Last Updated : 21 Apr, 2015 10:57 AM

 

Published : 21 Apr 2015 10:57 AM
Last Updated : 21 Apr 2015 10:57 AM

சீறும் சீனா -10

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக விளங்கியவர் ஹு யாவோ பாங் என்பவர். இவர் சாமான்யர்களிடமும் நட்புடன் பழகினார். மாணவர்களின் அன்பைப் பெற்றிருந்தார்.

இவர் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். (சீன வரலாற்றில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் பதவியிலிருந்து நீக்கப்படும்போது காரணங்களை எல்லாம் கூற மாட்டார்கள்). இதைத் தொடர்ந்து அவர் இறந்தார். உடல் நலம் குன்றித்தான் இறந்தார் என்று கூறப்பட்டாலும் வேறு கருத்துகளும் பரவின.

அவர் ஜனநாயகக் காவலராக மாணவர்களால் மதிக்கப்பட்டவர். ஊழலுக்கு எதிராகத் தாங்கள் செய்ய இருக்கும் போராட்டத்துக்கு அவர் தலைமை தாங்குவார் என்று வேறு மாணவர்கள் நினைத்தனர். (கூடவே டெங் ஜியோபிங் தங்கள் போராட்டத்துக்கு எதிரானவர் என்றும் கருதினார்கள்).

இந்த நிலையில் ஹு பதவி நீக்கப்பட்டு பின்னர் இறந்தும் விடவும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரது இறுதி உர்வலத்துக்கு தியானென்மென் சதுக்கத்துக்கு ஆயிரக்கணக்கில் குவிந்தனர். பெய்ஜிங் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

‘’மாணவர்களின் போக்கு நாட்டின் அமைதிக்கு எதிரானது. எனவே இது கண்டிக்கத்தக்கது’’ என்றார் டெங் ஜியோபிங். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் சாலைகளில் ஊர்வலம் சென்றார்கள். ‘’பத்திரிகை சுதந்திரம் வேண்டும். எங்கள் பிரதிநிதிகளை கட்சியின் தலையீடு இல்லாமல் நாங்களே தேர்ந்தெடுக்கும் சூழல் வேண்டும்’’ என்றெல்லாம் கோஷமிட்டனர். இதற்கு அரசு ஒப்புக் கொள்ளும்வரை தியானென்மென் சதுக்கத்தில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தனர்.

அரசு அடக்குமுறை சட்டத்தை அறிவித்தது. பின்னர் ராணுவ அடக்குமுறையை நாடியது. பீரங்கிகளோடு சென்றது ராணுவம். கலவரத்தில் பலர் உயிரிழந்தனர். இறந்தவர்களின் எண்ணிக்கையை வெளியிட அரசு மறுத்தது. செஞ்சிலுவை அதிகாரி ஒருவர் 2,600 மாணவர்கள் இறந்ததாகக் குறிப்பிட்டார்.

சீனர்கள் கல்விக்கு அதிக மரியாதை அளிப்பவர்கள். ஏதேனும் எழுதப்பட்டிருக்கும் எந்தக் காகிதத்தையும் அவர்கள் அசுத்தப்படுத்த மாட்டார்கள். அலட்சியமாகக் குப்பைக் கூடையில் தூக்கியெறியவும் மாட்டார்கள். தேவைப்படாத (எழுதப்பட்ட) துண்டுக் காகிதங்களை எல்லாம் சேர்த்து எடுத்துக் கொண்டுபோய் கோயிலிலோ அல்லது பள்ளிக்கூடத்திலோ எரிப்பார்கள்.

ஆனால் ஆட்சியாளர்கள் கல்விக்கூடங்களுக்கு மரியாதை கொடுக்கத் தயங்குவது சீன வரலாறில் அதற்குப் பிறகும் அடிக்கடி நடந்திருக்கிறது. காரணம் மாணவர்களும் ஆசிரியர்களும் ஆட்சி செய்பவர்களை கேள்விகள் கேட்டுவிடுவார்களோ என்ற பயம்.

‘’யாருமே தியானென்மென் சதுக்கத்தில் கொல்லப்பட வில்லை’’ என்று அறிக்கை விட்டது அரசு. டெக்னிகலாக இதில் தப்பில்லைதான்! அடக்கு முறைகளெல்லாம் அந்தச் சதுக்கத் துக்கு வந்து சேரும் பாதை களில்தான் ஏவிவிடப்பட்டன.

ராணுவ சட்டத்தை எதிர்த்த காரணத்தால் ஜாவோ ஜியாங் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அரசின் கொள்கைகளை ஆதரித்த (அதுவரை ஷாங்காயின் மேயராக இருந்த) ஜியாங் ஜெமின் சீன ஜனாதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார்.

சீன அரசின் இமேஜ் உலகில் வேகமாகச் சரிந்தது. அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் உடனடியாக ஓர் அறிவிப்பை வெளியிட்டன. ‘’இனி சீனாவுக்கு நாங்கள் ஆயுத விற்பனை செய்ய மாட்டோம்’’. இன்றுவரை அந்தத் தடை நீடிக்கிறது. என்றாலும் அடக்குமுறைகளை சீனா நீக்கிவிடவில்லை. ஜனநாயகம் அங்கே மலரவில்லை. இப்போதும் அங்கு கம்யூனிஸ்ட் ஆட்சிதான் எல்லாமே. ஒரு மாகாணத்திலிருந்து இன்னொரு மாகாணத்துக்குச் செல்லக் கூட சில வருடங்களுக்கு முன்பு வரை தடை இருந்தது. ஒவ்வொரு வருடமும் ஜூன் 4-ம் தேதி யாரும் தியானென்மென் சதுக்கத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்திவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது சீன அரசு.

தற்போதைய சீன அரசு குறித்த உங்கள் எண்ணம் என்ன? ‘’ஒரே கட்சியின் பிடியில் உள்ள சர்வாதிகார அரசு’’ என்பதா? இது உண்மைதான். ஆனால் முழு உண்மை அல்ல.

நமக்குப் பிரதமர்போல அவர்களுக்கு அதிபர். அதாவது அதிபருக்குதான் அங்கு மிக அதிக அதிகாரங்கள்.

சீனாவுக்கும் ஓர் அரசியலமைப்புச் சட்டம் உண்டு. அதன்படி 45 வயதான யாரும் அதிபர் ஆகலாம். இருமுறைக்கு மேல் யாரும் அதிபராக இருக்க முடியாது. அவ்வளவுதான். அதாவது கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்தான் அதிபராக இருக்க முடியும் என்று அரசியலமைப்புச் சட்டம் கூறவில்லை.

ஆனால் அங்கு சாமர்த்தியமாக ஜனநாயகம் நசுக்கப்படுகிறது.

தேசிய மக்கள் பேரவை என்கிற அமைப்புதான் அதிபரைத் தேர்ந்தெடுக்கும். ஒவ்வொரு தேர்தலிலும் ஒரே ஒருவரைத்தான் இந்தப் பேரவை பரிந்துரைக்கும். கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் சுட்டிக்காட்டும் நபரைத்தான் பேரவை இப்படிப் பரிந்துரைக்கும். அந்த ஒருவர்தான் எந்தப் போட்டியும் இல்லாமல் அதிபர் ஆவார்.

கட்சியைப் பொருத்தவரை முன்பு அதன் தலைவர்தான் பல சிறப்புகள் பெற்றவராக இருந்தார். 1982-ல் இருந்து அதன் பொதுச் செயலாளர் பதவிதான் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. அவர்தான் நாட்டை வழிநடத்திச் செல்லும் வல்லமை படைத்தவர்.

சீனாவின் ஆட்சியமைப்பில் நிறைய வியப்பான விஷயங்கள் உண்டு. அடுத்த மூன்று பாராக்களில் ஒவ்வொரு வாக்கியத்தின் இறுதியிலும் (முற்றுப் புள்ளிக்குப் பதிலாக) ஆச்சரியக் குறியைப் போட்டாலும் அது சரியாகத்தான் இருக்கும் எனுமளவுக்கு வியப்புகள்.

சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு என்று ஒரு ராணுவம் உண்டு. அதாவது அரசு ராணுவம், கட்சி ராணுவம் என்று இரண்டு பிரிவுகள்.

அரசின் வசமுள்ள தேசியப் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு குறைவான அதிகாரங்கள்தான்.

சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர வேறு கட்சிகளும் உண்டு. ஆனால் இவை கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்ப்பதே இல்லை. கலை, கல்வி, மருத்துவம் ஆகிய துறைகளில்தான் இவை கவனம் செலுத்துகின்றன. இவை அரசுக்கு ஆலோசனை கூறுவதோடு அடங்கிவிட வேண்டும்.

ஒருபுறம் சந்தைப் பொருளா தாரம். இன்னொரு புறம் அதிகார மையமும், ஒரே கட்சி ஆட்சியும் கொண்ட அரசு. சீனா மிகவும் வித்தியாசமான நாடுதானே.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x