Published : 21 Jan 2015 07:59 AM
Last Updated : 21 Jan 2015 07:59 AM

தமிழர்களுக்கு கூடுதல் உரிமைகள் அளிக்கும் 13-வது சட்டத் திருத்தம் நிறைவேற்றப்படும்: இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு

இலங்கையில் தமிழர்களுக்கு கூடுதல் உரிமைகள் அளிக்கும் 13-வது சட்டத் திருத்தம் நிறைவேற்றப்படும் என்று இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

1987-ம் ஆண்டு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி - இலங்கை அதிபர் ஜெயவர்த்தன ஆகியோர் இலங்கை தமிழர்களின் அரசியல் உரிமைகள் சார்ந்த குறைகளைத் தீர்ப்பதற்காக ஒரு உடன்பாடு செய்துகொண்டனர். இதன்படி இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு - கிழக்கு மாகாணங்களை இணைப்பது உட்பட பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு 1988-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. எனினும் இலங்கையில் ஏற்பட்ட பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கு நடுவே 13-வது சட்டத் திருத்தம் செல்லாது என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதற்கிடையில், இலங்கையில் ராஜபக்சவின் தோல்விக்குப் பிறகு 13-வது சட்டத் திருத்தம் நிறைவேற்றப்படுவது குறித்து மீண்டும் பேச்சு எழுந்தது. முக்கியமாக இந்தியாவும் இதற்கு ஆதரவு அளித்தது. இலங்கையில் 13-வது சட்டத்திருத்தம் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

இந்நிலையில் மைத்ரிபால சிறிசேனா அதிபரான பிறகு நேற்று இலங்கை நாடாளுமன்றம் முதல்முறையாக கூடியது. இதில் பேசிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியது:

13-வது சட்டத் திருத்தத்தை திட்டமிட்டபடி முழுமையாக நிறைவேற்றுவோம். இலங்கையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் யோசனைகள், ஆட்சேபங்கள், குற்றம், குறைகளுக்கு செவிசாய்க்க புதிய அரசு தயாராகவே இருக்கிறது. தேசிய அளவில் எழும் கேள்விக்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து தீர்வு காண வேண்டும். இது நம் அனைவருக்குமான சவால். நமது நாடாளுமன்றத்துக்கு வெளியே எந்த பிரச்சினையையும் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்த புதிய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்

இவ்வாறு ரணில் கூறினார்.

இலங்கை நாடாளுமன்றத்தை முன்னாள் அதிபர் ராஜபக்ச நீர்த்துப் போகச் செய்தார் என்பதையே ரணில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சவை எதிர்த்துப் போட்டியிட்ட சிறிசேனாவுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பும், தமிழர்களும் பெரு வாரியாக ஆதரவளித்து வெற்றி பெறச் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x