Published : 05 Apr 2014 04:18 PM
Last Updated : 05 Apr 2014 04:18 PM

தாலிபான்களின் மிரட்டலுக்கு இடையே பதற்றத்துடன் ஆப்கானில் அதிபர் தேர்தல்

ஆப்கானிஸ்தானில் வரலாற்று சிறப்புமிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. தாலிபான்களின் ஆதிக்கம் நிறைந்த ஆப்கானிஸ்தானில் மூன்றாவது முறையாக ஜனநாயக ரீதியில் தேர்தல் நடைபெருகிறது.

இது குறித்து தேர்தல் ஆணையர் யூசப் நூரிஸ்தானி கூறுகையில், “ஆப்கான் மக்களுக்கு இன்றைய தினம் முக்கியமான நம்பிக்கையூட்டக்கூடிய தினம். மக்கள் அவர்களின் அதிபரையும், பிரதிநிதிகளையும் தேர்ந்தெடுக்க உள்ளனர்” என்றார்.

நாடு முழுவதிலும் அமைக்கப்பட்டிருக்கும் 6,400 வாக்குச்சாவடிகளில் மக்கள் இன்று காலை முதலே நீண்ட வரிசையில் நின்று விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர். தாலிபான்கள் மிரட்டலால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 4,00,000 ஆப்கான் பாதுகாப்பு படையினர் நாடுமுழுவதும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

2001ஆம் ஆண்டு, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளின் தாக்குதலினால், ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி ஒழிக்கப்பட்டது. அதன் பின், ஜனநாயக முறையில், தேர்தல் நடத்தப்பட்டு, ஹமீத் கர்சாய், இரண்டு முறை அதிபராக தேர்வு செய்யப்பட்டார். ஆட்சியை இழந்த தாலிபான்கள், அடிக்கடி தாக்குதல் நடத்துவதால், அமெரிக்க படைகள், 2014ஆம் ஆண்டு வரை, ஆப்கானில் தங்கியிருக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து 2014ஆம் ஆண்டு, ஏப்ரல் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று ஆப்கான் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. கடந்த, 2009ஆம் ஆண்டு, நடந்த அதிபர் தேர்தலின் அதிக அளவில் முறைக்கேடுகள் நடந்ததாக, கூறப்பட்டது. எனவே, 2014ம்ஆண்டு, தேர்தலில் வெளிநாட்டு பார்வையாளர்களை அனுமதிக்கப் போவதில்லை என்று அதிபர் ஹமீத் கர்சாய் தெரிவித்துள்ளார்.

கிழக்கு பகுதிகளில் கலவரம்

ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளில் இன்று காலை முதல் வன்முறை நடந்ததாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. முக்கியமாக கிழக்குப் பிராந்திய பகுதியில் உள்ள லோகர் மாகாணத்தில் காவல் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் பர்வான் மாகாணத்தில் மூன்று வாக்குச்சாவடிகளில் தாலிபான்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

சார்காய் பகுதியில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டதில் அங்கு கலவரம் வெடித்தது. இதனை அடுத்து அங்கு பாதுகாப்பு குவிக்கப்பட்டுள்ளது.

கர்சாய் போட்டியில்லை

அதிபர் ஹமீத் கர்சாய் தேர்தலில் மூன்றாவது முறையாக போட்டியிட தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால் அப்துல்லா, உலக வங்கியின் முன்னாள் செயலாளர் அஷ்ரப் கனி, சல்மை ரசூல் உள்ளிட்ட 8 பேர் அதிபர் பதவிக்கான போட்டியில் உள்ளனர்.

இந்த தேர்தலில் எந்த வேட்பாளரும் அதிக வாக்குகள் பெற்று வெற்றியை உறுதி செய்யாத போது, தேர்தல் மீண்டும் வரும் மே 28ஆம் தேதி நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தேர்தல் நிலவரங்கள் குறித்து செய்தி சேகரிக்க சென்ற ஏ.பி. செய்தி நிறுவனத்தின் புகைப்பட பெண் நிருபர் அஞ்சா நைட்ரிங்கஸ் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் ஒரு பெண் நிருபர் படுகாயம் அடைந்தார் என்பது குறிப்பிடதக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x