Last Updated : 04 Feb, 2015 10:16 AM

 

Published : 04 Feb 2015 10:16 AM
Last Updated : 04 Feb 2015 10:16 AM

3 பேரின் டிஎன்ஏ மூலம் செயற்கைக் குழந்தை: பிரிட்டனில் சட்டம் கொண்டு வர முடிவு

மூன்று பேரிடமிருந்து பெறப்பட்ட டிஎன்ஏ மூலம் செயற்கைக் கரு வூட்டலைப் பயன்படுத்தி குழந்தை பெறுவதை சட்டப்பூர்வமாக அனு மதிப்பது தொடர்பாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

செயற்கைக் கருவூட்டல் சட்டத் தில் திருத்தம் மேற்கொள்வதன் மூலம் இதனை அமல்படுத்த முடியும். நாடாளுமன்றத்தில் சுமார் 90 நிமிடங்கள் இதன் மீது விவாதம் நடத்தப்படும்.

மூன்று தனி நபர்களிடமிருந்து பெறப்பட்ட டிஎன்ஏ மூலம் செயற்கைக் கருவூட்டல் முறையில் குழந்தை பெற்றுக்கொள்வதை அனுமதிக்கலாமா வேண்டாமா என எம்.பி.க்கள் வாக்கெடுப்பு மூலம் முடிவு செய்வர்.

கட்சி அடிப்படை இல்லாமல், தங்களது சுய விருப்பின் அடிப்படையில் வாக்களிக்க எம்.பி.க்களுக்கு அனுமதியளிக்கப் பட்டுள்ளது.

பரம்பரைக் கோளாறுகளால் பாதிக்கப்படாத வகையில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள இந்த புதிய முறை உதவுகிறது.

பெற்றோரிடமிருந்து எடுக்கப் படும் டிஎன்ஏக்கள் மற்றும் பெண் ஒருவரிடமிருந்து தானமாகப் பெறப்படும் மைட்டோகாண்டிரி யல் டிஎன்ஏ ஆகியவற்றை கருவில் இணைத்து இக்குழந்தை உருவாக்கப்படும்.

இம்முறை மூலம் பிறக்கும் குழந்தைகள் பரம்பரை நோய் களால் பாதிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சட்டம் அமலானால், பிரிட்டனில் உள்ள சுமார் 2,500 பெண்கள் பயனடைவர். இப் பெண்களுக்கு மைட்டோகாண் டிரியா டிஎன்ஏக்கள் மரபுபிறழ்வு பாதிப்புகள் உள்ளன.

இம்முறைக்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் பெரும்பாலானவர்கள் ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பதால், சட்டமாக அமலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமலா செல்வராஜ் வரவேற்பு

பிரபல மகப்பேறு மருத்துவர் கமலா செல்வராஜ் கூறியதாவது:

உலகத்தில் முதல் டெஸ்ட் டியூப் பேபி லண்டனில்தான் உருவாக்கப்பட்டது. அதன்பிறகுதான் டெஸ்ட் டியூப் பேபி பிரபலமானது. இந்தியாவில் மூன்றாவதாகவும், தென்னிந்தியாவில் முதலாவதுமான டெஸ்ட் டியூப் பேபியை நான் உருவாக்கியுள்ளேன். கருமுட்டைகள் மற்றும் உயிரணுக்கள் மூலம் செயற்கையாக கருத்தரிக்க வைத்து டெஸ்ட் டியூப் பேபி உருவாக்கப்படுகிறது. அதேபோல முதல் முறையாக, குழந்தை இல்லாத தம்பதிக்கு ஒரு பெண்ணிடம் இருந்து மரபணு இழைமணி (மைட்டோகாண்ட்ரியல் டிஎன்ஏ) தானமாக பெற்று குழந்தையை உருவாக்க லண்டனில் முயற்சி செய்யப்படுகிறது. இது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் பரம்பரை நோய்கள் குழந்தைக்கு வராமல் தடுக்க முடியும். இந்த முறை குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x