Published : 27 Dec 2014 09:44 AM
Last Updated : 27 Dec 2014 09:44 AM

உலக மசாலா: மனிதர்களைப் போல அன்பு பாராட்டிய கரடிகள்

கனடாவில் மைனஸ் 18 டிகிரி வெப்பநிலை நிலவுகிறது. ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்ஸி டிஸ்ஹென்கோ என்ற புகைப்படக்காரர் கேமராவில் இரண்டு துருவக் கரடிகள் சிக்கின. 5 வயதான இந்தக் குட்டிகள் நாள் முழுவதும் மனிதர்களைப் போலவே தங்கள் அன்பைப் பரிமாறிக்கொண்ட காட்சி அபூர்வமானது. மனிதர்களைத் தவிர, சகோதரப் பாசத்தை இந்தத் துருவக் கரடிகளிடம்தான் பார்க்கிறேன் என்கிறார் அலெக்ஸி.

அடடா! பிரமாதம்!

ஜார்ஜியாவில் வசிக்கிறார் கிறிஸ்டினா. புகைப்படங்கள் எடுப்பதற்காக திருமணக் கோலத்தில் ஒரு மாலுக்கு வரச் சொல்லியிருந்தார் நண்பர். கிறிஸ்டினாவும் வெள்ளை கவுனில் மணப்பெண்ணுக்குரிய அலங்காரத்துடன் மாலுக்குச் சென்றார். மாலில் மிகப் பெரிய கிறிஸ்துமஸ் மரம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அங்கே நின்று நண்பருக்காகக் காத்திருந்தார் கிறிஸ்டினா. அப்பொழுது பூங்கொத்துகளுடன் வந்து சேர்ந்தார் கிறிஸ்டினாவின் அப்பா.

ஒன்றும் புரியாமல் ஆச்சரியத்துடன் நின்றுகொண்டிருந்தார் கிறிஸ்டினா. சில நிமிடங்களில் கிறிஸ்துமஸ் மரத்துக்குப் பின்பக்கம் உறவினர்களும் நண்பர்களும் குழுமினார்கள். அங்கே மணமகன் பிரையன் காத்திருந்தார். கிறிஸ்டினாவும் அங்கே அழைத்து வரப்பட்டார். இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. புகைப்படம் எடுக்க வந்த இடத்தில் தன் திருமணமே நடந்து முடிந்த ஆனந்த அதிர்ச்சியில் இருக்கிறார் கிறிஸ்டினா!

ம்ம்… எப்படி எல்லாம் சர்ப்ரைஸ் கொடுக்கிறாங்க பாருங்க!

பூமியின் மிக ஆழமான பகுதி மரியானா ட்ரென்ச். இங்கே ஹவாய் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தபோது, புதிய வகை மீனைக் கண்டறிந்திருக்கிறார்கள். ஜெஃப் ட்ராஸென், பட்டி ஃபையர் இருவரின் கேமராவில் பல முறை இந்த மீன் சிக்கியிருக்கிறது. ஆழ்கடலில் ஸ்னெயில் ஃபிஷ்தான் வசிக்கும் என்றாலும், இது ஸ்னெயில் ஃபிஷ் வகையைச் சேர்ந்தது இல்லை. இதுவரை இந்த மீன் கண்டறியப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. வெள்ளை நிறத்தில் நீண்ட வாலும் துடுப்புகளும் கொண்ட இந்த மீனைப் பற்றி இன்னும் தெளிவான படங்களும் செய்திகளும் இனிமேல்தான் வெளிவரும் என்கிறார்கள்.

ஆழ்கடல் இன்னும் எத்தனை மர்மங்களை ஒளிச்சு வச்சிருக்கோ!

கிறிஸ்துமஸுக்குத் மனைவி பரிசாக நகைக் கேட்டார். அவருக்கு பிளாட்டினத்தில் கற்கள் பதித்த மோதிரத்தைப் பரிசாக வழங்கினேன். ஆனால் அது அவரைச் சந்தோஷப்படுத்துமா என்று தெரியவில்லை என எழுதிவிட்டு, புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார் ஜொனாதன். பளிங்கு கோப்பையின் கைப்பிடி, மோதிரம் போன்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கைப்பிடிக்குள் நுழைத்தால் மோதிரம் மாட்டிக்கொண்டது போலத் தோன்றும். இணையத்தில் பலரும் இந்த யோசனைக்காக மனைவியிடம் இருந்து விவாகரத்து கிடைக்கும் என்று கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால் ஜொனாதனின் மனைவி, கணவனின் ரசனையைப் பாராட்டிவிட்டார்!

ரசிக்கிற மாதிரி இருக்கிறதாலே தப்பிச்சீங்க ஜொனாதன்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x