Published : 15 Apr 2015 12:20 PM
Last Updated : 15 Apr 2015 12:20 PM

உலக மசாலா: பச்சோந்தி மனிதன்!

இத்தாலியைச் சேர்ந்த 37 வயது ஜோஹன்னஸ் ஸ்டோட்டர் மனித உடல்கள் மீது ஓவியங்களைத் தீட்டக்கூடிய ஓவியர். பெண் மாடல்களை வைத்து தவளை, கிளிகள் போன்றவற்றை உருவாக்கி, அசத்தியிருக்கிறார். சமீபத்திய இவருடைய படைப்பு பச்சோந்தி. இரண்டு பெண்கள் மீது வண்ணங்களைத் தீட்டி, கிளையில் நடந்து செல்லும் பச்சோந்தியைக் கொண்டு வந்திருக்கிறார்.

’’இயற்கை மீது எனக்கு ஆர்வம் அதிகம். அதனால்தான் தவளை, பச்சோந்தி என்று வரைகிறேன். ஒரு படத்தை வரைவதற்கு ஒரு வாரம் தயார் செய்வேன். உதவியாளர் இருப்பதால் 6 மணி நேரங்களில் ஓவியத்தை என்னால் முடித்துவிட முடியும்.

வரைபவருக்கும் மாடல்களுக்கும் மிகுந்த பொறுமை இருப்பது இந்த ஓவியத்துக்கு அவசியம். பிறகு புகைப்படங்கள் எடுத்துக்கொள்வேன்’’ என்கிறார் ஜோஹன்னஸ்.

அட! சொன்னால்தான் மனுசங்கன்னே தெரியுது!

பிரிட்டனைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சமையல் செய்யக்கூடிய ரோபோக்களை உருவாக்கியிருக்கிறார்கள். மனிதக் கைகளைப் போன்று வடிவமைக்கப்பட்டிருக்கின்றன சமைக்கும் ரோபோக்கள். ஒவ்வொரு கையிலும் 24 மோட்டார்கள், 26 மைக்ரோ-கண்ட்ரோலர்கள், 129 சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. அடுப்பைப் பற்ற வைத்து, வாணலியை அதன் மீது வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்களைப் போட்டு, கரண்டியால் கிளறி, அடுப்பை அணைத்து, மூடிவைத்து விடுகிறது இந்த ரோபோ.

மனிதர்கள் செய்வது போலவே கைகளால் அனைத்தையும் லாகவமாகக் கையாண்டு, சமைத்து முடிப்பதைப் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது. 2017ம் ஆண்டில் விற்பனைக்கு வர இருக்கிற சமைக்கும் ரோபோ, 6.5 லட்சம் ரூபாய்க்குக் கிடைக்க இருக்கிறது. எதிர்காலத்தில் பெரிய உணவகங்களில் ரோபோ செஃப் கண்டிப்பாக இடம்பெறும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

சமையலறை பெண்களுக்கு குறைந்த விலையில் கண்டுபிடிங்களேன்

சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் மூன்று ஆண்டுகளாக வசித்து வருகிறார் 52 வயது டு மெயிங். டுவின் குடும்பத்தினர் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்தபோது, அவரைக் கைவிட்டு விட்டனர். வாழ வழி தெரியாத டு, அரசாங்க இல்லம் ஒன்றில் தங்கியிருந்தார். விரைவில் அங்கிருந்தும் வெளியேறும் நிலை. யிசாங் நகரில் இருந்த ஒரு குகைக்குச் சென்று தங்கிவிட்டார்.

மழை நீரைப் பிடித்துப் பயன்படுத்திக்கொள்கிறார். அருகில் இருக்கும் விவசாயிகள் விதைகளை அளித்தார்கள். அதனால் குகைக்கு அருகில் முட்டைக்கோசு வளர்த்து, உணவுக்குப் பயன்படுத்துகிறார். அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கும் முதியவர் பென்ஷன் தொகையை வைத்துச் சமாளித்துக்கொள்கிறார். டுவைப் பற்றிய செய்தி சமீபத்தில் வெளியே பரவியது. பலரும் அவருக்கு உதவி செய்து வருகிறார்கள்.

அப்படியே நகருக்குள் ஒரு தங்கும் இடத்துக்கும் ஏற்பாடு செய்யக்கூடாதா?

ஜாக்சன் கோர்டன், பிலெடெல்பியா பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். சின்ன வயதில் இருந்தே அவருக்கு பேட்மேனின் பேட்சூட் மீது ஆர்வம் அதிகம். நிஜ பேட்சூட்டை உருவாக்குவதற்காக 10 தடவை பல்வேறு பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்கிப் பார்த்தார்.

இறுதியில் பொருத்தமான பேட்சூட்டை உருவாக்கிவிட்டார். இந்த பேட்சூட்டின் மொத்த எடை 11 கிலோ. பேட்சூட்டை அணிந்துகொண்டு மோட்டார் சைக்கிளில் பறக்கலாம், சண்டைக்காட்சிகளில் நடிக்கலாம் என்பதால் இந்த பேட்சூட் மூலம் நல்ல வருமானமும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார் ஜாக்சன்.

சம்பாதிக்க ஒரு வழியையும் கண்டுபிடிச்சிட்டீங்க ஜாக்சன்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x