Last Updated : 18 Feb, 2015 10:30 AM

 

Published : 18 Feb 2015 10:30 AM
Last Updated : 18 Feb 2015 10:30 AM

சமத்துவம் மறுக்கும் சவுதி அரேபியா- 2

இரட்டை கோபுரத் தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள அல் காய்தா தீவிரவாதி குறிப்பாக மூன்று சவுதி இளவரசர்கள் பெயரைக் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் மூவருமே அமெரிக்காவுடன் ஆழ்ந்த தூதரக மற்றும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தவர்கள்.

இளவரசர் பந்தர் பின் சுல்தான் 1983-லிருந்து 2005 வரை அமெரிக்காவுக்கான சவுதி தூதராக பணி புரிந்தவர். மன்னர் சல்மானின் சகோதரி மகன். முன் னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். 2012-லிருந்து சென்ற ஆண்டு ஏப்ரல் வரை சவுதி உளவுத்துறை தலைவர்.

அடுத்ததாக இளவரசர் துர்கி அல் பைஸல். இவருக்கு வயது 69. (இளவரசர் என்றவுடன் உங் கள் மனதில் ஓர் இளைஞர் தோன்றி யிருந்தால் அதற்கு நான் பொறுப் பல்ல. மன்னர் அல்லாத அத்தனை அரச குடும்ப ஆண்களும் இளவரசர்கள்தான்).

இளவரசர் பந்தர் பின் சுல்தானுக்குப் பிறகு இவர்தான் அமெரிக்க தூதராகப் பணிபுரிந்தார். அவருக்கு முன்பாக சவுதி உளவுத்துறையின் தலைவர் இவர்தான். 2005-ல் இவர்மீது அரசல் புரசலாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. அல் கய்தாவுக்கு இவர் நிதி உதவிசெய்கிறார்! ஒரு பேட்டியில் “இந்தக் குற்றச்சாட்டு என் முகத்தில் ஓங்கி அறைவதற்கு சமமானது” என்று துடிப்புடன் பதிலளித்தார் இளவரசர்.

மூன்றாவது இளவரசர் அல்வலீது பின் தலாலுக்கு மேலே குறிப்பிட்ட இருவரை விட வயது குறைவுதான். 59. சவுதி அரேபியாவை நிறுவியவர் என்று கருதப்படும் மன்னர் அப்துல் அஸீஸின் பேரன். அரபு உலகின் பிரம்மாண்டமான கேளிக்கை நிறுவனமான ரொடானாவின் முதலாளி.

செப்டம்பர் 11 தாக்குதலைத் தொடர்ந்து நிதி உதவியாக ஒரு கோடி டாலரை நியூயார்க் மேயருக்கு அளிக்க முன் வந்தார் இவர். ஆனால் அதை ஏற்க மறுத்து விட்டார் மேயர். காரணம் மத்திய கிழக்கு நாடுகள் குறித்த அமெரிக்காவின் கொள்கையை இவர் விமர்சனம் செய்ததுதான்.

அல் காய்தா என்றவுடன் நம் மனதில் ஒசாமா பின் லேடன் நினைவு எழாமல் போகாது. அவருக்கும் சவுதிக்கும் உள்ள தொடர்பைக் கொஞ்சம் பார்ப்போம். சொல்லப்போனால் சவுதியோடு முதலில் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டவர் ஒசாமாவின் அப்பா முகமது பின் லேடன்தான்.

அவர் பிறந்தது ஏமென் நாட்டில். என்றாலும் அங்கு பஞ்சம் ஏற்பட பிழைப்புக்காக அவர் நாடிச் சென்ற நாடு சவுதி அரேபியா. தன் வாழ்க்கையைத் தொடர அதுவே சிறந்த இடம் என்று கருதினார். அங்கு நுழைந்தபோது அவரிடம் இருந்த பணம் கொஞ்சம்தான். ஆனால் நம்பிக்கை நிறைய.

சின்னச் சின்னக் கட்டடங்களை கட்டிக் கொடுக்கும் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டார். அவரது மனைவி (அதாவது பதினொன்றா வது மனைவி) 1957-ல் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றார். அந்தக் குழந்தை? கரெக்ட். ஒசாமா பின் லேடன்தான்.

குழந்தைகள், மனைவிகள் எல்லாமே அதிக எண்ணிக்கை. கஷ்டம் தாங்க முடியாத முகமது பின் லேடன் மன்னரை அணுகினார். அரண்மனையின் ஒரு புதிய பகுதியை சிறப்பாகக் கட்டித்தருகிறேன் என்றார். மன்னர் ஒப்புக் கொள்ள, மிகவும் சிறப்பாகவே கட்டுமானப் பணி நடந்தது.

மன்னரோடு நட்பு வளர்ந்தது. மன்னர் இறந்த பிறகு இளவரசர் பைஸல் மன்னரானார். ஆனால் அப்போது நாட்டின் நிதி நிலைமை மிகவும் மோசமாக இருந்தது.

முகமது பின் லேடன் தன் பணத்தை எடுத்து அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளமாகக் கொடுத்தார். மன்னர் உருகினார். அதற்குப் பிறகு அரசின் கட்டட வேலைகள் எல்லாம் முகமது பின் லேடனுக்குத்தான். சின்ன மீனைப் போட்டு பெரிய மீனை லாவகமாகக் கைப்பற்றிவிட்டார்.

கால ஓட்டத்தில் பொதுப் பணித்துறை அமைச்சராக்கப் பட்டார். மெக்கா, மதினா மசூதிகள் பராமரிப்பும் அவருக்கு ஒப்படைக்கப் பட்டது.

ஒசாமா பின் லேடன் வளர்ந்தார். கூடவே அவர் கனவும் வளர்ந்தது. அந்தக் கனவு “இஸ்லாமியர்களால் மட்டுமே நிரம்பிய ஓர் உலகம்”.

ஒசாமா பின் லேடன் தன் பள்ளிப் படிப்பை மேற்கொண்டது மதினா மற்றும் ஜித்தா ஆகிய நகரங்களில். பிறகு ‘கிங் அப்துல் அஜீஸ் பல்கலைக் கழகத்தில்’ நிர்வாகம் மற்றும் பொருளாதாரத் தில் பட்டம் பெற்றார்.

பள்ளி நாளிலிருந்தே ஒசாமாவுக்கு ‘முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம்’ என்ற அமைப்புடன் தொடர்பு இருந்தது. என்றாலும் ஆரம்பக் கட்டத்தில் ஒசாமா பின் லேடனுக்கு சவுதி அரேபியாவில் நிலவிய கடுமையான மதச் சட்டங்கள் ஏற்புடையதாக இல்லை. ஆனால் நிகழ்ந்தது ஒரு பெரும் திருப்பம்.

சவுதி அரேபிய மன்னர் ஒசாமாவின் அப்பாவிடம் மெக்கா, மதீனா மசூதிகளை புதுப்பிக்கும் பணியை ஒப்படைத்தபோது அங்கிருந்த பல இஸ்லாமிய புனித நூல்களை (தற்காலிகமாக பாதுகாப்பாக வைத்துக் கொள்ள) தன் வீட்டுக்கு எடுத்து வந்தார். அவற்றை ஒசாமா பின் லேடனும் படித்தார்.

படிக்கப் படிக்க அவருக்கு இஸ்லாமிய மார்க்கத்தின் மேல் ஆழமான நம்பிக்கை வந்தது.

மேலை நாட்டு கலாச்சாரம் உலகம் முழுவதும் பரவி இருக்க, அது இஸ்லாமியர்களைத் தீண்டா மல் இருக்க வேண்டுமானால் அதற்கு புனிதப் போரும் துப்பாக்கியும்தான் ஒரே வழி என்ற சித்தாந்தம் அவர் மனதில் அழுத்தமாகப் பதிந்தது.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x