Published : 10 Mar 2015 10:25 AM
Last Updated : 10 Mar 2015 10:25 AM

உலக மசாலா: ஜெனி, என்னைத் திருமணம் செய்துகொள்கிறாயா?

அமெரிக்காவில் வசிக்கும் டேயான் ஸ்மித்தும் ஜெனிஃபர் கெஸெலும் நண்பர்கள். ஜெனிஃபரின் அடுத்த ஆண்டு பிறந்தநாளுக்குள் வித்தியாசமான முறையில் திருமணக் கோரிக்கையை வைக்க வேண்டும் என்று முடிவு செய்தார் ஸ்மித். தினமும் ஒரு வெள்ளைத் தாளில் `ஜெனிஃபர், என்னைத் திருமணம் செய்துகொள்கிறாயா?’ என்று எழுதி, தேதியையும் குறிப்பிடுவார்.

பல் தேய்க்கும்போது, துவைக்கும்போது, சாப்பிடும்போது, விளையாடும்போது என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதத்தில் கோரிக்கைத் தாளைப் பிடித்தபடி போட்டோ எடுத்துக்கொள்வார். 365 புகைப்படங்கள் எடுத்தவுடன், இவற்றை எல்லாம் வீடியோவாக மாற்றினார்.

ஜெனிஃபரின் பிறந்தநாளுக்குக் குடும்பத்தோடு கடற்கரைக்குச் சென்றனர். ஜெனிஃபர் நாற்காலிக்குப் பின்பக்கம் கோரிக்கையோடு நின்றார் ஸ்மித். குடும்பத்தினரின் ஆரவாரம் பார்த்து, ஜெனிஃபர் திரும்பினார். ஸ்மித்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்.

பிறகு அவருக்கு வீடியோ போட்டுக் காட்டப்பட்டது. `அதீதமான அன்பு இல்லாவிட்டால் இது போன்ற காரியங்களை எல்லாம் செய்ய முடியாது’ என்று உருகிப் போய்விட்டார் ஜெனிஃபர்.

காதலிக்கும்போது இருக்கும் இதே அன்பும் சுவாரசியமும் வாழ்க்கை முழுவதும் தொடரட்டும்!

அமெரிக்காவில் வசிக்கும் ட்ரேசி கிப்சனும் அவரது மகள் ஜாரா ஹர்ட்ஸோரனும் மிக அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 45 வயது ட்ரேசிக்கும் 18 வயது ஜாராவுக்கும் முகம், கழுத்து, கை பகுதிகளில் உள்ள தோல்களில் சுருக்கங்கள் விழுந்துவிட்டன. முதுமையானவர்கள் போலத் தோற்றம் அளிக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் இலவச சிகிச்சையளிக்க ஒரு மருத்துவமனை முன்வந்தது.

பற்கள் கூட விழுந்து மிகவும் வயதான தோற்றம் அளிக்கும் ட்ரேசி, சிகிச்சையை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். தன் மகளுக்கு மட்டும் சிகிச்சையளிக்கும்படிக் கேட்டுக்கொண்டார். `90 வயது முதியவருடைய தோல் எனக்கு வந்துவிட்டது. என்னைக் கேலி செய்யாதவர்களே கிடையாது.

எனக்கு வந்தது ஒரு நோய்… அதை மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்றால் பரவாயில்லை. என் மகளுக்கும் அந்த நோய் வந்ததைத்தான் என்னால் தாங்க இயலவில்லை’ என்கிறார் ட்ரேசி. ஜாராவின் சிகிச்சைக்குச் சுமார் 50 லட்சம் செலவாகும் என்கிறார்கள். மகளின் இளமை திரும்பக் கிடைக்க வேண்டும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறார் ட்ரேசி.

அடக் கொடுமையே… எப்படியெல்லாம் நோய் வருது…

பல்கேரியாவில் ஜிப்ஸி இன மக்கள் `திருமணச் சந்தை’ நடத்துகிறார்கள். மிக வறுமையில் இருக்கும் மக்கள், இந்தத் திருமணச் சந்தைக்கு மணமகன்களையும் மணமகள்களையும் அழைத்து வருகிறார்கள். பெரியவர்கள் உணவருந்த, குழந்தைகள் விளையாட, இளம் ஆண்களும் பெண்களும் தங்கள் இணையைத் தேடுகிறார்கள். ஒருவருக்கு ஒருவர் பேசி, பிடித்துப் போனால் குடும்பத்தாரிடம் தெரிவிக்கிறார்கள்.

இரண்டு குடும்பங்களும் கூடிப் பேசுகிறார்கள். மணமகளின் அழகுக்கு ஏற்றவாறு மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை அளித்து, திருமணத் தேதியை முடிவு செய்துவிடுகிறார்கள். அழகான பெண்ணை நிறையப் பேர் திருமணம் செய்துகொள்ள ஆர்வம் காட்டினால், யார் அதிகம் வரதட்சணை அளிக்கிறார்களோ, அவர்களுக்குப் பெண்ணைத் திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். காலம் காலமாக நடைபெற்று வரும் இந்தத் திருமணச் சந்தை, பெரிய குதிரைச் சந்தை மைதானத்தில் நடைபெறுகிறது.

அடப்பாவிகளா… பெண்களையும் ஆடு, மாடு போல வியாபாரம் செய்யறீங்களே…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x