Last Updated : 27 Dec, 2014 10:37 AM

 

Published : 27 Dec 2014 10:37 AM
Last Updated : 27 Dec 2014 10:37 AM

ஆபத்துச் சுழல்களில் ஆப்கானிஸ்தான் 11

11 செப்டம்பர் 2001 அன்று அமெரிக்காவின் உள்நாட்டு விமானங்களை சில தீவிர வாதிகள் கடத்தி நியூ யார்க்கில் இருந்த இரட்டை வணிக கோபுரங் கள் மீது கடும் தாக்குதலை நடத்தி னர். அவை தகர்ந்தன. ஆயிரக் கணக்கானவர்கள் இறந்தனர். கொதித்தது அமெரிக்கா.

அமெரிக்க வரலாற்றிலேயே இவ்வளவு மூர்க்கமான தாக்குதல் நடந்ததில்லை. சந்தேகமின்றி ஒசாமா பின் லேடனின் அல்-காய்தாவின் சதிதான் இது என்பதை அமெரிக்காவால் புரிந்து கொள்ள முடிந்தது.

ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்த ஒமரிடம் பின் லேடனை ஒப்படைக்குமாறு மிரட்டியது அமெரிக்கா. ஒமர் மறுத்தார். ஆப்கானிஸ்தான் மீது படையெடுக்க முடிவெடுத்தது அமெரிக்கா. தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாடுகளின் எல்லைப் பகுதிகளைப் பயன்படுத்திக் கொள்ள அந்த நாடுகளின் அனுமதியைக் கேட் டன அமெரிக்காவும், பிரிட்டனும் (இந்த இரண்டு ராணுவங்களும் கைகோத்துதான் ஆப்கானிஸ்தானில் செயல்பட்டன). இரு நாடுகளும் அனுமதியளிக்க, அமெரிக்க - பிரிட்டிஷ் ராணுவம் ஆப்கானிஸ்தானில் நுழைந்தது.

தாலிபன் ஆட்சி தொலைய வேண்டுமென்று ரஷ்யா கருதினா லும் அது நேரடியாக களத்தில் இறங்கவில்லை. ஆப்கானிஸ்தானின் வடபகுதியை தன் ஆதிக்கத்தில் வைத்திருந்த அரசுக்கு மட்டும் நிறைய ஆயுதங்களை அனுப்பியது. தாலிபன் அரசுக்கு முதல் வெளிநாட்டு நெருக்கடிகள் வடக்குப் பகுதியிலிருந்து நெருங்கத் தொடங்கின. போர் தொடங்கியது.

பெரும்பாலும் இந்தப் போர் வான்வழியாகவே நடத்தப்பட்டது. ஆக்ரோஷம் அதிகம்தான். என்றாலும் தாலிபனால் எதிரிகளின் நவீனமுறைத் தாக்குதல்களை சமாளிக்க முடியவில்லை. 2001 நவம்பரில் கிட்டத்தட்ட ஆப்கானின் எல்லா நகரங்களும் அமெரிக்க வசமாகிவிட்டது. என் றாலும் ஒசாமா பின் லேடனும், ஒமரும் தப்பித்துவிட்டனர். இதில் அமெரிக்காவுக்கு ஏமாற்றம். “ஒசாமா பின் லேடனைப் பிடித்துக் கொடுத்தாலோ, அதற்கு உதவி னாலோ 23 கோடி ரூபாய் பரிசு உண்டு’’ என்று அறிவித்தது அமெரிக்க அரசு.

2004-ல் ஒசாமா பின் லேடன் வீடியோ ஒன்றை வெளியிட்டார். செப்டம்பர் 11 வணிக கோபுர தாக்குதல்களுக்கு தான்தான் காரணம் என்று அதில் வெளிப்படையாகவே அறிவித்தார். கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஒசாமா பின்லேடன் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளை சல்லடைபோட்டு சலித்தது அமெரிக்க ராணுவம்.

2010 பிற்பகுதியில் பின்லேடன் பாகிஸ்தானிலுள்ள அபோடாபாட் என்ற பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அமெரிக்க அதிபரும், உளவுத் துறையான சி.ஐ.ஏ. இயக்குநர் லியோன் பனேட்டாவும் இணைந்து சுமார் எட்டு மாதங்களுக்கு ஒரு திட்டம் தீட்டினார்கள்.

ஒசாமா பின் லேடன் பதுங்கிய பகுதியில் மின்னலென நுழைந்த அமெரிக்க ராணுவம் அவரை சுட்டு வீழ்த்தியது. அவரது உடல் சோதனைக்கு எடுத்துச் செல்லப் பட்டது. டி.என்.ஏ. சோதனைகள் அது ஒசாமா பின்லேடனின் உடல் தான் என்பதை உறுதி செய்தன. ‘’அல்-காய்தாவை அடக்குவதில் நாங்கள் எடுத்துக் கொண்ட முயற்சியில் இதுதான் தலைசிறந்த சாதனை’’ என்ற அதிபர் ஒபாமா, அமைதி மற்றும் மனித கெளரவத்தில் நம்பிக்கை கொண்ட யாருமே பின் லேடனின் இறப்பை வரவேற்பார்கள் என்றார்.

பெரும்பாலான அமெரிக்க மக்கள், ஐரோப்பிய யூனியன், பல நாடுகளின் அரசுகள் ஆகியவை பின் லேடனின் இறப்பை வரவேற்றன. ஆனால் கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவும், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவும் இந்தக் கொலையைக் கண்டித்தனர். ஆயுதங்கள் இல்லாத நிலையில் பின்லேடன் இருக்கையில் அவரை உயிரோடு பிடிக்காமல், கொலை செய்தது சரியல்ல என்று அம்னெஸ்டி போன்ற அமைப்புகள் கருத்து தெரிவித்தன.

பின் லேடனின் இறப்புக்கு முன்னதாக நடந்த காலகட்டத்துக்கு மீண்டும் வருவோம். அதாவது தாலிபன்களிடமிருந்து அமெரிக்க-பிரிட்டிஷ் ராணுவங்கள் ஆப்கானிஸ்தானத்தை மீட்ட காலம். வசப்பட்ட ஆப்கானிஸ்தானை அமெரிக்கா தன் வசம் வைத்துக் கொண்டிருந்தாலும் அதற்கு அவப் பெயர் கிடைக்கும், உடனடியாகத் தேர்தலை நடத்தவும் வழியில்லை. எனவே ஒரு வருடத்திற்காவது யாரையாவது தாற்காலிக அதிப ராக ஆக்க வேண்டிய கட்டாயம் அமெரிக்காவுக்கு உண்டானது.

தோஸ்தும், ரப்பானி, ஜாகிர் ஷா - இவர்களில் யாரின் வசம் ஆப்கானிஸ்தான் அளிக்கப்படும்? இந்தக் கேள்வி பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் ஹமீத் கர்ஸாய் டிசம்பர் 2001ல் ஆப்கானிஸ்தானின் அதிபராகப் பதவியேற்றார். இவர் நன்கு படித்தவர். பஷ்டூன் இனத்தவர். காந்தஹாரில் பெரும் செல்வாக்கு கொண்டவர்.

உள்நாட்டு இனத்தலைவர்களை சமாதானப்படுத்துவதும், ஆப்கானிஸ்தானுக்கு நிதி திரட்டுவதும் இவரது முக்கியக் கடமைகள் ஆயின. ஆப்கானிஸ்தானில் பொதுத் தேர்தல் நடந்து முடிந்தது. பெரும்பாலும் சுயேச்சைகள் மட்டுமே களத்தில் நின்ற தேர்தல்.

சீரழிந்த ஆப்கானிஸ்தான் மறுவாழ்வு பெற பல நாடுகள் உதவி செய்தன. தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை ஆஸ்திரியாவும், பிரிட் டனும் அச்சிட்டுக் கொடுத்தன. தேர்தல் செலவுகளை அமெரிக்காவும், அதன் கூட்டணி நாடுகளும் ஏற்றுக் கொண்டன.

பாராளுமன்ற கட்டிடமே இல்லாமல் ஆப்கானிஸ்தான் இருக்க இந்திய நிதி உதவியில்தான் அது எழும்பியது. பாராளுமன்றத்தின் பெயர் `லோயா ஜிர்க்கா’. இதன் உறுப்பினர்களில் ஐந்தில் ஒருவர் பெண். புதிய அரசியலமைப்பு சட்டத்தில் `இஸ்லாமியக் கொள்கைகளுக்கேற்ப’ என்பது `இஸ்லாமிய சட்டங்களுக்கேற்ப’ என்று மாற்றப்பட்டுள்ளது.

நீண்ட யுத்தங்களைப் பார்த்த நாடு ஆப்கானிஸ்தான். அந்த நாட்டில் ஜனநாயகம் மலரும் என்பது பலரும் எதிர்பாராத ஒன்றாகவே இருந்தது. ஆனாலும் மலர்ந்தது.

(இன்னும் வரும்..)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x