Last Updated : 10 Jan, 2015 10:26 AM

 

Published : 10 Jan 2015 10:26 AM
Last Updated : 10 Jan 2015 10:26 AM

இந்தியாவுடனான உறவை மேம்படுத்த முயற்சி: இலங்கை புதிய அதிபர் உறுதி

இந்தியாவுடனான உறவை மேம்படுத்த அனைத்துவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று இலங்கையின் புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். சர்வாதிகாரம், ஊழல், குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் என இருந்து வந்த ராஜபக்சவின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

ராஜபக்சவின் கட்சியில் இருந்து விலகி, எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட மைத்ரிபால சிறிசேனா 51.3 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்தார். 47.6 சதவீத வாக்குகளுடன் ராஜபக்ச தோல்வியைத் தழுவினார்.

ஊழலை வேரறுப்பதுடன், அரசியலமைப்பில் திருத்தங்கள் கொண்டு வருவதன் மூலம் நாட்டில் ஜனநாயக சீர்திருத்தத்தைக் கொண்டு வருவேன் என்று உறுதியளித்த சிறிசேனா, வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நாடெங்கும் மக்கள் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடினர். இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து இலங்கை பங்குச் சந்தையில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு உச்சத்தை எட்டியுள்ளது.

ராஜபக்சவைப் போல மைத்ரிபால சிறிசேனாவும் புத்த மதப் பின்னணியில் இருந்து வந்திருந்தாலும் தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் ஆதரவையும் அவர் பெற்றிருந்ததே இந்த வெற்றிக்குக் காரணமாகும்.

புதிதாக அதிபர் பதவிக்கு வந்துள்ள சிறிசேனா, வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் தற்போது சீனாவின் பக்கம் அதிகம் சாய்ந்துள்ள நிலையில் இருந்து நாட்டை சமநிலைக்குக் கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிசேனா வெற்றி பெற்றவுடன் முதலாவதாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி, இந்த மாற்றத்தை வரவேற்றதுடன் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டதற்காக‌ ராஜபக்சவையும் பாராட்டியுள்ளார். அதைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறிசேனாவை தொலைபேசியில் அழைத்து தன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் பல ஆண்டுகளாக வரலாற்று ரீதியான உறவை இலங்கை கொண்டிருக்கிறது. சமீபகாலமாக ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவுடனான உறவில் அவ்வப்போது உரசல் ஏற்பட்டு வந்தது. ஆனால் மைத்ரிபால சிறிசேனா, 'இந்தியாவுடனான எங்கள் உறவை பலப்படுத்த முயற்சிகள் எடுக்கப்படும்' என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், "இந்தியா எங்களுக்கு மிகவும் முக்கியம். ஆனால் அதேசமயம் நாங்கள் சீன முதலீட்டாளர்களுக்கு எதிரானவர்களும் அல்ல. சீனாவுடனும் நாங்கள் நல்ல உறவைக் கொண்டிருப்போம்" என்றார். சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹாங் லீ, 'சீனாவுடன் நட்புறவை இலங்கை பின்பற்றும் என்று நம்புவதோடு, ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்ட முதலீட்டுத் திட்டங்களுக்கும் அது ஆதரவளிக்கும் என்று நம்புவதாக' கூறியுள்ளார்.

நாட்டின் மக்கள் தொகையில் 70 சதவீதம் சிங்கள பவுத்தர்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் ராஜபக்ச பிரபலமாக இருந்தாலும், வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்கள் மற்றும் இஸ்லாமிய மக்களின் ஆதரவுகளை மிக அதிகளவு பெற்றதாலேயே சிறிசேனா வெற்றி பெற்றிருக்கிறார் என்று தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

2009ம் ஆண்டில் விடுதலைப் புலிகளை அழித்ததைத் தொடர்ந்து 2010ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் மிகப்பெரும்பாண்மையான வெற்றியைப் பெற்று ராஜபக்ச அதிபரானார். ஆனால் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம், சர்வாதிகாரம் ஆகிய காரணங்களால் அவர் தொடர்ந்து விமர்சனங்களைச் சந்தித்து வந்தார். அவரின் ஆட்சிக் காலத்தில் பொருளாதார வளர்ச்சி இருந்தாலும் அதில் நிறைந்திருந்த‌ ஊழல் குற்றங்கள் மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கியது.

இந்நிலையில், மூன்றாவது முறையாகவும் அதிபர் பதவியில் அமரலாம் என்ற நோக்கத்தில் தன் பதவிக் காலம் முடிவதற்கு முன்பே அதிபர் தேர்தலை அறிவித்தார். ஆனால் தன்னுடன் இரவு உணவை எடுத்துக்கொண்ட சிறிசேனாவே அடுத்த நாள் காலையில் தனக்கு எதிரான போட்டி வேட்பாளராக நிற்பார் என்று ராஜபக்ச நினைத்துக்கூடப் பார்த்திருக்கவில்லை.

"ராஜபக்ச பின்பற்றிய பொருளாதாரக் கொள்கைகளில் எதிர்க்கட்சிகளுக்கு விருப்பமில்லை என்றும் அதன் காரணமாகவே அவருக்கு எதிராக அனைவரும் ஒன்று திரண்டனர்" என்று ஸ்டாண்டர்ட் அண்ட் புவர்'ஸ் ரேட்டிங் சர்வீஸஸ் எனும் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிபருக்கு இருக்கக் கூடிய அதிகபட்ச அதிகாரங்கள் குறைக்கப்படும் என்று தெரிவித்த சிறிசேனா இன்னும் 100 நாட்களில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல சீனா கம்யூனிகேஷன்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துடனான 1.5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.9 ஆயிரம் கோடி) மதிப்பிலான ஒப்பந்தத்தில் நடந்துள்ள ஊழல்கள் உள்ளிட்ட பல ஊழல் குற்றங்களை விசாரிக்க உள்ளதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x