Last Updated : 06 Feb, 2015 10:54 AM

 

Published : 06 Feb 2015 10:54 AM
Last Updated : 06 Feb 2015 10:54 AM

உருக்குலைகிறதா உக்ரைன்?- 5

ரஷ்யா-உக்ரைன் நாடுகளின் போராட்டத்தில் வேறொரு விபரீதமும் சென்ற ஆண்டு நடைபெற்றுவிட்டது.

நெதர்லாந்தின் தலைநகரான ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு பயணமாகிக் கொண்டிருந்தது ஒரு போயிங் 777 விமானம். கிழக்கு உக்ரைன் பகுதியில் அது பறந்தபோது சுட்டு வீழ்த்தப் பட்டது. விமானத்தில் இருந்த 280 பயணிகளும், 15 ஊழியர்களும் இறந்தனர்.

ஏவுகணை மூலம் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கிறது. 22,000 மீட்டர் உயரம் வரை இலக்கைத் தாக்கும் திறன் கொண்டதாம் இந்த ஏவுகணை. மேற்படி விமானம் பத்தாயிரம் மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டி ருந்தபோது சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கிறது.

சுட்டது யார்? உக்ரைன் அரசும், ரஷ்ய ஆதரவு புரட்சியாளர்களும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டு கின்றனர். ‘‘உக்ரைன் எல்லையில் தான் மலேசிய விமானம் வீழ்த்தப்பட்டிருக்கிறது. உக்ரைன் ராணுவம்தான் இதற்குக் காரணம்’’ என்கிறார்கள் ரஷ்ய ஆதரவு புரட்சியாளர்கள்.

மலேசிய விமானம் சென்ற அதே பாதையில்தான் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சென்ற விமானமும் பறந்துள்ளது. அதற்கு வைக்கப்பட்ட குறியில்தான் மலேசிய விமானம் சிக்கிவிட்டது என்றும் தகவல் பரவியது. (புதின் சென்ற விமானம் அந்தப் பகுதியில் சற்று தாமதமாகக் கடந்துள்ளது என்பதும், இரண்டு விமானங்களும் வெளியில் ஒரேவித வண்ணம் கொண்டவை என்பதும் குறிப்பிடத்தக்கவை).

ஆனால் ‘’உக்ரைன் விமானத் தைத் தாக்குவதாக நினைத்துக் கொண்டு இங்குள்ள ரஷ்ய ஆதரவுக்காரர்கள்தான் மேற்படி விமானத்தை வீழ்த்தியிருக்கி றார்கள். எனவே ரஷ்யாதான் இதற்குப் பொறுப்பு ஏற்க வேண்டும்’’ என்கிறது உக்ரைன் அரசு.

அமெரிக்கா ரஷ்யா மீது சந்தேகப்படுகிறது. ரஷ்யத் தயாரிப்பு ஏவுகணையான எஸ்.ஏ.-11 அல்லது எஸ்.ஏ.-20 மூலம்தான் விமானம் வீழ்த்தப்பட்டிருக்க வேண்டும் என்றது. தவிர சம்பவம் நடைபெற்ற இடத்தில் ரஷ்ய ராணு வமும் இருந்ததால், சந்தேகம் பெரிதாகிறது என்றது.

இறந்தவர்களில் ரஷ்யர்களோ, உக்ரைனியரோ எவருமில்லை. மிகப் பெரும்பாலானவர்கள் (189 பேர்) நெதர்லாந்தைச் சேர்ந்தவர்கள். 44 மலேசியர்களும், 27 ஆஸ்திரேலியர்களும் உயிரிழந் துள்ளனர். (சஞ்ஜித்சிங் என்ற இந்திய விமானப் பணியாளர் ஒருவரும் இதில் இறந்தார்).

விமானத்தை வீழ்த்தியது தொழில்நுட்பத் திறன் வாய்ந்த ரஷ்யக் குழுவினர்தான் என்பதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

ஐரோப்பியப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைப்பு, விசாரணைக் குழு ஒன்றை சம்பவ இடத்துக்கு அனுப்பியது. விமானம் விழுந்தது கிராபோவா எனும் கிராமத்தில். அங்கு சென்று ஆராய்ச்சிகள் செய்தனர்.

ரஷ்யாவும், பிரிவினைவாதப் புரட்சியாளர்களும் மீட்புப் படையினரை விமானம் வீழ்த்தப்பட்ட இடத்துக்கு அருகே செல்வதைத் தடுத்தனர் என்கிறது உக்ரைன். இதற்கு ஆதாரமாக சில புகைப்படங்களையும் அது வெளியிட்டுள்ளது.

மேற்படி விமானப் படுகொலை யில் இறந்தவர்களில் மிக அதிகமானோர் நெதர்லாந்தைச் சேர்ந்தவர்கள். இது தொடர்பாக நெதர்லாந்து அதிபர் மார்க் ரூட்டுக்கு புதின் இரங்கல் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், “இது மிக மிக சோகமான சம்பவம். உக்ரைன் விவகாரத்தில் விரைவாக அமைதித் தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது” என்று கூறியுள்ளார்.

மலேசிய விமானம் சுடப்பட்டது தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டு மென்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் வலியுறுத்தியுள்ளார்.

ரஷ்ய தயாரிப்பான எஸ்ஏ-11 ரக ஏவுகணை மூலம்தான் விமானம் வீழ்த்தப்பட்டிருக்க வேண்டு மென்று கூறும் அமெரிக்கா, இது போன்ற ஏவுகணையை உக்ரைனி லுள்ள புரட்சியாளர்கள் மட்டுமே தனியாக இயக்கியிருக்க முடியாது என்றும் இதற்கு தொழில்நுட்ப ஆற்றல் கொண்டவர்கள் உதவி செய்திருக்க வேண்டும் என்றும் கூறுகிறது. அதாவது ஏவுகணையை இயக்க ரஷ்ய ராணுவம் நிச்சயம் உதவியிருக்க வேண்டும் என அமெரிக்கா சந்தேகம் தெரிவித்துள்ளது.

இதில் வேறொரு முக்கியமான விஷயமும் கலந்திருக்கிறது. இருபதாவது சர்வதேச எய்ட்ஸ் மாநாடு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் (விமான விபரீதம் நடைபெற்ற) சில நாட்களில் தொடங்கவிருந்தது. சுமார் 12,000 பிரதிநிதிகள் பங்கேற்கும் இம்மாநாட்டில் அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், ராக் பாடகர் பாப் கெல்டாப் ஆகியோர் கலந்து கொள்வதாக இருந்தனர்.

இந்த மாநாட்டு பிரதிநிதிகள் சுமார் 100 பேர் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தில் பயணம் செய்தது தெரிய வந்துள்ளது. இந்த விமானம் மலேசியாவின் கோலாலம்பூர் வந்தவுடன், அங்கிருந்து மற்றொரு விமானம் மூலம் இவர்கள் மெல்போர்ன் செல்லவிருந்தனர். இந்நிலையில் கிழக்கு உக்ரைன் தாக்குதலுக்கு இலக்காகி இறந்து விட்டனர். மாநாட்டுக்கும் தாக்குதலுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா என்பதும் அலசப்படுகிறது.

முன்பெல்லாம் எதிரிகளைத் தாக்கினார்கள். பிறகு எதிரி நாட்டைச் சேர்ந்த அப்பாவி மக்களையும் தாக்கினார்கள். இப்போது இரு நாடுகளிலும் வசிக்காத அப்பாவிகளான பிற நாட்டினர் மீது வான்வழித் தாக்குதல் நடக்கிறது என்றால் அது உச்சத்தின் கொடூரம்.

இதெல்லாம் போக, ரஷ்ய அதிபரின் வேறொரு செயல்பாடு உக்ரைனை அதிக அளவில் கொதிக்க வைத்திருக்கிறது.

விளாடிமிர் புதின் சமீபத்தில் தொலைக்காட்சியில் உரையாற்றி இருக்கிறார். அதை ரூஸ்வெல்ட், சர்ச்சில், டிகாலே போன்றவர்களின் உரை போன்றது என்று புளகாங்கிதப்பட்டிருக்கிறார் புதினின் முக்கியப் பிரசாரகர். புதினின் பேச்சு அரசியல் பார்வை யாளர்களின் இமைகளுக்கு மேற்பு றம் உள்ள இரு பகுதிகளையும் உயர்த்த வைத்துள்ளது.

(இன்னும் வரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x