Published : 27 Mar 2015 11:28 AM
Last Updated : 27 Mar 2015 11:28 AM

உலக மசாலா: கண்பார்வை இல்லாமல் வரைந்த காவியங்கள்!

டெக்ஸாஸில் வசிக்கிறார் 37 வயது ஓவியர் ஜான் பிராம்ப்லிட். உலகத்தையே வண்ணங்களால் காண்கிறார் ஜான். அவருடைய ஓவியங்கள் மிகவும் வித்தியாசமானவை. ஆழ்ந்த, அடர்த்தியான வண்ணங்களால் ஓவியங்கள் கண்களைப் பறிக்கின்றன. ஜான் வரையும் ஓவியங்களை அவரால் பார்த்து, ரசிக்க முடியாது. அவருக்குப் பார்வை கிடையாது.

இரண்டு வயதில் ஜானுக்கு ஏற்பட்ட காய்ச்சலில் பார்வை பாதிக்கப்பட்டது. ஆண்டுகள் செல்லச் செல்ல பார்க்கும் சக்தி குறைந்துகொண்டே வந்து, 2001ம் ஆண்டு முற்றிலும் பறிபோனது. ‘திடீரென்று பார்வையற்றவர்களின் வாழ்க்கையை என்னால் வாழ முடியாது. என்ன செய்வதென்று யோசித்தேன். என் உலகம் இருட்டாகிவிட்டாலும் பிறருக்கான உலகத்தை வண்ணமயமாக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்’ என்கிறார் ஜான்.

முதலில் ஃபெவிகால் மூலம் அவுட் லைன் வரைந்துகொள்கிறார். அது காய்ந்த பிறகு, கைகளால் தடவிப் பார்த்து வண்ணங்களைத் தீட்டுகிறார். 14 மணி நேரத்தில் ஓர் ஓவியத்தை வரைந்து முடித்துவிடுகிறார். பார்வையற்ற ஒருவர் வரைந்த ஓவியங்களாக இவை தெரியவில்லை. ஜானின் ஓவியங்களுக்குப் பல்வேறு விருதுகளும் அங்கீகாரங்களும் கிடைத்திருக்கின்றன.

பிரெய்ல் ஓவியர்!

சைபீரியாவில் இருக்கிறது அஸாஸ்கயா குகை. இந்தக் குகையைச் சுற்றிலும் பளிங்குப் போன்ற பனிக்கட்டிகள் சூழ்ந்திருக்கின்றன. மிகத் தூய்மையான காற்று வீசுகிறது. அந்த இடமே சொர்க்கம் போல் காட்சியளிக்கிறது. இங்கே பனி மனிதன் நடமாடுவதாகவும் வதந்தி நிலவுகிறது. இந்த இடத்திலிருந்து காற்றை எடுத்து வந்து, டப்பாக்களில் அடைத்து விற்பனை செய்கிறது ஒரு நிறுவனம். இந்தக் காற்றை சுவாசித்தால் தீராத நோயும் தீரும் என்று சொல்வதால், ஏராளமானவர்கள் வாங்கிச் செல்கிறார்கள். 190 ரூபாய் மதிப்புள்ள இந்தச் சிறிய டப்பாவை நோயற்றவர்களும் முகர்ந்து பார்க்கலாம். மூளை புத்துணர்வு பெறும் என்கிறார்கள்.

ஏமாற்றணும்னு நினைச்சா என்ன வேணாலும் சொல்லலாம்…

சீனாவின் ஹைகோ பகுதியில் ஆடி, பென்ஸ் ஆடம்பர கார்கள் அடுத்தடுத்து நிறுத்தப்பட்டன. இரண்டு கார்களின் நம்பர் பிளேட்களும் ஒரே எண்களைக் காட்டிக்கொண்டிருந்தன. ஆடி கார் தான் சட்டப்பூர்வமாக ரிஜிஸ்டர் செய்யப்பட்டு, லைசென்ஸ் பெற்றிருக்கிறது.

பென்ஸ் காரின்ஸ் லைசென்ஸ் போலியானது என்று கண்டுபிடிக்கப்பட்டது. ஆடி, பென்ஸ் கார்களின் உரிமையாளர்கள் ஒரே நபரிடம் இருந்துதான் லைசென்ஸைப் பெற்றிருக்கிறார்கள். இருவருக்கும் ஒரே லைசென்ஸ் வழங்கி, அந்த ஆள் ஏமாற்றியிருப்பது தெரியவந்திருக்கிறது.

ஆடம்பர கார் வாங்குபவர்கள் சரியான நபர்களிடம் லைசென்ஸ் வாங்க வேண்டாமா?



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x