Last Updated : 03 Mar, 2015 11:39 AM

 

Published : 03 Mar 2015 11:39 AM
Last Updated : 03 Mar 2015 11:39 AM

சமத்துவம் மறுக்கும் சவுதி அரேபியா- 9

சவுதி அரேபியாவின் வித்தியாசமான நீதிச் செயல்பாட்டிற்கு இன்னொரு அடையாளம் திய்யா. இதற்கு அர்த்தம் ‘ரத்தப்பணம்’ என்பதுதான். யாரையாவது கொன்று விட்டால் இறந்தவரின் குடும்பத்திற்கு குறிப்பிட்ட தொகையை அபராதமாகக் கட்டிவிட்டு தண்டனையிலிருந்து தப்பிக்கலாம். நீதிமன்றம் அறிவிக்கும் தொகை கொஞ்சம் அதிகம்.

100 ஒட்டகங்கள் என்பதாகக்கூட இருக்கலாம். பணமாகவும் இருக்கலாம். இப்போது இந்தத் தொகை ஒரு லட்சம் டாலரைத் தாண்டுகிறதாம். இப்போதெல்லாம் ‘திய்யா இன்சூரன்ஸ்’ என்பது அறிமுகமாகிவிட்டது. இந்த திட்டதில் தவணையை கட்டிக்கொண்டு வந்தால், வரும் காலத்தில் நீங்கள் பிறரின் இறப்புக்குக் காரணமானால் அதற்கான திய்யா அபராதத் தொகையை இன்சூரன்ஸ் நிறுவனமே கட்டிவிடும்!

முஸ்லிம்களுக்கு மட்டும்தான் மெக்காவில் அனுமதி என்பதால் மாறுவேடத்தில் அங்கு சென்றார் உலகின் பல பகுதிகளுக்குச்சென்று வர விருப்பம் கொண்ட இத்தாலியரான லுடோவிகோ என்பவர்.

முஸ்லிம் பயணிகளுக்குப் பாதுகாவலராகச் செல்லும் இஸ்லாமியர் வேடம் தரித்தார். மெக்காவை விட்டு பத்திரமாகவே வெளியேறியிருப்பார். ஆனால் வழிப்போக்கர் ஒருவர் கேட்ட சில கேள்விகளுக்கு பதிலாக அமைய வேண்டிய அராபிக் வார்த்தைகள் அப்போது அவருக்கு மறந்து தொலைக்க, அவர் கிறிஸ்தவர் என்ற உண்மை வெளிப்பட்டது. சிறைப்படுத்தப்பட்டார். பின்னர் சுல்தானின் துணைவி ஒருவரின் உதவியோடு தப்பித்தார்.

பல நூற்றாண்டுகளாகவே, பெண்கள் வேலைக்குச் செல்வது சவுதி அரேபியாவில் தடை செய்யப்பட்ட ஒன்றுதான். ஆனால் விதிவிலக்குகள் உண்டு. மகளிர் கல்விக் கூடங்களில் பெண்கள் ஆசிரியர் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். ராணு வத்தில் சேருவது பற்றிப் பெண்கள் நினைத்துப் பார்க்கக் கூட முடியாது.

கல்வியைப் பொறுத்தவரை சவுதியில் பெண்களுக்குத் தடையில்லை. பெண்களுக்கான சிறந்த பல்கலைக்கழகங்கள் உள்ளன. ‘மன்னர் அப்துல்லாவின் கல்வி உதவித் தொகை திட்டத்தின்’ மூலம் பயனடையும் பெண்கள் அதிகமாகி வருகின்றனர்.

பெண்களுக்கான முழுதும் உடலை மூடிய உடை என்பது முஸ்லிம் பெண்களுக்குத்தான் என்கிறது சவுதி அரேபியாவின் சட்டம்.

என்றாலும் 2001-ல் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றிய சில பெண்கள் சவுதி அரேபியாவிற்கு பயிற்சி மற்றும் பாதுகாப்பு கோணத்தில் அனுப்பப்பட்டபோது ஒரு குறிப்பிடத்தக்க எதிர்ப்பு கிளம்பியது.

“வம்பே வேண்டாம். நீங்கள் எல்லோருமே தலை முதல் கால் வரை மறைக்கும் உடைகளையே அணிந்து கொள்ளுங்கள்” என்றார் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளரான டொனால்டு ரம்ஸ்ஃபெல்டு.

மார்த்தா மெக் ஸாலி என்ற அமெரிக்கப் பெண்மணி அந்த நாட்டின் விமானப்படையின் உயர் அதிகாரி. போர் விமானங்களை திறமையுடன் ஓட்டக்கூடியவர். இவர் டொனால்டு ரம்ஸ்ஃபெல்டு மீது வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் வெற்றியும் பெற்றார்.

இதைத் தொடர்ந்து அமெரிக்க செனட்டில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. சவுதி அரேபியாவுக்குச் செல்லும் பெண்கள் தலையைச் சுற்றி உடை அணியவேண்டாம் என்பதுதான் அந்தத் தீர்ப்பு. ஆனால் அந்த வழக்கில் வேறொரு பகுதியும் இருந்தது. உரிய ஓட்டுனர் உரிமம் இருந்தும்கூட சவுதி அரேபியாவில் தான் பணியின் காரணமாகக்கூட காரோட்ட முடியாமல் போனது என்றார்.

அவர் எங்கு சென்றாலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் ஓர் ஆண் அதிகாரிதான் அவருக்கு கார் ஒட்டும்படி நேர்ந்தது. இது பற்றி அமெரிக்க நீதிபதி எந்தத் தீர்ப்பையும் வழங்கியதாகத் தெரியவில்லை.

கொலை செய்தால்கூட குறிப்பிட்ட பணத்தைக் கொடுத்து விட்டு தண்டனையிலிருந்து தப்பிக்கலாம் என்றும், இந்தத் தொகையை ‘திய்யா’ என்று குறிப்பிடுவார்கள் என்றும் கூறியிருந்தோம்.

சவுதி அரேபியாவில் மகளிர் நிலைமை குறித்த இந்தப் பகுதியில் இதை மீண்டும் குறிப்பிட ஒரு தனிக் காரணம் உண்டு. இறந்தது ஒரு பெண் என்றால் பாதி திய்யா கொடுத்தால் போதுமாம்! அது மட்டுமல்ல இறந்தது முஸ்லிம் அல்லாத ஒருவர் என்றால் (ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்) அவர் இறப்புக்குக் காரணமாக இருந்தவர் குறைவான திய்யா செலுத்தினால் போதும்.

சென்ற ஆண்டில் மன்னர் அப்துல்லா மகளிருக்கும் வாக்குரிமை வழங்கினார். உலகின் மிகப் பல நாடுகள் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கியபிறகு ஒருவழியாக இதை அளித்தது சவுதி அரேபியா. அது கூட முனிசிபல் தேர்தலில் மட்டும்தான் இப்போதைக்கு வாக்களிக்கும் உரிமை.

முனிசிபல் தேர்தலில் பெண்கள் வேட்பாளர்களாக நிற்க முடியுமா? முடியும். ஆனால் அவர்கள் வீட்டின் வெகு அருகில்தான் அவர்களது அலுவலகம் இருக்க வேண்டும். வாக்களிக்கும் உரிமை சென்ற வருடம் அளிக்கப் பட்டாலும் அது இந்த வருடம் நடைபெறவிருக்கும் தேர்தலில்தான் அமல் படுத்தப் படப்போகிறது.

2009-ல் மன்னர் அப்துல்லா வேறு ஒரு வியக்கத்தக்க அதிர்ச்சிக்குக் காரணமானார். மகளிர் கல்வித்துறையில் துணை அமைச்சராக நூர் அல் பயஸ் எனும் பெண்மணி ஒருவரை நியமித்தார். இவர்தான் சவுதி அரேபிய அரசில் பங்கேற்ற முதல் பெண்மணி.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x