Last Updated : 24 Dec, 2014 08:38 PM

 

Published : 24 Dec 2014 08:38 PM
Last Updated : 24 Dec 2014 08:38 PM

போர் குற்றத்தை விசாரிக்க புதிதாக விசாரணை குழு: அதிபர் மகிந்த ராஜபக்ச வாக்குறுதி

இலங்கையில் போர் குற்றம் குறித்து விசாரிக்க புதிதாக நீதி விசாரணை குழு அமைக்க தயாராக இருப்பதாக இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச வாக்குறுதி அளித்துள்ளார்.

இலங்கை அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழர்களை கவரும் வகையில் ராஜபக்ச இவ்வாறு புதிய வாக்குறுதி அளித்துள்ளார்.

இலங்கை அதிபர் தேர்தல் ஜனவரி 8-ம் தேதி நடைபெற வுள்ளது. இதில் எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளரான மைத்ரி பால ஸ்ரீசேனா, ராஜபக்சவுக்கு கடும் போட்டியாக உள்ளார்.

இலங்கை போர் குற்றம் குறித்து விசாரிக்க புதிய குழு அமைக்கப்படும் என்று மைத்ரிபால சேனா சமீபத்தில் வாக்குறுதி அளித்துள்ளார்.

இந்நிலையில் ராஜபக்ச நேற்று வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் போர் குற்றம் குறித்த புதிய விசாரணை குழு என்ற வாக்குறுதி இடம் பெற்றுள்ளது.

போர் நடைபெற்ற காலத்தில் எந்த உரிமை மீறப்பட்டிருந் தாலும் அது தொடர்பாக வெளிப்படையாக விசாரிக்க உள்நாட்டு நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைக்க தயாராக இருக்கிறோம் என்று ராஜபக்ச கூறியுள்ளார். அதே நேரத்தில் போர் குற்ற விசாரணையில் ஐ.நா.வுடன் ஒத்துழைக்க முடியாது என்று உறுதிபடத் தெரிவித் துள்ளார்.

சர்வதேச நெருக்கடியை அடுத்து கடந்த ஜூலை மாதம் போர் குற்றம் குறித்து விசாரிக்க ராஜபக்ச ஏற்கெனவே ஒரு குழுவை அமைத்தார். அக்குழுவுக்கும், புதிதாக அமைக்கப்படுவதாக கூறியுள்ள குழுவுக்கும் என்ன வித்தியாசம் என்பதை ராஜபக்ச கூறவில்லை.

இலங்கையில் 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிராக நடைபெற்ற இறுதிக் கட்ட போரில் ராஜபக்ச அரசின் உத்தரவின் பேரில் ஏராளமான அப்பாவி தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்ததாக குற்றச்சாட்டு உள்ளது. இது தவிர ராணுவத்தினர் தமிழ் பெண்களை பலாத்காரம் செய்ததாகவும், பலரை துன்புறுத்தி கொன்றதாகவும் குற்றம்சாட்டப் பட்டுள்ளது.

மனசாட்சிப்படி தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் தமிழ் பேரவை அமைப்புகள் வேண்டுகோள்

இலங்கை அதிபர் தேர்தலில் தமிழர்கள் வாக்களிப்பது தொடர்பாக லண்டனில் உள்ள தமிழ் அமைப்புகள் தங்களின் கருத்துகளை வெளியிட்டுள்ளன.

உலகத் தமிழ்ப் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளின் நிர்வாகத்தை தங்கள் வசம் தர வேண்டும் என்ற விருப்பம் சிங்களர்கள் பெரும்பான்மையாக இருக்கும் அரசால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், தற்போது அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இப்போதுள்ள அதே நிலைமையே தொடர வேண்டுமா, அல்லது மாற்றம் ஏற்பட வேண்டுமா என்பதுதான் இப்போது தமிழ் வாக்காளர்கள் முன்பு எழுந்துள்ள முக்கிய கேள்வியாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சிவில் சமூகப் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இத்தேர்தலில் தமிழர்கள் தங்களின் மனசாட்சியின்படி வாக்களிக்க வேண்டும். அதிபர் வேட்பாளராக நிற்பவர், தமிழர்கள் பிரச்சினையில் நியாயமான நிலைப்பாட்டை எடுத்தால், அவருக்கு சிங்கள பவுத்தர்களின் வாக்குகள் கிடைக்காது என்ற சூழ்நிலையே தற்போது உள்ளது.

சிங்களர்களின் வாக்குகளைப் பெற்று அதிகாரத்துக்கு வருபவரால், எவ்வாறு தமிழர் களுக்கு நல்லது செய்ய முடியும் என்ற வியப்பு எங்களுக்கு ஏற்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x