Last Updated : 24 Jan, 2015 02:48 PM

 

Published : 24 Jan 2015 02:48 PM
Last Updated : 24 Jan 2015 02:48 PM

போபால் விஷவாயு விபத்து குறித்து பேச அமெரிக்க அதிபர் ஒபாமா தவறக் கூடாது: அம்னெஸ்டி

இந்தியா செல்லும் அமெரிக்க அதிபர் ஒபாமா தனது பயணத்தின்போது போபால் விஷவாயு விபத்து குறித்து பேச தவறக் கூடாது என்று சர்வதேச மன்னிப்புச் சபை (அம்னெஸ்டி) கேட்டுக்கொண்டுள்ளது.

ஜனவரி 26-ந் தேதி டெல்லியில் நடைபெற இருக்கும் குடியரசு தினவிழாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொள்கிறார். குடியரசு தின விழா அணிவகுப்பில் அவர் முதன்மை விருந்தினராக பங்கேற்கிறார்.

இந்த நிலையில் இந்தியாவில் வணிகம் செய்ய அமெரிக்க நிறுவனங்களுக்கு உள்ள ஆர்வம் குறித்து பேச இருக்கும் ஒபாமா, அதே நேரத்தில் போபால் விழவாயு விபத்து குறித்தும் பேச வேண்டியது அவசியம் என்று சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

இது குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை வெள்ளிக்கிழமையன்று கூறுகையில்," 1984-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் விஷ வாயுக் கசிவு ஏற்பட்டது. உலகின் மிகவும் மோசமான தொழிற்சாலை விபத்தாகக் கருதப்படும் இதில் இதுவரை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என கருதப்படுகிறது.

விஷவாயுக் கசிவு ஏற்பட்டு விபத்துக்குள்ளான தொழிற்சாலை இருந்த பகுதியில் இன்றுவரை 350 மெட்ரிக் டன் நச்சுக் கழிவுப் பொருட்கள் அகற்றப்படாமல் உள்ளது.

அமெரிக்க நிறுவனத்தின் கவனக்குறைவால் ஏற்பட்ட இந்த விபத்து குறித்து அந்நாட்டு அதிபர் ஒபாமா பேசத் தவறினால், இனி வரும் காலங்களில் அங்கு தொழில் தொடங்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு மனித உரிமை மீறல்களில் ஈடுபட தைரியம் கொடுப்பதாக ஆகிவிடும்.

இந்திய குடியரசு தினவிழாவில் பங்கேற்கச் செல்லும் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு, போபால் விஷவாயு விபத்தில் தங்களது உறவுகளை இழந்து துயரத்தில் வாடும் மக்களின் வருத்தங்களை பகிர்ந்துகொள்ளும் பொறுப்பும் உள்ளது.

அதே போல, இந்தியாவில் உச்ச நீதிமன்றம் அளித்து வரும் சம்மன்களை விபத்துக்கு தொடர்புடைய டவ் கெமிக்கல் நிறுவனம் தொடந்து புறக்கணித்து வருகிறது. உலகின் மிகவும் மோசமான தொழிற்சாலை விபத்தாகக் கருதப்படும் இந்த சம்பவத்துக்கு பொறுப்பான அமெரிக்க நிறுவனம் வழக்கு விசாரணைக்கு வராமல் புறக்கணித்து வருவது குறித்து அந்நாட்டு அதிபர் ஒபாமா விளக்கம் அளிக்க வேண்டும்.

அமெரிக்க அதிபர் ஒபாமா இந்த விவகாரம் குறித்து பேசினால் மட்டுமே, இந்தியாவில் இனி வரும் காலங்களில் தொழில் தொடங்க நினைக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு, தங்களது நடவடிக்கைகளால் இந்திய குடிமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என்பது அவர்களுக்கு தோன்றும்.

அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க விருப்பத்துடன் இருக்கிறது என்பதை பேசப்போகும் அந்நாட்டு அதிபர் ஒபாமா இந்திய மக்களின் நலன் சார்ந்த விஷயத்தை புறக்கணிக்க கூடாது" என்று கேட்டுக்கொண்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x