Last Updated : 15 Mar, 2015 12:06 PM

 

Published : 15 Mar 2015 12:06 PM
Last Updated : 15 Mar 2015 12:06 PM

மாறுகிறதா மாலத்தீவு? - 6

2008-ல் பொதுத் தேர்தல் நடந்தது. கயூமுக்கு 40 சதவீத வாக்குகளும், நஷீதுக்கு 25 சதவீத வாக்குகளும் கிடைத்தன. எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலை. இந்தச் சூழலில் பல உதிரிக் கட்சிகளும் நஷீதை ஆதரிக்க, அவர் அணிக்கு 53.65 சதவீதம் வாக்குகள் என்று ஆனது. நஷீத் தலைவரானார் - முழுவதும் ஜனநாயகமுறையில் அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைவர்.

முகம்மது நஷீத் என்ற முழுப்பெயர் கொண்ட இவர் அரசியல்வாதி மட்டுமல்ல. ஒரு கடல்வாழ் உயிரின விஞ்ஞானியும்கூட. சுற்றுப்புற சூழல் தொடர்பான செயல்பாடுகளில் நிறைய ஆர்வம் காட்டியவர். மாலத்தீவு ஜனநாயகக் கட்சியைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர்.

நஷீத் ஆட்சியில் தாராளமயமாக்கல் அறிமுகப்படுத்தப்பட்டது. சுறா வேட்டைக்குத் தடை விதிக்கப்பட்டது. ஏறுமாறாக நடந்து கொண்டிருந்த இருபதுக்கும் அதிகமான அரசு நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டன. உயர்ந்து கொண்டிருக்கும் கடல் மட்டத்தில் நாட்டின் பல பகுதிகள் வருங்காலத்தில் அழியலாம் எனும் நிலையில் தடுப்பு நடவடிக்கைக்கு நிதி உருவாக்கப்பட்டது. மாலத்தீவு சுதந்திரப் பெருமூச்சு விட்டது - கொஞ்ச காலத்துக்கு மட்டும். 2012 வரை மாலத்தீவின் நான்காவது அதிபராக ஆட்சி செய்தார் நஷீத்.

அதற்கு முன்பு மமூன் அப்துல் கயூம் சுமார் 30 ஆண்டுகளுக்கு ஒரு சர்வாதிகாரியாகவே மாலத்தீவை ஆட்சி செய்திருக்கிறார். அவர் ஆட்சியில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் அதிகம்.

2012-ல் பிப்ரவரி 7 அன்று தனது பதவிக்காலம் முடிவடையாத போதும், நஷீத் அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். காவல்துறை மற்றும் ராணுவ அதிகாரிகளின் கட்டாயம் காரணமாக ‘துப்பாக்கி முனையில் தான் பதவி விலக நேரிட்டது’ என்றார்.

நஷீத் ஆட்சியில் நீதிபதி முகமது கைது செய்யப்பட்டதால், அதைத் தொடர்ந்து காவல் துறையும், ராணுவமும் நஷீத்துகு எதிராகத் திரும்ப, அதைத் தொடர்ந்துதான் ராஜினாமா. எனினும் அவர்மீது சுமத்தப்பட்ட கிரிமினல் வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன.

ஆனால் சமீபத்தில் நஷீத் மீண்டும் கைது செய்யப்பட்டபோது அவர்மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் மேலும் கடுமையானவை. தீவிரவாதத்துக்கு எதிரான சட்டங்களின்படி, அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு அவருக்கு நேற்று 13 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 2013-ல் ஆட்சிப் பொறுப்பேற்றார் அப்துல்லா யமீன் அப்துல் கயூம். இவரது தேர்தல் வெற்றி பலத்த விமர்சனங்களைக் கிளப்பின. பிரபல தொழில் அதிபர் காசிம் இப்ரஹிம் என்பவர் இவர் ஆட்சிக்கு வரப் பெரிதும் (பலவிதங்களில்) உதவினாராம்.

அரசுக்கு எதிரான பல எதிர்ப்புப் பேரணிகளை மாலே நகரில் ஆங்காங்கே தொடர்ந்து நடத்தி வருகிறது எதிர்க்கட்சி. ஆனால் உரிய நேரத்தில் நடைபெறும் என்றால் அடுத்த பொதுத் தேர்தல் என்னவோ 2018-ம் ஆண்டில் பிற்பகுதியில்தான்.

முன்னாள் அதிபர் நஷீதின் கைது மட்டுமல்ல. வேறொன்றும் இந்தியாவை உற்று கவனிக்க வைத்துள்ளது. கைது, இது தொடர்பான கலவரம் ஆகியவை நடந்த சில நாட்களிலேயே மாலத்தீவு அதிபர் அப்துல்லா யமீன் அப்துல் கயூம் பாகிஸ்தானுக்குச் சென்றார். மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மாலத்தீவு வர இருப்பதற்கு முன்னால் பாகிஸ்தான் விஜயம் எதற்கு? பின்னணி உண்டா? (தனது மாலத்தீவு பயணத்தை இந்தியப் பிரதமர் சமீபத்தில் ரத்து செய்து விட்டார் என்பது வேறு விஷயம்).

அதைவிட யோசிக்க வைக்கிறது இன்னொரு செய்தி. சீனாவுக்கும் விஜயம் செய்யப் போகிறாராம் மாலத்தீவு அதிபர். இருநாடுகளுக்கும் விஜயம் என்றால் அது மூன்றாவது நாட்டுக்கு எதிரானதாக இருக்க வேண்டுமா என்ன? அவசியமில்லைதான். ஆனால் அந்த விஜயங்கள் எப்போது நடக்கிறது என்பதுதான் பல சந்தேகங்களுக்கு வழிவகுக்கின்றன.

பாகிஸ்தானுக்கு யமீன் செல்வதைவிட அதில் சீனாவின் பின்னணி என்ன என்பதுதான் இந்தியாவை யோசிக்க வைக்கிறது.

மாலத்தீவில் சர்வாதிகார ஆட்சியை நீண்ட காலம் நடத்திய அப்துல் கயூமுடன் சீனா அப்போதே தொடர்பில் இருந்தது. சத்தம் போடாமல் தனது கடற்படையை மாலத்தீவின் ஒரு பகுதியான மரோவா தீவில் அமைக்க திட்டமிட்டது சீனா. அப்போதைய அதிபர் கயூம் இந்தத் தீவை சீனாவிடம் ஒப்படைக்கக்கூட தயாராகி விட்டார். ஆனால் 2008-ல் நடைபெற்ற அந்த நாட்டின் முதல் பொதுத் தேர்தலில் நஷீத் அதிபர் ஆகிவிட்டார். அவர் பதவிவிலகலுக்குப் பிறகு இப்போது மீண்டும் மரோவா தீவில் பெரும் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறது சீனா.

தனது பட்ஜெட்டில் கடற்படைக்கான செலவை மட்டும் சமீப காலமாக அதிகமாக்கி வரும் சீனா, இந்தியப் பெருங்கடலிலுள்ள சில நாடுகளில் தனது கடற்படைத் தளங்களாக தேர்ந்தெடுத்திருக்கிறது. அவற்றில் முக்கியமானவை செஷல்ஸ், மொரீஷியஸ், இலங்கை மற்றும் மாலத்தீவு.

சமீபத்தில் சீனாவுக்கு ஓர் அதிர்ச்சி. சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாடு கொண்டிருந்த ராஜபக்ச இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் தோற்றுப் போனார். தனது ஆட்சிக் காலம் முடிவதற்கு முன்பாகவே தேர்தலை அறிவித்ததால் முன்னதாகவே ஆட்சியை இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இப்போது அங்கு ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் மைத்ரிபால சிறிசேனா சீனாவுக்கு ஆதரவாகப் பேசியதில்லை. சொல்லப் போனால் தேர்தலின்போது சீனாவின் சுயநலத்தைக் கொஞ்சம் தாக்கவும் செய்தார்.

ஒருவேளை இலங்கை சீனாவுக்கு எதிரான, இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாடை அறிவித்து விட்டால்? இப்படி யோசித்த சீனா இந்த இழப்பை சரி செய்ய மாலத்தீவை இந்திய ஆதரவு நிலையிலிருந்து விலக்க நினைக்கிறதோ?

முன்னாள் அதிபர் நஷீத் இந்தியாவுக்கு ஆதரவாகவும், சீனாவுக்கு எதிராகவும் பலமுறை பேசி இருக்கிறார். தற்போது மாலத்தீவில் நடைபெறும் குழப்பங்கள் குறித்து இந்தியாவின் நிலை என்னவாக இருக்கும் என்பதை மாலத்தீவை விட அதிக உன்னிப்பாக கவனித்து வருகிறது சீனா.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x