Published : 21 Apr 2015 11:09 AM
Last Updated : 21 Apr 2015 11:09 AM

உலக மசாலா: வீட்டு வேலை செய்யும் மாயா பெடல்!

ஏழ்மையான நாடுகளில் ஒன்று குவாதமாலா. சைக்கிளின் பாகங்களை வைத்து கால்களால் மிதிக்கக்கூடிய பல இயந்திரங்களை உருவாக்கியிருக்கிறார்கள். பைக் மெஷின் என்பதை ‘bicimaquinas’ என்று அழைக்கிறார்கள். ’மாயா பெடல்’ என்ற நிறுவனம் 1997-ம் ஆண்டு இந்தத் திட்டத்தை ஆரம்பித்தது.

இன்று எரிபொருள், மின்சாரமின்றி மனித சக்தியை மட்டும் பயன்படுத்தி ஏராளமான இயந்திரங்களை உருவாக்கியிருக்கிறது. சைக்கிளில் அமர்ந்து கொண்டு பெடலை மிதித்தால் கிணற்றில் இருந்து நீர் கொட்டுகிறது, தானியங்களை மாவாக்குகிறது, சோளத்திலிருந்து சோள விதைகளைத் தனியே பிரிக்கிறது, பழத்தைச் சாறாக மாற்றுகிறது, துணிகளைத் துவைக்கிறது… இன்னும் பல வேலைகளைச் செய்கிறது.

2500 ரூபாய்க்கு கிடைக்கும் இந்த மாயா பெடலை வைத்து 19 வகையான வேலைகளைச் செய்ய முடியும். இவற்றைப் பராமரிப்பதும் பழுதுகளை நீக்குவதும் எளிது. ஆரம்பத்தில் மின்சாரம் இல்லாத இந்த இயந்திரத்தை வாங்குவதற்கு மக்கள் தயங்கினர். இன்று மாயா பெடல் இல்லாத வீடுகளே இல்லை. அதிலும் பெண்களுக்கு இந்த இயந்திரம் மிகவும் பயனுடையதாக இருக்கிறது.

ஒரு மாயா பெடலை வைத்து, ஏதாவது தொழில் செய்து சம்பாதித்து விடலாம். ஒருமுறை வாங்கிவிட்டால் பிறகு செலவு செய்ய வேண்டிய அவசியமே இல்லை. சுற்றுச்சூழலுக்கும் நல்லது. மனிதர்கள் நிலக்கடலையின் தோலை நீக்குவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தை விட நான்கில் ஒரு பங்கு நேரம்தான் இந்த இயந்திரம் கேட்கிறது. இதுவரை 4.500 மாயா பெடல்கள் தங்கள் வேலைகளைச் சிரத்தையுடன் செய்து வருகின்றன.

அடடா! அற்புதமான கண்டுபிடிப்பு!

கடந்த 1911-ம் ஆண்டு தென் துருவத்தில் கால் பதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கேப்டன் ராபர்ட் ஃபல்கன் ஸ்காட் தன் குழுவினருடன் கிளம்பினார். தென் துருவத்தை அவர் அடைந்தபோது, ரோல்ட் அமுட்சென் ஏற்கெனவே தென் துருவத்துக்கு வந்துவிட்டுச் சென்ற செய்தி கிடைத்தது. ஸ்காட் குழுவினர் ஏமாற்றம் அடைந்து, அங்கிருந்து கிளம்பினர். மோசமான வானிலை காரணமாக ஸ்காட் குழுவினர் மடிந்து போனார்கள்.

அவர்கள் எடுத்த அரிய புகைப்படங்கள் தற்போது ஏலத்துக்கு வந்திருக்கின்றன. ஸ்காட் ஆராய்ச்சி மையத்தில் கூட இல்லாத, இதுவரை யாரும் பார்க்காத அரிய புகைப்படங்கள் இவை. நூறு ஆண்டுகளைக் கடந்த பின்னரும் நல்ல நிலையில் புகைப்படங்கள் இருக்கின்றன. ஸ்காட் குழுவினர் தென் துருவத்தில் இருந்து கிளம்பும்போது எடுக்கப்பட்டவை இந்தப் புகைப்படங்கள். 33 லட்சம் ரூபாய்க்கு ஏலத்துக்கு வந்திருக்கும் புகைப்படங்களை வாங்குவதற்கு ஏராளமானவர்கள் காத்திருக்கிறார்கள்.

ஸ்காட் குழுவினரின் அர்ப்பணிப்புக்கு எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம்!

ஜப்பானியர்களுக்குப் பூனைகள் என்றால் மிகவும் விருப்பம். பூனைகளை வளர்ப்பதுடன், பூனையின் பாதங்களைப் பிடித்து வாசனையை நுகரவும் செய்கிறார்கள். இவர்களின் ஆர்வத்தைப் பயன்படுத்த நினைத்தது க்ரீம் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று. கை தோலை மென்மையாக்குவதற்குப் பயன்படுத்தும் க்ரீமில் பூனை பாதத்தின் வாசனையைக் கொண்டு வர நிறைய ஆராய்ச்சிகளைச் செய்தது.

இறுதியில் வெற்றி கிடைத்துவிட்டது. பூனை, பாதங்கள் அச்சிடப்பட்ட டப்பாவில் 50 கிராம் க்ரீம் விற்பனைக்கு வர இருக்கிறது. விலை 600 ரூபாய். ஆகஸ்ட் மாதம் முதல் கடைகளில் கிடைக்கும் என்கிறார்கள். பூனையின் பாதங்களைப் பிடித்து நுகர்வதைவிட, க்ரீம் வசதியாக இருக்கும் என்கிறார்கள் பூனைப் பிரியர்கள்.

விநோத பழக்கங்கள்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x