரோலிய வளம் இருப்பது அறியப்பட்டபின்பே ஒரே நாடாகும் விருப்பம் இவற்றுக்கு அதிகமானது. இதன் மூலம் ஏற்படக்கூடிய பொருளாதார ஆதாயம் இரண்டு நாடுகளுக்குமே அப்போது மிகவும் தேவைப்பட்டது.

மே 1990-ல் இரு ஏமன்களும் ஒன்றாயின. ஏமன் குடியரசு என்று பெயரிடப்பட்ட இதன் அதிபராக (ஏற்கனவே வடக்கு ஏமனை ஆண்ட) ஸலே நியமிக்கப்பட்டார். (இவரைக் குறித்துதான் முன்பே குறிப்பிட்டோமே).

முழுமையான இணைப்புக்கு 30 மாத அவகாசம் அளிக்கப்பட்டது. 1990-ல் பொதுவான அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதன்படி மக்களாட்சியை ஏமன் ஏற்றுக் கொண்டது. சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என்பது தெளிவானது. பல கட்சி அரசியல் அமைப்பும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

1993-ல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதில் 143 தொகுதிகளை பொது மக்கள் காங்கிரஸ் பெற்றது. இது வடக்கு ஏமனில் செல்வாக்குடன் திகழும் கட்சி. 69 தொகுதிகளை ஏமனி சோஷலிஸ்ட் கட்சி பெற்றது. நாட்டின் பெரிய இஸ்லாமியக் கட்சியான இஸ்லா 63 தொகுதிகள் பெற்றது.

நாடாளுமன்றத்தில் வடக்கு கட்சி பலம் மிக்கதாக இருந்தது. இதற்கு முக்கிய காரணம் தெற்கு ஏமனைவிட சுமார் 4 மடங்கு மக்கள்தொகை கொண்டது வடக்கு ஏமன்.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x