Published : 20 Jan 2015 10:08 AM
Last Updated : 20 Jan 2015 10:08 AM

உலக மசாலா: உப்பால் ஆன உணவகம்

ஈரானில் ஷிராஸ் பகுதியில் இருக்கிறது சால்ட் ரெஸ்டாரண்ட். உணவகத்தின் சுவர், பார், மேஜை, நாற்காலி என்று எல்லாமே முழுக்க முழுக்க பாறை உப்பால் உருவாக்கப்பட்டிருக்கிறது. எமிட்டாஸ் டிசைனிங் க்ரூப் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் கட்டிடங்களைக் கட்டுவதில் நிபுணர்கள். அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு கட்டிடங்களைக் கட்டி வருகிறார்கள்.

அருகில் உப்புச் சுரங்கம் இருப்பதால் உப்பிலேயே கட்டிடத்தைக் கட்டிவிட்டனர். பாறை உப்பிலிருந்து செய்யக்கூடிய இந்தப் பொருள்களை மீண்டும் மீண்டும் மறு உபயோகம் செய்யலாம். உப்புக்குக் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் இருப்பதால், வெளியில் இருந்து வரும் அசுத்த காற்றை வடிகட்டி, சுத்தமான காற்றை உணவகத்துக்குள் அனுப்புவதாகச் சொல்கிறார்கள். இந்த வித்தியாசமான உணவகத்தைப் பார்ப்பதற்கே ஏராளமானவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்.

அழகான உணவகம்!

அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியாவில் பில்லி ஜீசஸ் மிகவும் பிரபலமானவர். ஜீசஸ் போல முடி வளர்த்து, வெள்ளை ஆடை அணிந்து, கைகளில் ஒரு தடியை எடுத்துக்கொண்டு அவர் செல்லும்போது, ஜீசஸாகவே காட்சியளிக்கிறார். தினமும் பெரிய சிலுவையைச் சுமந்துகொண்டு 7 மைல்கள் தூரம் நடந்து செல்கிறார் பில்லி ஜீசஸ். இவரின் உண்மையான பெயர் மைக்கேல் கிராண்ட். காதல் தோல்வி ஏற்பட்டபோது, தன் காதலியின் கார் முன்பு போய் விழுந்ததில் பலத்த காயம். நிறைய அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக உடல் தேறியபோது, ஹெராயின் பழக்கம் ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டு வந்தபோது, தன்னுடைய பெயரை பில்லி ஜீசஸ் என்று மாற்றிக்கொண்டார். கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து ஜீசஸ் போலவே முடியையும் உடையையும் அமைத்துக்கொண்டார். `நான் உண்மையான ஜீசஸ் அல்ல. ஜீசஸ் மீதுள்ள அபாரமான அபிமானத்தால் இப்படி நடந்துகொள்கிறேன்’ என்கிறார் பில்லி. நிதி கேட்காவிட்டாலும் பில்லிக்கு உடை, உணவு போன்றவற்றை அன்புடன் வழங்குகிறார்கள் மக்கள்.

ஆடை மட்டும் மாறினால் போதுமா…

நாசா விஞ்ஞானிகள் 2003-ம் ஆண்டு பிகிள் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பினார்கள். ஆனால் குறிப்பிட்ட நாளில் பிகிள் தரை இறங்கியதற்கான எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. விண்வெளியில் எங்கேயாவது சிதைந்து போயிருக்கலாம் என்று எண்ணிக்கொண்டிருந்தனர். 2013-ம் ஆண்டு செவ்வாய் கிரகத்திலிருந்து பெறப்பட்ட புகைப்படங்களில் பிகிள் சரியாகத் தரை இறங்கியதும் அதற்குப் பிறகு சரியாக வேலை செய்யவில்லை என்பதும் தெரியவந்திருக்கிறது. பிகிள் பத்திரமாகத் தரை இறங்கிய விஷயத்தை அறிந்துகொண்ட நாசா விஞ்ஞானிகள், மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

தொலைந்த பொருள் கிடைச்சா சந்தோஷமாத்தான் இருக்கும்!

ஹன்னா விண்டர்போர்ன் பிரிட்டன் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். ஆப்கானிஸ்தான் சென்ற பிரிட்டன் படையுடன் ஹன்னாவும் சென்றார். அங்கே பணிபுரிந்த காலத்தில் அவருக்குப் பெண்ணாக மாற வேண்டும் என்ற சிந்தனை அதிகமானது. பிரிட்டனுக்குத் திரும்பியவர் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். ஓராண்டு காலத்தில் முழுமையான பெண்ணாக மாறிவிட்டார். தன்னுடைய பாலின மாறுபாட்டால் ராணுவத்தில் தொடர்ந்து பணிபுரிய அனுமதி கிடைக்குமா என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தார் ஹன்னா. ஆனால் பிரிட்டன் ராணுவத்தில் முதல் திருநங்கை என்ற அடையாளத்தோடு, ராணுவத்தில் பணி புரிய அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. பெண் ராணுவ அதிகாரியாகக் கம்பீரமாகத் தன் பணியைத் தொடர்கிறார் 27 வயது ஹன்னா.

வரவேற்க வேண்டிய விஷயம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x