Published : 13 Dec 2014 12:07 PM
Last Updated : 13 Dec 2014 12:07 PM

புதிதாய்ப் பிறந்த ‘நியூ’சிலாந்து 5

மகளிர் வாக்குரிமை அறிமுகத்தில் கேட் ஷெப்பர்டு பெயர் எப்படி அழிக்க முடியாத இடத்தைப் பெற்றதோ அதேபோல் மற்றொரு பெண்மணியும் நியூசிலாந்து சரித்திரத்தில் தனி இடத்தைப் பெற்றார். 2011ல் 98 வயதுப் பெண்மணி ஒருவர் இறந்தபோது, வெலிங்டன் நகரமே அவருக்கு அஞ்சலி செலுத்தியது. அவர் பெயர் நான்ஸி வேக்.

இரண்டாம் உலகப் போரில் இவர் ஓர் ஒற்றராக விளங்கினார். பின்னர் மிகவும் தேடப்படும் குற்ற வாளிகளில் ஒருவராகக் கருதப்பட்டார். மிகவும் தைரியமான பெண்மணி இவர் என்பதில் இருவேறு கருத்து கள் இருந்ததே இல்லை. ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக, நாஜிகளுக்கு எதிராக இவர் செய்த ஒற்று வேலைகள் மிக அதிகம்.

‘‘நான் ஜெர்மானியர்களை வெறுத்தேன். அவர்கள் ஒட்டு மொத்தமாக இறந்துவிட வேண்டும் என நினைத்தேன்’’ என்று வெளிப் படையாகவே கூறியவர். 1940ல் நாஜிக்களால் பிரான்ஸ் ஆக்ரமிக்கப்பட்டது. அப்போது தனது ஒற்று வேலைகள் மூலம் இரண்டாயிரம் யூதர்களை பிரான்சி லிருந்து நான்ஸி ரகசியமாகத் தப்ப வைத்தார். போகிற போக்கில் ஜெர்மானிய ஆயுதக் கிடங்குகளை சின்னாபின்னமாக்கினார்.

நாஜிக்களின் கெஸ்டபோவின் ‘மிகவும் தேடப்படும் நபர்கள்’ பட்டியலில் முதலிடம் பிடித்தவர் இவர். (கெஸ்டபோ என்பது ஜெர்மனியின் ரகசியப் போலீஸ் அமைப்பின் பெயர்). ஜெர்மனி காவல் துறையில் நான்ஸிக்கான ரகசியப் பெயர் ‘வெள்ளை எலி’ எப்படிப் பிடித் தாலும் எப்படியோ தப்பித்துவிடும் சாமர்த்தியம் கொண்டதால் உண்டான காரணப் பெயர்..

1957ல் போர் விமான ஓட்டி ஜான் ஃபார்வேடு என்பவரை மணந்துகொண்டு ஆஸ்திரேலி யாவுக்குச் சென்றார். அவர் இறந்த பிறகு இங்கிலாந்தை அடைந்தார். பிரான்ஸ் அரசு மிக உயர்ந்த ராணுவ மரியாதையை அவருக்கு அளித்தது. 2006ல் நியூசிலாந்து அரசும் அவரைப் பெரிய அளவில் கெளரவித்தது.

குழந்தை பிறக்காத ஏக்கம் அவர் மனதில் இருந்தது. அந்த ஏக்கத்துடனேயே இறந்தார் வேக். அவர் உடல் எரிக்கப்பட்டது. மத்திய பிரான்ஸ் பகுதியில் அவரது சாம்பல் தூவப்பட்டது. நிரந்தரமாக ஒரு நினைவகம் அவருக்குக் கட்ட வேண்டுமென்ற கோரிக்கைகளும் வலுப்பெற்று வருகின்றன.

இப்போது மீண்டும் நியூசிலாந் தின் சரித்திரத்தில் விட்ட இடத்துக்கு வருவோம். 1947ல் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றது நியூசிலாந்து. அடுத்த மூன்று வருடங்களில் கொரியன் போரில் நியூசிலாந்து ராணுவம் ஐ.நா. ராணுவத்தோடு இணைந்து பணியாற்றியது. 1960க் களில் அமெரிக்காவுக்கு ஆதரவாக வியட்நாமுக்கு தன் ராணுவத்தில் ஒரு பகுதியை அனுப்பியது. அது பெரும் விவாதத்திற்கு உள்ளானது.

1984ல் லேபர் அரசு தேர்ந் தெடுக்கப்பட்டது. பிரதமர் டேவிட் லங்கே பல புதிய பொருளா தாரச் சீர்திருத்தங்களை அறிமுகப் படுத்தினார். அணுசக்தி ஆயுதங் களைக் கொண்ட அமெரிக்கக் கப்பல்கள் தங்கள் நாட்டுத் துறைமுகங்களுக்கு வந்து சேரக் கூடாது என்பதில் அரசு தீவிரமாக இருந்தது. இதைத் தொடர்ந்து 1951ல் நியூசிலாந்துடன் தான் செய்து கொண்டிருந்த பசிபிக் பாதுகாப்பு ஒப்பந்தத்தை வாபஸ் பெற்றது அமெரிக்கா.

நியூசிலாந்தின் அரசியல் பக்கங் களில் சில குறிப்பிட்ட துளிகளைப் பார்ப்போம். 1997ல் ஜென்னி ஷிப்ளி நியூசிலாந் தின் முதல் பெண் பிரதமரானார். 2002ல் சமோவா என்ற பகுதியில் ‘நாற்பது ஆண்டு சுதந்திரம்’ கொண்டாடப்பட்டபோது பிரதமர் ஹெலன் கிளார்க் கடந்த காலத்தில் உள்ளூர் இன மக்களை நியூசிலாந்து அரசு சரியான விதத்தில் நடத்தாததற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்.

முதலாம் உலகப் போரில் பிரிட்டனுக்கு ஆதரவாக (வேறெப்படி இருக்கும்) ஜெர்மனிக்கு எதிராகப் போரிட்டது. 2004ல் அரசு செய்த ஓர் அறிவிப்பு மவோரி மக்களால் கடும் எதிர்ப்புக்கு உள்ளானது. கடல் படுகைகள் தேசியமயமாக்கப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு. இது நடைமுறைப் படுத்தப்பட்டால் தங்களது பாரம்பரிய உரிமைகள் பறிபோகும் என்று அச்சப்பட்டனர் மவோரி இனத்தினர். அரசின்மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தார்கள். ஆனால் பலனில்லை. அரசு இந்தத் தீர்மா னத்தைத் தாக்குபிடித்து வென்றது.

நியூசிலாந்து தொடர்பான வேறு சில சாதனைகள் மற்றும் வேதனைகளைப் பார்க்கலாமா?

2004 இறுதியில் தன்பாலின திரு மணத்துக்கு நியூசிலாந்து பாராளு மன்றம் அங்கீகாரம் அளித்தது. இந்தக் காலகட்டத்தில் நியூசிலாந்தின் பொருளாதாரம் தொடர்ந்து சரிவை சந்தித்தது. அதன் வேலையில்லாத் திண்டாட்ட சதவிகிதம் மிக அதிகமானது.

2011ல் மற்றொரு பேரதிர்ச்சி. நியூசிலாந்தின் இரண்டாவது பெரும் நகரமான கிரைஸ்ட் சர்ச் என்ற பகுதியில் ஒரு பெரும் நில நடுக்கம் உண்டாக, மக்களில் பலரும் மடிந்தனர். இந்த ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் தேசியக் கட்சி மீண்டும் வெல்ல, ஜான் கீ மூன்றாம் முறையாக பிரதமராகி இருக்கிறார்.

நியூசிலாந்தில் உள்ள உயர் நிலைப்பள்ளி மற்றும் பல்கலைக் கழக மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கல்வி நோக்கத்துக்காக ஒரு பவுண்ட் யுரேனியம் அல்லது தோரியம் (இவை கதிரியக்கம் மிக்கவை) வைத்துக் கொள்ள அனுமதி உண்டு. ஆனால் அது வெடித்து விட்டால் பத்து லட்சம் டாலர் அபராதம் செலுத்த வேண்டும்.

நியூசிலாந்தில் ‘90 மைல் கடற்கரை’ என்ற ஒன்று உண்டு. உண்மையில் இதன் நீளம் 90 கிலோ மீட்டர். நவீன பிளாஸ்டிக் சர்ஜரியில் முன்னோடியான டாக்டர் ஹரோல்டு கில்லியெஸ் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். நியூசிலாந்து சிறைகளில் உள்ளவர்களில் 95 சதவிகிதம்பேர் ஆண்கள். அந்த நாட்டில் அணுசக்தி நிலையங்களே கிடையாது.

குழந்தைகளுக்கு எந்தப் பெயரை வேண்டுமானாலும் வைத்துவிட முடியாது. தன் பெயர் விசித்திரமாக இருக்கிறது என்று ஒரு குழந்தை கருதினால் நீதி மன்றம் அந்தப் பெயரை மாற்றச் சொல்லும். கிறிஸ்துமஸ், தூய வெள்ளி, ஈஸ்டர் ஆகிய திருநாட்களில் தொலைக்காட்சிகளில் விளம்பரங் களுக்குத் தடை விதித்திருக்கும் நாடு நியூசிலாந்து.

கோல்டன் பே என்ற பகுதியில் உள்ளன சில நீரூற்றுகள். இவற் றிலிருந்து தினமும் சுமார் இரண்டு பில்லியன் லிட்டர் தண்ணீர் வெளி யேறுகிறது. அதாவது, தேவைப் பட்டால் மொத்த நியூசிலாந்துக்கும் இது குடிநீர் சப்ளை செய்ய முடியும். அதுமட்டுமல்ல அண்டார்டிகாவை விட்டுவிட்டால் உலகிலேயே மிகத் தூய்மையான, இயற்கையான தண்ணீர் கிடைப்பது இங்குதானம். இந்தத் தண்ணீருக்குள் பார்வையைச் செலுத்தினால் சுமார் 63 மீட்டர் ஆழம்வரை தெளிவாகப் பார்க்க முடிகிறதாம்.

‘லார்டு ஆஃப் தி ரிங்ஸ்’ தொடர் திரைப்படங்கள் நியூசிலாந்தில் படமாக்கப்பட்டன. இப்படி படமாக்க நியூசிலாந்து அரசு பெரிதும் உதவியது. படப்பிடிப்புக் குழுவின் தேவைகளை நிறைவேற்ற ஒரு தனி அமைச்சகத்தையே உரு வாக்கித் தந்தது. இதெல்லாம் வீண் போகவில்லை. அந்தப் படங்கள் வெளியான பிறகு நியூசிலாந்துக்கு வந்து சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மிகமிக அதிகமானது.

நியூசிலாந்தில் அழுத்தமாக நடந்து வரும் ஒரு மாற்றம் என்று குறிப்பிட்டோம். அது என்ன?.

(இன்னும் வரும்..)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x