Last Updated : 11 Feb, 2015 10:09 AM

 

Published : 11 Feb 2015 10:09 AM
Last Updated : 11 Feb 2015 10:09 AM

வடிவத்தில் சிறிய வாடிகன்: வாடிகன் 3

ஒரு நாட்டின் தலைவர் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்?

வாடிகனைப் பொறுத்தவரை அதன் தலைவரான போப் தேர்ந்தெடுக்கப்படும் முறை மிக வித்தியாசம், வெகு சுவாரசியம். அது பரம்பரை ஆட்சியா, ஜனநாயகமா என்று வரையறுக்க முடியாது. அது ஒரு தனி வழி.

கார்டினல்கள் என்று அழைக்கப்படுபவர்கள் (இவர்களும் பிஷப்கள்தான்) உலகெங்கும் உள்ள நாடுகளில் பரவி இருப்பார்கள். இவர்களைத் தேர்ந்தெடுப்பது போப்தான். போப் இறந்தாலோ, ராஜினாமா செய்தாலோ புதிய போப்பை தேர்ந்தெடுப்பது இந்த கார்டினல்கள்தான். ஆனால் எல்லா கார்டினல்களுக்கும் இந்த உரிமை கிடையாது. 80 வயதுக்கு அதிகமான கார்டினல்களுக்கு வாக்குரிமை கிடையாது.

புதிய போப்பை தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால், இந்த கார்டினல்கள் சில நாட்களுக்கு வாடிகனில் தங்குவார்கள். பலவிதமாக ஆலோசனை நடத்துவார்கள். உலக அளவில் கத்தோலிக்க மதத்திற்கு என்ன சவால்கள் என்பது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். அவற்றை எதிர் கொள்ள யாரால் முடியும் என்பது குறித்தும் விவாதிப்பார்கள். போப்புக்கான தேர்தலை ‘கான்க்ளேவ்’ என்பார்கள்.

ஒரு வேளை போப் இறந்ததனால் உண்டான புதிய தேர்தல் என்றால் இறந்தவரின் உடல் புதைக்கப்பட்ட பிறகு தேர்தல் நடத்தப்படும். பிறகு கார்டினல்கள் அனைவரும் தூய பீட்டரின் பசிலிக்கா என்ற பகுதியில் கூடுவார்கள். உள்ளே நடக்கும் எந்த விவரத்தையும் வெளியே கசியவிட மாட்டோம் என்று ரகசிய பிரமாணம் செய்வார்கள்.

பிறகு கதவு மூடப்படும். உள்ளே ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும். ஒவ்வொரு கார்டினலும் ஏசுவைத் துதித்துவிட்டு தன் தேர்வு அடங்கிய வாக்குச் சீட்டை இரண்டாக மடித்து அங்குள்ள பெரிய கோப்பைக்குள் போடுவார்கள்.

மூன்றில் இரு பங்கு வாக்குகளையாவது பெற்றிருந்தால்தான் ஒருவர் போப் ஆக முடியும். அப்படி யாரும் இல்லை என்றால், மிகக் குறைந்த வாக்குகள் பெற்ற கார்டினல்களின் பெயர்கள் நீக்கப்பட்டு அதிக வாக்குகள் பெற்றவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க மீண்டும் ரகசிய வாக்குப் பதிவு நடத்தப்படும்.

இதற்குள் வெளியே மக்கள், தங்கள் புதிய போப் யார் என்பதை அறிய ஆவலுடன் காத்திருப்பார்கள்.

போப் தேர்ந்தெடுக்கப்படாத சுற்றுகளில், மூடிய அறைக்குள் இருக்கும் சில கார்டினல்கள் சில குறிப்பிட்ட ரசாயனபொருட்களை எரிப்பார்கள். கருப்பான புகை வெளியேறும். வெளியே காத்திருப்பவர்கள் நிலைமையைப் புரிந்து கொண்டு (அதாவது போப்பைத் தேர்ந்தெடுப்பதில் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை என்பதை அறிந்து கொண்டு) ஆதங்கமோ, சலிப்போ அடைவார்கள்.

போப் தேர்ந்தெடுக்கப்பட்டால் வெள்ளைப் புகை வெளியேறும். (அதாவது அதற்குரிய ரசாயனங்கள் எரிக்கப்படும்). வெளியே உற்சாகக் கூக்குரல்கள் கேட்கும். ஊடகப் பிரதிநிதிகள் சுறுசுறுப்படைவார்கள். யார் புதிய பிஷப் என்பதை அறியும் ஆவல் கரை கடக்கும்.

தேர்ந்தெடுக்கப்பட்டவரை “போப் ஆவதற்கு உங்களுக்கு சம்மதமா?” என்று கார்டினர்களில் சீனியர் கேட்பார். ஒத்துக் கொள்பவர், தனக்கு ஒரு புதிய பெயரை சூட்டிக் கொள்வார். போப்புக்கு உரிய ஆடைகளை அணிந்து கொள்வார்.

அந்த அரங்கின் பால்கனிக்குச் சென்று ஆசி கூறுவார். அதற்குக் கட்டியம் கூறுவது போல அவருக்கு முன்பாக பால்கனியை அடையும் மிக மூத்த கார்டினல், “ஹபேமஸ் பபம்” என்பார். இதற்குப் பொருள் “நமக்கு ஒரு போப் கிடைத்து விட்டார்” என்பதாகும்.

பிரபல நாவலாசிரியர் டான் ப்ரவுன் எழுதிய ‘Angels and Demons’ என்ற புதினத்தில் போப் தேர்வு குறித்து விரிவாகவே விளக்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்ல, வாடிகன் குறித்த பல உள் விவரங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. (ஆனால் தீவிர கிறிஸ்தவர்கள், Angels and Demons மற்றும் The Da Vinci Code ஆகிய நூல்களை எழுதிய டான் ப்ரவுன் மீது கடும்கோபம் கொண்டனர். காரணம் ஏசுநாதர் மற்றும் கிறிஸ்தவ மதத்தை வழக்கமல்லாத கோணங்களில் விவரித்திருந்தன விற்பனையில் சாதனை படைத்த இந்த நூல்கள்).

போப்பைத் தேர்ந்தெடுக்கும் கார்டினல்கள் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதையும் அறிந்து கொள்ளலாமா?

இவர்கள் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள். பல கட்டங்களைத் தாண்டிதான் கார்டினல் என்ற இடத்தை அவர்களால் அடைய முடியும். இவர்கள் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். முக்கியப் பாடமாக எதையும் எடுத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் கிறிஸ்தவ தத்துவத்தை எடுத்துக் கொண்டிருந்தால் மேலும் நல்லது. அவர் திருமணமாகாதவராக இருக்க வேண்டும்.

‘’இனி வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சரியத்தையே கடைப்பிடிப்பேன்’’ என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். மனைவியை இழந்தவரும் கார்டினல் ஆகலாம். ஆனால் அவரும் மேற்படி உறுதிமொழியை எடுத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு மத நெறிகளில் தன்னை மேலும் மேலும் ஈடுபடுத்திக் கொண்டு நாளடைவில் ஒரு பிஷப் ஆக வேண்டும். இதற்குப் பிறகுதான் ஒருவர் கார்டினல் ஆக முடியும். ஏற்கனவே குறிப்பிட்டபடி இதற்குள் அவருக்கு எண்பது வயது நிறைவடையாமல் இருந்தால்தான் போப்பை தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறையில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு உண்டு.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x