Last Updated : 04 Dec, 2014 10:20 AM

 

Published : 04 Dec 2014 10:20 AM
Last Updated : 04 Dec 2014 10:20 AM

பிறவிப் பகைவர்கள் பாலஸ்தீனம், இஸ்ரேல் 9

ராபின் இறுதி ஊர்வலத்துக்கு யாசர் அராபத் செல்லவில்லை. வீண் குழப்பங்கள் விளைய வேண்டாமே என்பதுதான் காரணம். பிறகு ராபினின் மனைவியை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார். அப்போது ‘’ராபின் ஒரு சமாதானக் கதாநாயகன் மட்டுமல்ல. என் நெருங்கிய நண்பரும்கூட’’ என்று அராபத் கூற, “உங்களைத் தன் சமாதான முயற்சிகளின் கூட்டாளி என்றே ராபின் என்னிடம் கூறுவதுண்டு’’ என்று நெகிழ்ச்சியாகக் கூறியிருக்கிறார் திருமதி ராபின்.

பொதுவாக ஒரு நாட்டின் பிரதமர் திடீரென்று இறந்து போய், தற்காலிகமாக மற்றொருவர் அந்தப் பொறுப்பை ஏற்றால் அந்தப் புதியவரைப் பற்றி மற்ற நாட்டினர் அறிந்து கொள்ள கொஞ்ச காலம் ஆகும். ஆனால் இஸ்ரேல் பிரதமர் ராபின் படுகொலை செய்யப்பட்ட வுடன் தற்காலிகப் பிரதமராகப் பொறுப்பேற்ற ஷமின் பெரெஸைப் பற்றி உலக அளவில் ஏற்கெனவே பலர் அறிந்திருந்தனர் என்றால் அதற்கு முக்கியக் காரணங்கள் உண்டு.

யாசர் அராபத்துடன் இஸ்ரேல் செய்து கொண்ட ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் இதற்கு முதல் காரணம். தனி பாலஸ்தீனம் பிறந்ததற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வெள்ளை மாளிகைக்குச் சென்ற போது அங்கு தனக்கு இணையான கவனிப்பு பெரெஸுக்கும் கிடைக்கும்படி பார்த்துக் கொண்டார் இஸ்ரேலியப் பிரதமர் ராபின்.

மற்றொரு காரணம் பெரெஸுக் குக் கிடைத்த அமைதிக்கான நோபல் பரிசு. அமைதிக்கான நோபல் பரிசு அராபத், ராபின், பெரஸ் ஆகிய மூவருக்கும் இணைந்துதான் வழங்கப்பட்டிருந்தது.

பெரெஸ் உலகறிந்தவராகி விட்டாலும் உள்ளூரிலும் அவருக்குப் போதிய ஆதரவு இருந்தால்தான் அவரால் ‘தற்காலிகப் பிரதமர்’ என்ற அடைமொழியை நீக்கிக் கொள்ள முடியும். அவர் ‘நெஸ்ஸெட்’டின் (இஸ்ரேல்பாராளுமன்றத்தின் பெயர் அது) நம்பிக்கையைப் பெற்று பிரதமராகி விடுவார் என்றே பலரும் நம்பினார்கள்.

இஸ்ரேல் பாராளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவரான நெதன் யாஹு, பெரஸின் தேர்வுக்கும் அவரது முயற்சிகளுக்கும் குறுக்கே நிற்கப் போவதில்லை என்று வேறு கூறியிருந்தார். அடுத்த பாராளுமன்றக் கூட்டம் கூடும்போது பெரஸ் பெறவிருக்கும் நம்பிக்கைத் தீர்மா னத்துக்குத் தான் எந்தவித இடைஞ்சலும் செய்யப் போவதில்லை என்று அவர் கூறினார். என்றாலும் ராபினுக்கு உள்ள ‘கவர்ச்சி’ பெரெஸுக்கு மக்களிடையே இல்லை என்கிற உண்மையை அரசியலாக்காமல் எதிர்கட்சி விடுமா என்பது பலருக்கும் சந்தேகமாகவே இருந்தது.

ராபின் மறைவுக்குப் பின் இஸ்ரேல் சீரான வேகத்தில் பாலஸ்தீனத்துடனான சமாதான முயற்சிகளைத் தொடருமா என்ற கேள்வியும் உலகெங்கும் தோன்றியது.

ஏற்கெனவே எடுக்கப்பட்ட சமாதான முயற்சிகளின் பல்வேறு கட்டங்களில் பெரெஸ் முக்கியப் பங்கு வகித்திருக்கிறார் என்பதால் சமாதானம் தொடருமென்ற நம்பிக்கையும் படர்ந்தது. பெரெஸும் இதற்கான உறுதி மொழியை அளித்தார். அடுத்த வருடம் பொதுத் தேர்தல் வந்தது.

வெளியுறவு அமைச்சரும், அமைதி ஒப்பந்தத்திற்குப் பாடுபட்டவருமான பெரஸ்தான் பிரதமராவார் என்று பல நாடுகளும் எதிர்பார்த்திருக்க, தேர்தலில் நெதன்யாஹு வென்றார். இவர் ஒரு தீவிர யூதர்!

“பாலஸ்தீனர்களுக்கு அதிகம் விட்டுக் கொடுத்ததால்தான் இஸ்ரேலின் பிரச்சினை தொடரு கிறது’’ என்று தேர்தலின்போதே முழுக்கமிட்டவர் இவர். அமைதி ஒப்பந்தத்தை இவர் மதிப்பாரா என்பது கேள்விக் குறியானது. பிரதமரான பிறகு வெளிப்படை யாக இப்படிச் சொல்லவில்லை என்றாலும், ஒப்பந்த விதிகளை செயல்படுத்துவதில் இவர் போதிய முனைப்பு காட்டவில்லை.

எல்லாம் கிடக்க ரொம்ப ஸென்ஸிடிவான ஒரு விஷயத்தில் யோசிக்காமல் (அல்லது வேண்டு மென்றே?) நடந்து கொண்டு பல விபரீதங்களுக்கு வழிவகுத்தார். ஜெருசலேம் நகரிலுள்ள ஒரு குகைப்பாதை மிகவும் பிரசித்த மானது. மூன்று மதங்களின் முக்கியப் பகுதிகளை இணைக்கிறது இது.

யூதர்களின் ஹெராம் புனிதக் கோயில், நபிகள் நாயகம் சொர்க் கத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட இடம், ஏசுநாதர் சிலுவையில் அறையப்படுவதற்காக இழுத்துச் செல்லப்பட்ட பாதை. இப்படி மூன்று பகுதிகளை இணைக்கும் இந்த குகைப் பாதைக்கு ஒரு வழிதான் உண்டு. அது இஸ்ரேலின் எல்லைக்குள் இருந்தது.

“இந்த குகைப் பாதைக்கு இன்னொரு புதிய வழியும் இருந் தால் சுற்றுலாப் பயணிகளுக்கு ரொம்ப சவுகரியமாக இருக்கும்’’ என்ற படி ஒரு புதிய நுழைவுப் பாதையை சமீபத்தில் உண்டாக் கியது இஸ்ரேல் அரசு. இந்த நுழைவுப் பாதையை அமைத்தது பாலஸ்தீனர்களின் பகுதியில்!.

பாலஸ்தீனர்கள் கொதித்தெழுந் தார்கள். கற்களிலிருந்து துப்பாக்கி வரை சகல ஆயுதங்களும் பயன் படுத்தப்பட்டன. இதற்கு நடுவே ஐரோப்பியச் சுற்றுப் பயணத்தில் இருந்த நெதன்யாஹு “இந்தப் புதிய நுழைவுப் பாதையை திறந்ததில் நான் பெருமைப் படுகிறேன்’’ என்று ஓர் அறிக்கை விட்டுத் தொலைத்தார்.

இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீனர் களுக்கும் நடைபெற்ற போராட் டத்தில் நூறு பேர் இறந்தனர். ஆயிரத்துக்கும் அதிகமானவர் களுக்குக் கடுமையான காயம். ஆக ஒப்பந்தங்களுக்குப் பிறகும் அமைதி என்பது இரு நாட்டு மக்களுக்குக்கும் கிட்டாத தாகவே இருந்தது. செப்டம்பர் 11, 2001 அன்று பாலஸ்தீன தீவிரவாதிகளின் தாக்குதலைத் தொடர்ந்து யாசர் அராபத் அவரது தலைமையகமான ரமல்லாவைத் தாண்டி வெளியேறாதவாறு பார்த்துக் கொண்டது இஸ்ரேல்.

ஷெரீன் சலமா என்ற ஆஸ்தி ரேலிய பத்திரிகையாளர் ஒருவர் 2004-ல் யாசர் அராபத்தைப் பேட்டி கண்டார். பத்திரிகையாளர் சந்திப்பு என்ற பொதுவான தளத்தில் மட் டுமே ஊடகங்களை எதிர்கொண்ட யாசர் அராபத் அளித்த கடைசிப் பேட்டியாக அது அமைந்தது.

(இன்னும் வரும்..)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x