Published : 24 Dec 2014 10:26 AM
Last Updated : 24 Dec 2014 10:26 AM

உலக மசாலா: வீட்டுக்குள் கார் பார்க்கிங்

சிங்கப்பூரில் இருக்கும் ஹாமில்டன் ஸ்காட்ஸ் மிக மிக விலையுயர்ந்த அபார்ட்மெண்ட். இங்கு கார் பார்கிங் ஏரியா என்று தனியாக இல்லை. விலை அதிகமுள்ள கார்களைத் தங்கள் வீட்டிலேயே பார்கிங் செய்துகொள்ளும் வசதியோடு வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. 30 தளங்கள் கொண்டது இந்த அபார்ட்மெண்ட். ஒவ்வொரு தளத்திலும் இரண்டு கார்களை நிறுத்தி வைக்கும் அளவுக்கு இடம் இருக்கிறது. லிஃப்ட் மூலம் கார்களைக் கொண்டு வருகிறார்கள். வீட்டின் சுவர்கள் முழுவதும் கண்ணாடியால் ஆனதால் படுக்கை அறையிலிருந்தும், சமையலறையில் இருந்தும் ஹாலில் இருந்தும் கூட கார்களைப் பார்க்க முடியும். இந்த அபார்ட்மெண்ட்டின் ஒரு மாத வாடகை சுமார் 7 லட்சம் ரூபாய்.

ஐயோ… கண்ணைக் கட்டுதே…

வீடுகளைக் காவல் காக்கக்கூடியவை நாய்கள் என்பது நமக்குத் தெரியும். ஆனால் ஒரு மருத்துவரைப் போல மனிதர்களைக் காக்கின்றன பயிற்சி பெற்ற சில வகை நாய்கள். இங்கிலாந்தில் நன்றாகப் பயிற்சி அளிக்கப்பட்ட நாய்கள் மனிதர்களின் சர்க்கரை, கேன்சர், அலர்ஜி போன்ற பல நோய்களின் தன்மைகளையும் கண்காணித்து, எச்சரிக்கை செய்கின்றன. மருத்துவராகச் செயல்படும் இந்த நாய்களை வாங்கி, நமது ரத்தத்தின் மாதிரிகளை பழக்கப்படுத்திவிட்டால் போதும்.

இரவில் நாம் தூங்கும்போது நாய் விழித்திருந்து, ஒவ்வோர் அசைவையும் உற்று நோக்கும். ஏதாவது வித்தியாசம் தெரிந்தால் அருகில் வந்து முகர்ந்து பார்க்கும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மாறியிருந்தால், உடனே எச்சரிக்கை செய்யும். இதன் மூலம் உடனே மருந்து எடுத்துக்கொண்டு, தற்காத்துக்கொள்ள இயலும். அதேபோல சிறுநீர், ரத்தம் ஆகியவற்றை வைத்து கேன்சர் நோயின் தன்மைகளையும் இந்த நாய்கள் அடிக்கடி எச்சரிக்கை செய்கின்றன. நம்புவதற்குக் கஷ்டமாக இருந்தாலும் 54 பேரில் 22 பேருக்குச் சரியாக நாய்கள் கணித்திருப்பதாகவும், அவர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். நாய்களுக்கு மனிதர்களை விட வாசனை நுகரும் தன்மை இருப்பதால் இது சாத்தியம்தான் என்கிறார்கள்.

சர்க்கரை அறியும் நாயா, கேன்சர் அறியும் நாயா என்பதைப் பொறுத்து 6 லட்சத்திலிருந்து 12 லட்சம் ரூபாய் வரை இந்த நாய்கள் விற்பனையாகின்றன.

மருத்துவமனையில் டெஸ்ட் பண்ணினாலே சரியான ரிசல்ட் கிடைக்க மாட்டேங்கிது… நாய் சொல்றதை எல்லாம் எப்படி…?

நியுயார்க்கைச் சேர்ந்த ஜான் டி ல பியுனெட் செல்போன் ஸ்டோரேஜ் வேனை நடத்தி வருகிறார். சேஃப் அண்ட் செக்யுர் செல்யுஸன்ஸ் என்ற பெயரில் பள்ளி வளாகத்துக்கு அருகில் வேனை நிறுத்தி வைத்திருக்கிறார். பள்ளிகளில் செல்போன் தடை என்பதால், செல்போனை வேனில் கொடுத்துவிட்டு மாணவர்கள் வகுப்பறைக்குச் செல்கின்றனர். மாலையில் திரும்பி வரும்போது செல்போனைப் பெற்றுக்கொள்கின்றனர். ஒரு நாளைக்கு ஒரு டாலர் வீதம் நூறு போன்களைப் பாதுகாக்கிறார். இது தற்காலிக பிஸினஸ்தான்… விரைவில் பள்ளிகளில் செல்போன் அனுமதித்தால் வேறு பிஸினஸ் யோசிக்க வேண்டி வரும் என்கிறார் பியுனெட்.

கிடைக்கிற வாய்ப்பைப் பயன்படுத்திட்டீங்க பியுனெட்!

உலகிலேயே மிக விலையுயர்ந்த பெல்ட் பக்கிள் தி காலிபர் ஆர்822 ப்ரிடேடர்தான்! 3 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப் புள்ள இந்த பக்கிளின் எடை 145 கிராம். 18 கேரட் வெள்ளைத் தங்கம், டைடானியத்தால் ஆனது. 387 வைரக்கற்கள் பதிக்கப்பட்டிருக் கின்றன. மிக நுட்பமான தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருக் கிறது. இதை அணிந்துகொண்டு கார் ஓட்டலாம், உட்காரலாம், விளையாடலாம் என்பது கூடுதல் சிறப்பு. தானாகவே சுத்தம் செய்துகொள்ளும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ஒரு பெல்ட் பக்கிளுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x