Last Updated : 18 Mar, 2015 10:47 AM

 

Published : 18 Mar 2015 10:47 AM
Last Updated : 18 Mar 2015 10:47 AM

நொந்து கிடக்கும் நைஜீரியா - 2

போகோ ஹராம் தலைவரான அபுபக்கர் ஷெக்காவு தெளிவாகவே அந்த வீடியோவில் கூறியிருந்தார்.

‘‘அந்த மாணவிகளை நாங்கள்தான் கடத்தினோம் . மக்களைக் கடத்தி அவர்களை அடிமையாக்குவதில் தவறில்லை. முதலில் பெண்கள் பள்ளிக்கு அனுப்பப்பட்டிருக்கவே கூடாது. ஒன்பது வயதாகும்போதே பெண்கள் திருமணத்துக்கு ஏற்றவர்கள் ஆகிவிடுகிறார்கள். எனவே அப்போதே அவர்களை கல்யாணம் செய்து கொடுத்துவிட வேண்டும்’’.

‘‘மேற்கத்திய நவீனக் கல்வி’’ போகோ ஹராம் இயக்கத்துக்கு மிகவும் வெறுப்பைத் தரும் வார்த்தைகள். அதெப்படி, இஸ்லாமிய வழி கற்பித்தல்தானே வாழ்க்கை முறையாக இருக்க வேண்டும். (போகோ ஹராம் என்ற வார்த்தைகளுக்கான அர்த்தமே ‘மேற்கத்தியக்கல்விக்குத் தடை’ என்பதுதான்.)

தனது கொள்கைக்கு இடைஞ்சலாக இருந்த ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்று குவித்தது இந்த அமைப்பு.

ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் போர்னோ மாநிலத்தில அவசர நிலைச் சட்டத்தை அறிமுகப்படுத்தி, தனது எதிர்ப்பைக் காட்டத் தொடங்கியது அரசு. நூற்றுக்கணக்கான போகோ ஹராம் தீவிரவாதிகளைக் கொன்றது, கைது செய்தது. மிஞ்சியவர்கள் மலைப்பகுதிகளுக்குத் தப்பினர். தப்பியவர்கள் அங்கும் இங்கும் அப்பாவிகளைக் குறிவைத்தனர்.

2010-லிருந்து போகோ ஹராம் வேறொரு விபரீதத்தை நிகழ்த்தியது. பள்ளிகளை இலக்காக்குகிறது. நூற்றுக்கணக்கான மாணவர்களைக் கொன்று குவிக்கிறது. இதன் காரணமாக பல பெற்றோர்கள் பள்ளிகளுக்குத் தங்கள் குழந்தைகளை அனுப்பவே அச்சப்படுகிறார்கள். வருங்காலத்தில் நைஜீரியாவில் கல்வி அறிவு பெற்றவர்களின் சதவீதம் இதனால் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு.

இதில் இன்னொரு கொடுமையும் உண்டு. சிறுமிகள் படிக்கும் பள்ளிக்கூடங்களை முக்கியமாகக் குறி வைக்கிறார்கள் இந்தத் தீவிரவாதிகள். அவர்களைப் பொறுத்தவரை பெண்களுக்குப் படிப்பறிவு அவசியமே இல்லை. தவிர படித்தால் அவர்கள் மனம் கெட்டுப்போய் விடும்.

‘அடடா, சிறுமிகளைக் கொலை செய்கிறார்களே!’ என்று உங்கள் நெஞ்சம் பதைபதைத்தால், மேலும் அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன. சிறுமிகளைக் கடத்துகிறார்கள். அவர்களை சமையல் பணிக்கு அமர்த்திக் கொள்கிறார்கள். அடிமைகளாக வைத்துக் கொள்கிறார்கள்.

அதுமட்டுமல்ல இவர்கள் பெரும்பாலும் குறிவைப்பது வேற்று மத சிறுமிகளை. அவர்களைக் கட்டாயமாக மதம் மாற்றுகிறார்கள். அதோடு அவர்களுக்கு கட்டாயத் திருமணம் செய்து வைக் கிறார்கள்.

2014ல் போகோ ஹராம் இயக்கத்தினரின் அநீதியான செயல்பாடுகள் அதிகமாகிவிட்டன. டோரோன், பாகா ஆகிய கிராமங்களில் வசித்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்களைக் கொன்றார்கள். இது நடந்த அதே பிப்ரவரி மாதத்தில் வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள ஃபெடரல் அரசுக் கல்லூரியில் ஒரு தாக்குதலை நிகழ்த்தினார்கள். அதில் 59 இளைஞர்கள் இறந்தனர்.

மார்ச் மாதத்தில் ராணுவப் பகுதிகளை தாக்கி அங்கு கைது செய்து வைக்கப்பட்டிருந்த தங்கள் சக தீவிரவாதிகளை மீட்டார்கள். அதே நாளில் அபுஜா நகரில் ஒரு வெடிகுண்டுத் தாக்குதல். அதில் இறந்தவர்கள் 88 பேர். பட்டியலை மேலும் வளர்த்துவானேன்! போன வருடம் மட்டும் சுமார் 4000 பேர்களைக் கொன்றிருக்கிறது போகோ ஹராம்.

எரிகிற தீயில் எண்ணெய் வார்ப்பதுபோல அல் காய்தா இயக்கத்தினரும் போகோ ஹராம் தீவிரவாதிகளுக்கு தீவிரப் பயிற்சி கொடுக்கிறார்களாம்.

ஏற்கெனவே நைஜீரியாவின் கணிசமான பகுதியைத் தன் வசம் கொண்டு வந்துவிட்டது போகோ ஹராம். முக்கியமாக வடகிழக்குப்யை பகுதியில். இதனால் 30 லட்சம் பொது மக்களின் தினசரி வாழ்க்கை அங்கு பாதிக்கப்பட்டிருக்கிறது.

போர்னோ மாநிலத்திலும் போகோ ஹராம் ஆதிக்கம் மிக அதிகமாக உள்ளது.

பெரும்பாலும் போகோ ஹராம் ஊடுருவல் இப்படித்தான் நடக்கிறது. தனது சில நூறு சிப்பாய்களை குறிப்பிட்ட நகரத்துக்கு அது அனுப்பும். அங்குள்ள ராணுவத்தினருக்கு ஒரு கட்டத்தில் தங்கள் உணவுக் கையிருப்பு தீர்ந்துவிட, வெளியிலிருந்தும் உணவு கிடைக்காமல் சிப்பாய்கள் தடுத்து விடுவதால், அந்தப் பகுதியைவிட்டு ஓடிவிடுவார்கள். பிறகென்ன, நுழைவதும் ஆக்கிரமிப்பதும் எளிதாகி விடும்.

நைஜீரிய ராணுவத்தினரின் ஒரு பகுதி தீவிரவாதிகளை தாக்குவதில் பயிற்சி பெறுவதற்காக அல்ஜீரியா, சோமாலியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. எந்த ஒரு பெரிய இயக்கத்துக்கும் நிதி தேவை. போகோ ஹராம் இயக்கத்துக்கு எங்கிருந்து நிதி கிடைக்கிறது?

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x