Published : 07 May 2014 10:00 AM
Last Updated : 07 May 2014 10:00 AM

முஷாரப் மீதான பயணத் தடையை நீக்க பாகிஸ்தான் அரசு எதிர்ப்பு

பாகிஸ்தான் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் வெளிநாடு செல்வதற்கான தடையை நீக்குவதற்கு பாகிஸ்தான் அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

முஷாரப் மீது தேசத் துரோக வழக்கு உள்ளிட்ட 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை பஞ்சாப் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் முகமது அலி மசார், ஷாநவாஸ் தாரிக் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.

இந்நிலையில் முஷாரப் கடந்த மாதம் தாக்கல் செய்த மனுவில், “வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இருந்து எனது பெயரை நீக்க வேண்டும். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள எனது தாயை சந்திக்க துபாய் செல்ல அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டிருந்தார்.

இது தொடர்பாக பாகிஸ்தான் அரசின் பதிலைப் பெற்று மே 7-ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு அரசு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் அரசின் பதில் மனு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் “நான்கு வழக்குகளில் முஷாரப் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்பதால் அவரது பெயரை ‘வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டவர்கள்’ பட்டியலில் இருந்து நீக்க இயலாது. மரண தண்டனைக்கு வாய்ப்புள்ள வழக்குகளை முஷாரப் சந்தித்து வருகிறார். அவர் வெளிநாடு செல்ல அனுமதித்தால் அவர் தலைமறைவாக வாய்ப்புள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

‘வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டவர்கள்’ பட்டியலில் முஷாரப்பின் பெயர் கடந்த ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி சேர்க்கப்பட்டது. நீதிமன்ற வழக்குகளில் அவர் ஆஜராவதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேற முடியாது.

கடந்த 2007 நவம்பரில் பாகிஸ்தான் அரசியலமைப்புச் சட்டத்தை முடக்கியது மற்றும் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்ததற்காக முஷாரப் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தவிர முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ 2007-ல் கொல்லப்பட்டது, பலுசிஸ்தான் பழங்குடியின தலைவர் அக்பர் பக்டி 2006-ல் கொல்லப்பட்டது, லால் மசூதியில் ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டது தொடர்பான வழக்குகளில் முஷாரப் குற்றவாளியாக சேர்க்கப் பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x