Last Updated : 03 Dec, 2014 10:00 AM

 

Published : 03 Dec 2014 10:00 AM
Last Updated : 03 Dec 2014 10:00 AM

பிறவிப் பகைவர்கள் பாலஸ்தீனம், இஸ்ரேல் 8

ஹமாஸ் என்பது 1987-ல் தொடங்கப்பட்ட ஒரு தீவிரவாத அமைப்பு. இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீனத்தில் செயல்படுகிறது. ராக்கெட் ஏவுவது, தற்கொலைப் படையாக மாறும் உறுப்பினர்கள் என்று பலவிதங்களில் இஸ்ரேலுக்குக் குடைச்சல் கொடுத்து வருகிறது. ‘’இஸ்ரேல் என்ற ஒரு நாடே இருக்கக் கூடாது. அது அங்கீகரிக்கத்தக்கதே அல்ல’’ என்று தொடர்ந்து தெளிவாக அறிவிக்கும் ஹமாஸ் இஸ்ரேலை அழிப்பதையே தன் லட்சியம் என்று தனது சட்டத்தில் குறிப்பிட்டுக் கொண்டிருக்கிறது.

இரு கோடுகள் தத்துவப்படி ஹமாஸ் உருவானபிறகு பாலஸ்தீன விடுதலை அமைப்பு மிதவாத இயக்கமாகவே பார்க்கப்படுகிறது. பாலஸ்தீன அரசைக்கூட (அதாவது பாலஸ்தீன விடுதலை அமைப்பு) இது ஏற்கவில்லை. ‘‘கோழைத்தனமாக நடந்து கொள்கிறார்கள்’’

2006ல் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த சிலரும் பாலஸ்தீன சட்டசபைத் தேர்தலில் வென்றனர். ‘‘இதற்குமுன் பாலஸ்தீனம் இஸ்ரேலோடு செய்து கொண்ட சமரச ஏற்பாடுகளை நாங்கள் ஏற்க மாட்டோம்’’ என்று தெளிவாகவே இந்த ‘அரசியல்வாதிகள்’ அறிவித்தனர்.

எகிப்திலுள்ள முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்திலிருந்து (Muslim brotherhood) பிறந்தது ஹமாஸ். 1980களில் பாலஸ்தீன மக்களின் ஆதரவும் இதற்குக் கிடைத்தது. இஸ்ரேலின் அராஜகப் போக்கை தாக்குப்பிடிக்க ஹமாஸ் போன்ற தீவிர அமைப்புகள்தான் சரி என்ற முடிவுக்கு அப்போது மக்களில் பலரும் வந்திருந்தனர்.

ஒரு கட்டத்தில் இஸ்ரேலைத் தாக்குவதற்குச் சமமாக பாலஸ்தீன விடுதலை அமைப்பைத் தாக்கத் தொடங்கியது ஹமாஸ்! காஸா பகுதியை வன்முறை மூலம் கைப்பற்றியது ஹமாஸ். இஸ்ரேல்மீது ராக்கெட் தாக்கு தல்களை நடத்தியது. எகிப்து தலையிட்ட பிறகு கொஞ்சம் சமாதானம் உண்டானது. 2008 இறுதியில் காஸா பகுதியைத் தாக்கிய இஸ்ரேல் ஒரு மாதத் திற்குப் பிறகு தன் ராணுவத்தை பின் வாங்கிக் கொண்டது.

1994-ல் இஸ்ரேல் நாட்டின் பிரதமர் ராபின், வெளியுறவு அமைச்சர் பெரஸ், பாலஸ்தீன விடுதலை அமைப்பின் தலைவர் யாசர் அராபத் ஆகியோருக்கு நோபல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டது.

அப்போது இஸ்ரேலிய நாவலாசிரியரான மோவ் ஷாலஸ் என்பவர் ‘‘பாதி நூலை எழுதியதற்காகவோ, பாதி ஆராய்ச்சி செய்ததற்காகவோ நோபலுக்கான இலக்கியம் மற்றும் விஞ்ஞானப் பரிசுகள் கொடுக்கப்பட்டதாக நினை வில்லை. ஆனால் அமைதிக்கான நோபல் பரிசுக்கு விதிவிலக்கு அளித்திருக்கிறார்கள் போலும்’’ என்று கிண்டலடித்தார். ‘’அராபத்தின் கடந்த காலம் ரத்தக்கறை படிந்த ஒன்று. அவருக்குப் போய் நோபல் பரிசா?’’ என்று கூறி, நோபல் பரிசளிப்பு குழுவிலிருந்தே ஒருவர் விலகி விட்டார்.

என்றாலும் அப்போதுள்ள ஒரு சூழலில் தாக்குதல் முழுமையாக நிறுத்தப்படாவிட்டாலும், காஸா நகரை பாலஸ்தீன மக்களுக்கு அளிக்க ராபின் முன்வந்ததும், போர் நிறுத்தத்துக்குச் சம்மதம் அளிப்பதாக அராபத் ஒப்புக் கொண்டதும் அங்கீகாரம் அளிக்க வேண்டிய விஷயம்தான் என்று பலரும் கருதினர்.

ஆனால் ‘ஹமாஸ் இயக்கத் தினை அராபத் கண்டும் காணாமலும் இருக்கிறார்’ என்று கருதியது இஸ்ரேல் அரசு. ஆனால் ‘ஹமாஸ் இயக்கத்தினர் தங்கள் கட்டுக்குள் இல்லை’ என்பது அராபத்தின் வாதம். இந்த நிலையில் இஸ்ரேல் அரசு தங்கள் எல்லைக்கும் (பாலஸ்தீனர் அதிகம் உள்ள) மேற்குக் கடற்கரைப் பகுதிக்கு மிடையே ஒரு நீண்ட சுவரை எழுப்ப முயற்சி செய்தது.

இந்த நிலையில் அடுத்த அதிர்ச்சி ஏற்பட்டது. ‘இஸ்ரேல் மன்னர்களின் சதுக்கம்’ என்ற பிரபல இடத்தில் ஒரு பெரும் கூட்டம் கூடியிருந்தது. ஆஸ்லோ உடன்படிக்கைகளை ராபின் நடைமுறைப் படுத்தியதற்கான பாராட்டுக் கூட்டம் அது. ராபினும் அங்கு அழைக்கப் பட்டிருந்தார். மிதவாதிகள் அவரை புகழ்ந்து தள்ளினார்கள்.

கூட்டம் முடிந்தது. அங்கிருந்து கிளம்பிய ராபின் தன் காரின் கதவுகளைத் திறந்தார். அப்போது மூன்று துப்பாக்கிக் குண்டுகள் சீறிப் பாய்ந்தன. இரண்டு ராபின் உடலிலும் மற்றொன்று ராபினின் பாதுகாவலர் உடலிலும் துளைத்தது.

சுட்டவன் இகல் அமீர் என்ற இளைஞன். வலதுசாரியைச் சேர்ந்த தீவிர யூதன். ஆஸ்லோ ஒப்பந்தங்களை சிறிதும் ஏற்க முடியாதவன். இஸ்ரேலின் கெளரவமே இதனால் அடகுவைக் கப்பட்டதாக அவன் எண்ணினான். அந்தக் கோபத்தின் விளைவுதான் படுகொலை வன்முறையாக வெடித்தது.

ராபின் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அடுத்த நாற்பது நிமிடங்களில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் உயிர் பிரிந்தது. நுரையீரலில் ஓட்டை, மிக அதிக ரத்தம் இழப்பு என்றார்கள் மருத்துவர்கள். பல ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ராபின் சுடப்பட்ட சதுக்கத்துக்குச் சென்று தங்கள் அஞ்சலியைச் செலுத்தினார்கள். அந்தச் சதுக்கம் ராபின் சதுக்கம் என்று புதுப் பெயரிடப்பட்டது. சதுக்கத்துக்கு மட்டுமல்ல இஸ்ரேலின் பல தெருக்களுக்கும் கூட அவர் பெயர் வைக்கப்பட்டது.

உலகையே அதிர வைத்தது இந்தப் படுகொலை. இனி இஸ்ரேல் - பாலஸ்தீன உறவு என்ன ஆகும் என்ற கேள்வி பலரிடம் எழுந்தது. ராபினின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட தலைவர்களின் எண்ணிக்கை எக்கச்சக்கம். எகிப்துப் பிரதமர் மொபாரக், அமெரிக்கப் அதிபர் பில் கிளிண்டன், ஜோர்டான் மன்னர் உசேன், ஆஸ்திரேலியப் பிரதமர் பால்கீட்டிங் என்று அந்தப் பட்டியல் மிக நீளம்.

ஆக என்னதான் தன் வாழ்வின் தொடக்கத்தில் போரில் ஈடுபட்டு வன்முறைச் செயல்களை ராபின் புரிந்திருந்தாலும், தன் வாழ்வின் பிற்பகுதியில் அவர் எடுத்துக் கொண்ட நடவடிக்கைகள் காரணமாக ‘உலகின் அமைதித் தூதர்களில்’ ஒருவராக அவர் பார்க்கப்படுகிறார்.

(இன்னும் வரும்..)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x