Published : 25 Apr 2014 08:58 AM
Last Updated : 25 Apr 2014 08:58 AM

புத்தர் படத்தைக் கையில் பச்சை குத்திய‌ பிரிட்டிஷ் பெண்ணை வெளியேற்றியது இலங்கை

புத்தர் படத்தைத் தன் கையில் பச்சைகுத்தி யிருந்ததால், புத்த மதத்தை அவமதித்தார் என்று கூறி சுற்றுலா வந்த 37 வயது பிரிட்டிஷ் பெண்மணியை நாட்டை விட்டு வியாழக்கிழமை வெளியேற்றியுள்ளது இலங்கை அரசு.

கடந்த ஏப்ரல் 21-ம் தேதி கொழும்புக்கு சுற்றுலாப் பயணியாக வந்தார் நவோமி கோல்மேன். அவர் தன் வலது கையில் தாமரை மலர் மீது அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் படத்தைப் பச்சை குத்தியிருந்தார். புத்த மதம் பெரும்பான்மையாக உள்ள இலங்கை யில் இத்தகைய நடவடிக்கைகள் மதத்தை அவமதிக்கும் செயலாகக் கருதப்படுகின்றன. எனவே, அவர் இலங்கை காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

தான் புத்தரின் பக்தர் எனவும், அவர் மீது கொண்ட ஈடுபாட்டால் தன் கையில் பச்சைகுத்திக் கொண்டதாகவும் கூறினார். அதை ஏற்றுக்கொள்ளாத காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தினர். அவர் நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கு முன்பு குடியேற்ற மையத்தில் உள்ள சிறையில் வைக்கப்பட்டார். செவிலியரான அந்தப் பெண்மணி சிறையில் இருந்த நான்கு நாட்களும் தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறியுள்ளார். அவரை லண்டனுக்குச் செல்லும் விமானத்தின் மூலம் நாட்டைவிட்டு வெளியேற்றியது இலங்கை.

கடந்த ஆண்டு இதே போன்றதொரு குற்றத்திற்காக வேறொரு பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணி வெளியேற்றப்பட்டார். 2012-ம் ஆண்டு மூன்று பிரெஞ்சு சுற்றுலாப் பயணிகள் புத்தர் சிலையை அவமதித்ததாகக் கூறி வெளியேற்றப்பட்டனர்.

சுற்றுலாப் பயணியை நாட்டை விட்டு வெளி யேற்றியது தொடர்பாக ‘ஆசிய மனித உரிமை கவுன்சில்' இலங்கை அரசைக் கண்டித்து ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், ‘ஒரு சுற்றுலாப் பயணிக்கான விருந்தோம்பலை மறுத்ததற்கும், இதுபோன்று கீழ்த்தரமாக நடந்து கொண்டதற்கும் இலங்கை தண்டனை பெறாமல் போய்விடக் கூடாது' என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x