Last Updated : 17 Nov, 2014 09:00 AM

 

Published : 17 Nov 2014 09:00 AM
Last Updated : 17 Nov 2014 09:00 AM

அமெரிக்க பிணைக் கைதி கழுத்தறுத்து கொலை: ஐ.எஸ். தீவிரவாதிகள் வெறிச்செயல்

அமெரிக்க பிணைக்கைதியை ஐ.எஸ். தீவிரவாதிகள் கொடூரமாக கழுத்தறுத்து கொலை செய்து அந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக சிரியா, இராக்கில் அமெரிக்க ராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது. அதற்குப் பதிலடியாக தங்கள் வசமுள்ள அமெரிக்க, பிரிட்டிஷ் பிணைக் கைதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கழுத்தறுத்து கொலை செய்து வருகின்றனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த நிருபர்கள் ஜேம்ஸ் போலே, ஸ்டீவன் ஸ்காட்லாப் பிரிட்டனைச் சேர்ந்த ஆலன் ஹென்னிங், டேவிட் ஹெய்ன்ஸ் ஆகியோரை ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு சிரச்சேதம் செய்து அந்த வீடியோக்களை இணையதளத்தில் வெளியிட்டனர்.

தற்போது ஐந்தாவது நபராக அமெரிக்காவைச் சேர்ந்த பீட்டர் கேசிங் (26) என்ற இளைஞரை அதே பாணியில் கழுத்தறுத்து கொலை செய்து வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்க ராணுவ வீரரான பீட்டர் கேசிங், இராக் முன்னாள் அதிபர் சதான் உசேனுக்கு எதிரான போரில் பங்கேற்றவர். அப்போது அந்தப் பிராந்தியத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை கண்டு வருந்திய அவர் ராணுவ பணியில் இருந்து விலகி தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினார்.

அதன்மூலம் சிரியாவில் உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு மருத்துவ உதவி, உணவு, உடை உள்ளிட்ட உதவிகளை வழங்கிவந்தார்.

2013 அக்டோபரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் அவரை கடத்திச் சென்றனர். அதன்பின் அவரை மதமாற்றம் செய்து அவரது பெயரை அப்துல் ரகுமான் என்று மாற்றினர். அவரைதான் தற்போது கொடூரமாக கொலை செய்து வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

முகமூடி அணிந்த ஜிகாதி ஜான் என்றழைக்கப்படும் ஐ.எஸ். தீவிரவாதி முன்பு பீட்டர் கேசிங் மண்டியிட்டு நிற்கிறார். அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசும் ஜிகாதி ஜான், சிரியா மீது வான்வழி தாக்குதல் தொடர்ந்தால் அமெரிக்கர்களின் தலைகள் உருண்டு கொண்டேயிருக்கும் என்று எச்சரிக்கிறார்.

16 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் பீட்டர் கேசிங் மற்றும் 16 சிரியா ராணுவ வீரர்கள் கழுத்தறுத்து கொலை செய்யப்படும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x