Last Updated : 08 Mar, 2015 12:46 PM

 

Published : 08 Mar 2015 12:46 PM
Last Updated : 08 Mar 2015 12:46 PM

மாறுகிறதா மாலத்தீவு?- 1

நம் நாட்டுக்கு மிக அருகில் உள்ள ஒரு நாடு 2040-ல் முழுவதும் கடலில் மூழ்கிவிடும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். மாலத்தீவு குறித்த இந்தத் தகவலே பதற வைக்கிறது இல்லையா? அந்த நாட்டில் சமீபத்தில் நடைபெறும் நிகழ்வுகளும் பதற்றத்தை உண்டாக்கக் கூடியவைதான். .

மாலைத் தீவுகள் என்றும் அழைக்கப்படும் இந்நாடு, நமது நாட்டின் ஒரு பகுதியான லட்சத் தீவுகளுக்குத் தெற்கே உள்ளது. இலங்கையிலிருந்து தென்மேற்கே அமைந்துள்ளது.

கடல் சார்ந்த ஏரி. அந்தக் கடலையும் ஏரியையும் பிரிக்கும் வகையில் பவளப் பாறைகள். இப்படி அமைந்த பகுதியை பவளத் தீவு என்பார்கள். அப்படி மொத்தம் 26 பவளத்தீவுகளைக் கொண்ட தேசம் மாலத்தீவு.

தீவுகளால் அமைந்த மாலைபோல் காணப்படுவதால் தமிழில் மாலைத்தீவுகள் என்று அழைக்கப்படுகின்றன. சமஸ்கிருதத்தில் இதே அர்த்தத்தில் “மாலத்வீப்” (தீவுகளின் மாலை) என்று குறிப்பிடப்படுகிறது.

இந்த 26 பவளத் தீவுகளில் மொத்தம் 1192 தீவுகள். இத்தனை தீவுகளில் 200-ல் மட்டும்தான் மனிதர்கள் குடியேறியிருக்கிறார்கள். மீன்பிடிப்பதை முக்கியத் தொழிலாகக் கொண்ட இந்த நாட்டின் தலைநகரம் மாலே.

அருமையான சுற்றுலாத் தலம்தான். ஆனால் சமீப காலமாக அங்கு நிலவும் அரசியல் நிகழ்வுகள் பல சுற்றுலாப் பயணிகளை அங்கு செல்லவிடாமல் தடுத்துநிறுத்தியுள்ளன.

முக்கியமாக அந்த நிகழ்வுகள் இந்தியாவை சங்கடப்படுத்தி உள்ளன. காரணம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டின் தலைநகரான மாலேவுக்கு இந்த மாதத்தின் நடுவே செல்ல இருந்தார்.

மால்டீவ்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி முகம்மது நஷீத் மீது சில குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இது தொடர்பாக அவர் மாலே நகரின் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். அவர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் லேசானவை அல்ல. தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் அவர் செயல்பட்டதாக குற்றம் சுமத்தியது அந்த நாட்டின் இப்போதைய அரசு. இதற்காகத்தான் குற்றவியல் நீதிமன்றத்துக்கு அவர் பிப்ரவரி 21, 2015 அன்று அழைத்து வரப்பட்டார்.

அப்படி அவர் அழைத்து வரப்பட்டபோது அவரைச் சூழ்ந்து கொண்டனர் பத்திரிகையாளர்கள். அவர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு நீளமாகவே பதிலளித்தார் நஷீத். அவரைச் சுற்றி வளையமாக இருந்த பாதுகாப்புப் படையினர் இதைக் கொஞ்சமும் விரும்பவில்லை. எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து நஷீத் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க, அவரை (கொஞ்சம் காட்டுமி ராண்டித் தனமாகவே) இழுத்துச் சென்றனர். முரண்டு பிடித்த நஷீத் ஒரு கட்டத்தில் கீழே விழுந்தார். புகைப்படங்கள் ஊடகங்களில் பரவ, உலகம் முழுவதும் மாலத்தீவு தேசத்தை உற்றுநோக்கத் தொடங்கியது.

தன்னை இழுத்துச் செல்ல வேண்டாம் என்றும், தானாக நடந்து செல்வதாகவும் நஷீத் கூறியதை பாதுகாப்பாளர்களாக வந்த அரசுப் பிரதிநிதிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. ‘’போலீஸாரின் வன்முறை காரணமாக என் கைகள் சேதமடைந்துள்ளன’’ என்று அவர் கூறியதை நீதிமன்றம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. ‘’போதிய மருத்துவ சிகிச்சைகளை அவருக்கு அளிக்க வேண்டும்’’ என்று மட்டுமே நீதிமன்றம் கூறியது.

நீதிமன்றத்தில் நஷீதின் முகம் கடும் வலியை வெளிக்காட்டிக் கொண்டிருந்தது. அவர் சட்டையில் உள்ள பொத்தான்களைக் காணோம். மருத்துவ சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது குறித்து காவல் துறை கவலைப்படவில்லை. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வில்லை. மாறாக அருகிலுள்ள தூனிதூ என்ற சிறிய தீவில் அமைந்த சிறைச் சாலைக்குப் படகில் அழைத்துச் சென்றது.

‘‘வழக்கு முடியும் வரை போலீஸ் கண்காணிப்பில் நஷீதை வைத்துக் கொள்ளச் சொல்லி இருக்கிறது நீதிமன்றம்’’ எனும் மாலத்தீவு ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதி ‘’ஜோடிக்கப்பட்ட குற்றங்களை நஷீத் மீது சுமத்துகிறது தற்போதைய அரசு. தீவிரவாதத்துக்கும் எங்கள் தலைவருக்கும் துளியும் தொடர்பில்லை’’ என்கிறார்.

நஷீதின் வழக்கறிஞர் இந்த வழக்கே அரசியல் காரணங்களுக்காக போடப்பட்ட ஒன்று என்கிறார். தவிர சட்டப்பூர்வமாக இதை நஷீத் அணுகக் கூடிய வழிமுறைகளும் அரசால் மறுக்கப்பட்டு வருவதாகக் கூறுகிறார்.

அவர் வழக்கறிஞர் அவருடன் பேச வேண்டுமென்றால் கூட இரண்டு நாட்கள் முன்னதாகவே அதற்குப் பதிவு செய்ய வேண்டுமாம்.

மாலத்தீவு நாட்டில் முதன் முதலாக ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் நஷீத் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர அவர் இந்தியாவுக்கு நெருக்கமானவர். தற்போதைய மாலத்தீவு அரசு இந்தியாவுக்கெதிரான நிலைப்பாடை எடுக்கிறதா? இந்தக் கேள்வி எழப் பல காரணங்கள் உண்டு.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x