Published : 26 Aug 2017 10:07 AM
Last Updated : 26 Aug 2017 10:07 AM

உலக மசாலா: சுற்றுச்சூழலுக்கு ஏற்ற டூ இன் ஒன் குடை ரெயின்கோட்!

ழையில் இருந்து தற்காத்துக்கொள்வதற்குக் குடைகளும் ரெயின் கோட்டுகளும் பல ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருக்கின்றன. சமீபத்தில் சீனர்கள் குடையையும் ரெயின் கோட்டையும் இணைத்து, ‘umbrella raincoat’ ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். “குடையிலும் ரெயின் கோட்டிலும் இருக்கும் அசவுகரியத்தைப் போக்கவேண்டும் என்பதற்காகவே இது உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். குழந்தைகளும் இளைஞர்களும் இந்தப் புதிய பொருளை ஆர்வத்துடன் வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் விற்பனையில் இன்னும் குடைகளும் ரெயின்கோட்டுகளுமே முன்னணியில் இருக்கின்றன. இந்த ரெயின்கோட் குடையில் உடலின் மேல் பாகம் மட்டுமே மழையிலிருந்து காக்கிறது. இடுப்புக்குக் கீழே மழையில் நனையவேண்டியிருக்கிறது என்பது சாதகமான விஷயமாக இல்லை. ஆனால் இந்த ரெயின் கோட் குடையில் கைகளுக்கு வேலை இல்லை. ஜாலியாக மழையை ரசித்துக்கொண்டே நடந்து செல்லலாம். இது எடை குறைந்தது. மடக்கி வைத்துக்கொள்ளவும் முடியும். எவ்வளவு காற்று அடித்தாலும் குடையைப்போல் பறந்து செல்லாது. மட்கக்கூடியப் பொருளால் செய்யப்பட்டிருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை பயன்படுத்தும் விதத்தில் பல்வேறு அளவுகளிலும் வண்ணங்களிலும் கிடைக்கின்றன. எதிர்காலத்தில் குடையையும் ரெயின்கோட்டையும் தள்ளிவிட்டு, இது முதலிடத்தைப் பிடித்துவிடும்” என்கிறார் ஷான் வாங் என்ற வியாபாரி.

சுற்றுச்சூழலுக்கு ஏற்ற டூ இன் ஒன் குடை ரெயின்கோட்!

ஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வசிக்கும் 43 வயது சில்வியா ஹெஸ்ஸெட்ரெனியோவாவுக்கு 57 குழந்தைகள் இருக்கிறதாகச் சொல்கிறார்! இவற்றில் 2 குழந்தைகள் இவர் பெற்றவை. மற்றவை எல்லாம் இவர் உருவாக்கிய பொம்மைகள். நிஜக் குழந்தைகளைப் போலவே பொம்மைகளை உருவாக்குவதில் சில்வியா நிபுணராக இருக்கிறார். 40-வது பிறந்தநாளின்போதுதான் பொம்மைகளை உருவாக்க முடிவெடுத்தார். 3 ஆண்டுகளில் 55 பொம்மைகள் சேர்ந்துவிட்டன. கூடம், படுக்கையறை, படிப்பறை, சமையலறை, மாடி என்று வீடு முழுவதும் பொம்மைகள் காட்சியளிக்கின்றன. ஒவ்வொரு பொம்மைக்கும் பல்வேறு நாட்டு ஆடைகளை அணிவித்து அழகு பார்க்கிறார். சில பொம்மைகளை அழைத்துக்கொண்டு கடைகளுக்குச் செல்கிறார். சில பொம்மைகளை பிக்னிக் அழைத்துச் செல்கிறார். சில பொம்மைகளுடன் பேசுகிறார். இன்னும் சில பொம்மைகளுடன் உறங்குகிறார். சில பொம்மைகளுக்கு பியானோ வகுப்பும் எடுக்கிறார். “என் பொம்மைகளைப் பார்ப்பவர்கள் அவற்றின் நேர்த்தியிலும் அழகிலும் மயங்கிப் பாராட்டுவார்கள். பிறகு, இப்படி ஒரு அசாதாரணமான பொழுதுபோக்கு தேவையா என்றும் கேட்பார்கள். அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஒவ்வொரு பொம்மையும் பிரத்யேகமானது. ஒன்றைப்போல இன்னொன்று கிடையாது. பொம்மைகளைச் செய்ய ஆரம்பித்த பிறகு என் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக மாறிவிட்டது. எல்லோரும் சந்தோஷமான வாழ்க்கை அமைய வேண்டும் என்றுதானே போராடுகிறோம்? எனக்கு அது எளிதாகக் கிடைத்துவிட்டது. என்னைப் பற்றி யார் என்ன நினைக்கிறார்கள் என்று நான் யோசிப்பது இல்லை. என் மகள்களும் என்னைப் புரிந்துகொண்டு, பொம்மைகள் செய்வதில் உதவுகிறார்கள்” என்கிறார் சில்வியா.

பொம்மைகளைக் குழந்தைகளாக நினைக்கும் தாயுள்ளம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x